அறிவுஜீவிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்களை மெய்யாலுமே அறிவுஜீவியாய் படைத்ததை விட பெரிய தண்டனையை ஆண்டவன் இனிமேல் நினைத்தால்கூட தந்துவிட முடியாது. ஆனால் அறிவுஜீவி மாதிரி நடித்து தன்னையும் சித்திரவதை செய்துகொண்டு, மற்றவர்களையும் சித்திரவதை செய்கிறார்களே, அவர்களை என்ன செய்வது என்பது குறித்து பாமர ஜனங்கள் உடனே ’பொசோ’ மாநாடு மாதிரி ஏதாவது கூட்டினால்தான் நாம் மிஷ்கின் போன்றவர்களிடமிருந்து தப்பிப்பிழைக்க முடியும்.

குழப்பமாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இன்னும் ‘முகமூடி’ பார்க்காத,

கொடுத்துவைத்த புண்ணியவான்கள்.

‘முகமூடி’யின் பூஜையில் துவங்கி, ரிலீஸுக்கு மூன்று தினங்கள் முந்தி வரை, படத்தின் தயாரிப்பு இன் சார்ஜ் தன்ஞ்செயனும், இயக்குனர் மிஷ்கினும், படம் பற்றி பீத்திய பெருமைகளைக் கேட்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

‘ஜீவாவுக்கு தயார் பண்ணின முகமூடி’ய இதுவரைக்கும் உலக சினிமா பார்த்ததில்லை. அதைப்போட்டு அவர் நடிச்சப்ப, யுனிவர்சல் லெவல்ல வேற யாருக்கும் இந்த அளவுக்கு வேர்த்ததில்லை.

ஃபைட்டுக்கு மட்டும் சைனாவுலருந்து, புரூஷ்லீயை புதைச்ச இடத்துலருந்து தோண்டி எடுத்துட்டு வந்தோம். வில்லன் நடிப்புல நரேன், 120 ஃபீட் கிரேன் அளவுக்குப் போயிட்டார்.

இப்படி வகைதொகையில்லாமல் மீடியாக்காரர்களிடம் பூ சுற்றினார்கள் இருவரும்.

கதை என்னவென்று சொன்னால் அடிக்கவருவீர்கள். உங்களுக்கும், எனக்குமிடையில் சட்டை கிழியுமளவுக்கு சண்டை வரும். ஆனால் என்ன செய்வது வடிவேலு பாணியில் சண்டையில கிழியாத சட்டை ஏது என்று வழக்கம்போலவே சமாதானமாகப்போகவேண்டியதுதான்.

கதாநாயகன் ஜீவா, வழக்கம்போல வேலவெட்டி, வெட்டிவேல எதுவும் இல்ல்லாத தண்டச்சோறு. அப்பா எப்போதும் அவரை கரித்துக்கொட்டினாலும், வீட்டில் இருக்கிற இரண்டு தாத்தாச்சோறுகள் அவரை சப்போர்ட் பண்ணுகிறார்கள்.

அவர் செல்வா மாஸ்டரிடம் குங் பூ கற்றுக்கொள்கிறார்.

சென்னைப்போலீஸை வெண்ணையாக நினைத்து, நரேன் என்ற முகமூடி கொள்ளைக்காரன் கொலை, கொள்ளை என்று அட்டகாசம் புரிகிறான்.

இதைத்துப்புத்துலக்குவதற்காகவே நியமிக்கப்படும் கமிஷனர் நாசர், கையைப்பிசைந்துகொண்டு நிற்க, பஞ்சத்து முகமூடி ஜீவா, பரம்பரை முகமூடி நரேனின் கதையை முடிக்கிறார்.

இடையில் மானே, தேனே, பொன்மானே போட்டுக்கிற மாதிரி, லவ் டூயட், குழந்தைகள் கடத்தல், பார் சாங் போன்ற சகல கண்ராவிகளும் உண்டு.

சரி, ஜீவா நரேனோட கதையை முடிச்சது இருக்கட்டும், நீங்க இன்னும் படத்தோட கதையை சொல்லவேயில்லையே? என்று கேட்கவிரும்புபவர்கள், டிஸ்கசன் என்ற பெயரில் பல லட்சங்கள் பில்லைப்போட்ட மிஷ்கினின் சட்டைக்காலரைப்பிடிக்கவும். படத்துல கதைன்னு ஒண்ண அவரே சொல்லாதப்ப, நான் ஏன் சொல்லனும்?

இதில் இன்னும் வெறி ஏத்தும் இன்னொரு தகவலை விட்டுவிட்டேன். படத்தின் நாயகி பூஜா, கமிஷனர் நாசரின் பொண்ணு என்று புதுசாய் சீன் பிடித்திருக்கிறார்கள்.

‘முகமூடி’ என்றாலே நைட் எஃபெக்ட் தான் சரியாக இருக்கும் என்று, வேறொரு ’எஃபெக்டில்’ இருந்தபோது மிஷ்கின் எடுத்த முடிவின் விளைவாக, படம் முழுக்க கையில் தீப்பெட்டி கூட நள்ளிரவில் ஆளில்லாத முட்டுச்சந்தில், மாட்டிக்கொண்ட அவஸ்தை. கேமரமேன் சத்யா, கூலிங் கிளாஸ்மேன் மிஷ்கினோட தொடர்ந்து வேலை செய்யிறது ஆபத்யா.

இசை கே. பார் சாங் தவிர்த்து படம் மொத்தமும் ஒரே ஜார்ராக இருக்கிறது. தமிழில் ‘கோ’ என்றால் அரசன் என்று ஒரு அர்த்தம் இருப்பது மாதிரி ‘கே’ என்றால் கேட்கக்கூடிய இசை என்று எழுத ஆசையாக இருக்கிறது. ஓ.கே சொல்லும்படி என்றாவது நிறைவேற்றுவீர்களா கே?

முகமூடியை அணிந்து நடித்ததன் மூலம் இந்தப்படத்தில் , ஜீவாவுக்கு அவரது ‘ஜாவா’ அடிவாங்கியதுதான் மிச்சம்.

நாயகி பூஜா ஹெக்டே. கொத்தவரங்காய்க்கு கைகால், மற்ற சமாச்சாரங்கள் முளைத்தவர் போலவே இருக்கிறார்.

இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று எழுதினால், வேறு யாரோ நடித்திவிட்டார்கள் போல என்ற தப்பர்த்தம் வந்துவிடும் என்பதால், அதை நாம் தவிர்க்கிறோம்.

நாசர்,கிரீஷ் கர்னாட், செல்வா மற்றும் டைட்டில் கார்டில் இடம் பெற்ற சில சைன டெக்னீஷியன்கள் விழலுக்கு இறைத்த வெந்நீர்.

‘சித்திரம் பேசுதடி’ அஞ்சாதே’ போன்ற சுமாரான படங்களை இயக்கிய மிஷ்கின் கழுதை தேய்ந்து மிஷ்கின் ஆன கதையாக, யுத்தம் செய்’ நந்தலாலா ‘ வழியாக இறங்கி, இனி வெளியே தலை காட்ட முடியாமல் தனக்குத்தானே முகமூடி’ போட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலைமைக்கு கொண்டுவந்திருக்கும் படம்.

ஒரு கொடூர பின் குறிப்பு:

எப்படிப்பட்ட விபரீதங்களும் அரங்கேறக்கூடிய இடம் கோடம்பாக்கம். ஆகையால் இதற்குப்பிறகும் ஏதாவது ஒரு தயாரிப்பாளர், மிஷ்கினுக்குப் படம் தர முயற்சிக்கும் நிலையில், அந்தத்தயாரிப்பாளருக்கு தமிழ் சமூகம் வேண்டிவிரும்பி வைக்கும் மூன்று கோரிக்கைகள்.

  1. சி.டி. டி.விடி. போன்ற ரவுண்ட் சைஸில் இருக்கும் எதையும் மிஷ்கின் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனது உதவியாளர்கள் மூலமாகவோ தீண்டக்கூடாது.
  1. தயவு செய்து கதைகேட்கும் முன்பே வரிடம் இருக்கும் கூலிங் கிளாஸை பறிமுதல் செய்து, படம் ரிலீஸான மறுநாள் தான் திருப்பி தரப்படும் என்று அட்லீஸ்ட் பத்துரூபாய் பாண்ட்பேப்பரில் எழுதிவாங்குங்கள்.
  1. படம் துவங்கி முடியும் வரை ‘ஸ்டார்ட், கட்’ சொல்வது, சாப்பிடுவது தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கக்கூடாது.

ஆமென்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.