‘நீ.எ.பொ.வ’ . பாடல்வெளியீட்டுவிழாவில் ராஜா ஏற்கனவே செம குஷிமூடில் இருக்க, அதை இன்னும் உச்சத்துக்கு கொண்டுசென்றார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.
‘புடிக்கைலை மாமு, படிக்கிற காலேஜ்’ என்ற முதல் பாடலை அறிமுகப்படுத்த மேடையேறிய சந்தானம், இசைஞானியின் பாதங்களைத்தொட்டு வணங்கி, தான் எப்படி இவ்வளவு உயரம் வந்தோம் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தினார்.
நகைச்சுவையுடனும், ராஜாவைப்பற்றி பேசும்போது சற்று உணர்ச்சி வசப்பட்டதும், ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தபோதும், அவர் ஒரு நல்ல சங்கீத ரசிகர், அதுவும் ராஜாவின் தீவிர ரசிகர்களுல் ஒருவர் என்பதை அறிய முடிந்தது.
‘’காலேஜ் படிக்கிற சமயங்கள்ல எங்களுக்கு எல்லாத்துக்குமே ராஜா சார் பாட்டுதான் வேணும். மொழி தாண்டின சங்கீதம் ராஜா சாரோடது. ஒரு சமயம் டைப்ரைட்டிங் கிளாஸ்க்கு போய்ட்டிருக்கேன். எதிர் ஜன்னல்ல ஒரு தெலுங்குப்பொண்ணு. உடனே என் ஃப்ரண்டுகிட்ட கேட்டேன். டேய் தமிழ்ப்பொண்ணா இருந்தா ராஜா சார் பாட்டை பாடி உஷார் பண்ணலாம். இது தெலுங்கா இருக்கே. என்னடா பண்றது? உடனே அவன் சொன்னான். ’மாமா டென்சனாகாத. ராஜா சாரோட பெரும்பாலான பாட்டு தெலுங்குலயும் இருக்குன்னு சொல்லி, கடலோரக்கவிதைகள்’ தெலுங்குப்பாட்டு கேசட் குடுத்தான்.
அதைக்கேட்டுட்டு மறுநாள், ‘கொடியில்லு, மல்லிகைப்பூவுலு, மனசைத்தான் மயக்குதுலு’ என்று பாட ஆரம்பிக்க, ஜன்னலுக்கு குறுக்கே புகுந்த அந்தப்பொண்ணொட அப்பா, பதிலுக்கு எசைப்பாட்டு ஒண்ணு பாட ஆரம்பிக்க எடுத்து வுட்டேன் பாருங்க ஒரு ஓட்டம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே, கவுதமிடமிருந்து மைக்கை கேட்டு வாங்கிய ராஜா, ‘ லவ் பண்றது நீங்க. மாட்டி விடுறது எங்க பாட்டை’ என்று கமெண்ட் அடிக்க, மொத்த ஆடிட்டோரியமும் அதிர்ந்தது.
ராஜாவின் ஜாலியான மூடைப்பார்த்து மேலும் உற்சாகமாகிப்போன சந்தானம்,’’ எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து ராஜா சார் பாட்டைக்கேக்காத நாளே கிடையாது. கோயிலுக்குப்போறோமோ இல்லையோ, அம்மா, அப்பாவை கும்பிடுறோமோ இல்லையோ, தினமும் ஒருவாட்டி ராஜா சார் பாட்டக்கேட்டாலே பெரிய புண்ணியம். அப்பிடி அவரோட திருவாசகத்தை கேக்காம நான் வீட்டைவிட்டு ஷூட்டிங் கிளம்பிப்போனதே கிடையாது.’’ என்ற போது பலத்த கர்வத்துடன் கைதட்டினார்கள் ராஜபக்தர்கள்.