‘ஒரு இயக்குனர் நடிகராகுறப்போ அதை ஈஸியா எடுத்துக்குறவங்க, ஒரு நடிகன் இயக்குனராகப்போ, நம்மளை நோக்கி வீசுறதுக்காக ஆயிரம் அம்புகளை கூர்தீட்டி காத்திருக்காங்க’ என்று வம்பு இழுப்பவர் நடிகர் இ.வி.கணேஷ்பாபு.
பாரதி’ ஆட்டோகிராஃப்’ மொழி’ சிவகாசி’ போன்ற 40க்கும் மேற்பட்ட படங்களில் குட்டி,மீடியம்,மற்றும் மேக்சிமம் சைஸ் பாத்திரங்களில் நடித்த கணேஷ்,
தனது 15 வருட சினிமா போராட்டத்தின் உச்சக்கட்டமாக ‘யமுனா’ என்ற படத்தை இயக்கிமுடித்திருக்கிறார்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் நடிப்புப் பயிற்சி பட்டறையில் பயின்ற சத்யா என்ற மாணவன் நாயகனாக அறிமுகமாக, ‘1940 லோ ஒக கிராமம்’ என்ற தெலுங்குப்படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே மொட்டை அடித்து, [தயாரிப்பாளருக்கு அல்ல ] சிறந்த நடிகைக்கான நந்தி அவார்டை வென்ற ஸ்ரீரம்யா நாயகியாக தமிழில்’யமுனா’வாக அறிமுகம் ஆகிறார்.
‘’என்னை நடிகராக பார்த்தே பழக்கப்பட்டவர்கள் இயக்குனராகிவிட்டேன் என்றதும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த அதிர்ச்சியில் நீயெல்லாம் டைரக்டராகி ? என்ற நக்கலும், படம் வந்ததும் உன் வண்டவாளம் தெரியத்தானே போகுது ? என்ற குத்தலும் பொதிந்திருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
அதை மனதில் வைத்து வெகு கவனமாக,ஜனரஞ்சகமாக, நான் யமுனா’வை இயக்கியிருக்கிறேன்’ என்கிறார் கணேஷ்.
தனது மாணவன் ஹீரோவானதால் வாழ்த்து தெரிவித்துவிட்டு, பேச ஆரம்பித்த பாலுமகேந்திரா, திடீரென்று வாலு’மகேந்திராவாக மாறி சினிமா விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களை ஒரு கடி கடித்தார்.
‘’ சினிமா விமர்சன்ங்களை எல்லாம் இப்ப படிக்கிறதேயில்லை. ஒளிப்பதிவை பத்தி உங்களுக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் ’கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இதையே எத்தனை வருஷமா எழுதுவீங்க? அடுத்து ஒரு முக்காப்பக்கத்துக்கு படத்தோட கதையை எழுதுவீங்க. விமர்சனம்ங்கிற பேர்ல உங்களுக்கு வேற என்னதான் தெரியும்? என்று கிழித்து,அறுத்து தொங்கவிட்டார்.
வாலு சார், உங்களோட அடுத்த படம் எப்ப ரிலீஸாகுது சார். வேற மாதிரி ஒரு விமர்சனம் எழுதனும்னு கை இப்பவே அரிக்குது சார்.