பாரதி, இளைய ராஜா கூட்டணியின் ‘என் உயிர்த்தோழன்’[ 1990] வெளியான சமயத்தில், ராஜாவின் குரலிலேயே சதா உச்சரித்துக்கொண்டு திரிந்த பாடல் ‘மச்சி மன்னாரு, மன்சுக்குள்ள பேஜாரு’. அப்போதே வந்திருக்கவேண்டிய ‘மன்னாரு’ சுமார் 22 வருடங்கள் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார்.
’அழகர்சாமியின் குதிரை’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான
தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டி தனி ஹீரோவாக சவாரி செய்து வந்திருக்கும் படம்.
போஸ்டர் டிசைன்களை பார்க்கிறபோது, இந்த மூஞ்சிக்கு இவ்வளவு லட்சணமான பொண்ணு ஜோடியா? கதை வெளங்குன மாதிரிதான் என்ற எண்ணத்தில்தான் தியேட்டருக்குள் நுழைவோம்.
ஆனால் கதாநாயகன், அப்புக்குட்டி, கதாநாயகி ஸ்வாதி. ஆனால் இவர்கள் இருவரும் காதலர்கள் இல்லை என்று ஒரு புதுவிதமான சுவாரசிய முடிச்சுடன் கதையைத்துவங்குகிறார் புதுமுக இயக்குனர் ஜெய்சங்கர்.
ஸ்வாதியை, ரெஜிஸ்தர் கல்யாணம் செய்யப்போகும் தனது நண்பனுக்கு சாட்சிக் கையெழுத்து போடப்போகிறார் மூணாங்கிளாஸே படித்த அப்புக்குட்டி. கல்யாண ஜோடி பஸ் பிடித்து கொடைக்கானலுக்கு தப்ப எத்தனிக்கும்போது, வில்லன் கோஷ்டி வந்துவிட, ஸ்வாதியையும்,அப்புக்குட்டியையும் மட்டும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு ‘தப்பிச்சிப்போங்க.அடுத்த பஸ்ல வந்துடுறேன்’ என்கிற மாப்பிள்ளை வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார்.
இதையடுத்து, ஒரு ரூம் எடுக்கிற சிரமத்தில் தொடங்கி, ஒரு பேச்சுக்காக புருஷன் -பொண்டாட்டி என்று பொய் சொல்ல ஆரம்பிக்கும் அப்புக்குட்டி,ஸ்வாதி ஜோடி, தொடர்ந்து அவ்வாறே பல நாட்களை கடக்கவேண்டிய சூழலில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் ‘மன்னாரு’
சமீபத்தில் வெளிவந்த ‘முகமூடி’ போன்ற பெரும்பட்ஜெட் குப்பைகளோடு ஒப்பிட்டால், இவரு மச்சி மன்னாரு என்றே சொல்லலாம். கதை நடக்கும் கிராமத்தின் பாத்திரப்படைப்புகளில் சற்றே கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
மற்றபடி, டெக்னிக்கலாக,’மன்னாரு’ ஒரு இருபது வருடங்கள் பின் தங்கி இருப்பதை மறுக்கமுடியாது. இசையமைப்பாளர் உதயன் ராஜாவின் டியூன்களையும், பின்னணி இசையையும் உரிமையோடு உருவியிருக்கிறார்.
பஸ்ஸில் அப்புக்குட்டியை ஏற்றிவிட்ட ஸ்வாதியின் காதலர், அவருக்குப்பதில் தானே ஓடிப்போய் ஏறி இருந்தால், முதல் ரீலிலேயே படத்தை முடித்து இன்னும் நல்லபெயர் வாங்கியிருக்கலாம்.
கிராமத்து தலைவராக வரும் தம்பி ராமையா சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். தனது உதவியாளரான இயக்குனருக்கு பாடல்கள், வசனம் எழுதி உதவி பல இடங்களில் சிந்திக்க வைக்கிறார். [என்னத்தை சிந்திக்கவைத்தார் என்பது படம் பார்த்தால் ஒருவேளை விளங்கலாம்.]
கதையின் நாயகனாக அப்புக்குட்டி வெகு இயல்பாக பொருந்திப்போகிறார்.
‘ராட்டினம்’ நாயகி ஸ்வாதி கொழுக்மொழுக்கென்று இருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிக்க வந்து, கைவசம் அரையடி உயர ஹைகீல்ஸ்களை வைத்துக்கொண்டால் சின்னதாக ஒரு ரவுண்ட் வரும் வாய்ப்புண்டு.
கதாநாயக லட்சணங்கள் எதுவும் இல்லாத அப்புக்குட்டியை வைத்து, இயக்குனரு மினிமம் பட்ஜெட்டில் மினிமம் சுவாரசியத்தோடுதான் கதையை சொன்னாரு. ஆனா புதுசா என்ன பண்ணாரு என்று யோசிக்க ஆரம்பித்தால் அப்புறம் பேஜாருதான்.