நாளைமுதல் ரிசர்வேசன் என்று விளம்பரம் செய்யப்பட்டு, வரும் வெள்ளியன்று ரிலீஸாவதாக இருந்த இயக்குனர் சசிக்குமாரின் ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்கு அமரர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.ரகு தடை வாங்கியுள்ளார்.
இந்த டைட்டில் பஞ்சாயத்து கொஞ்சம் பழசுதான் என்றாலும், இப்படி கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்
பலரையும் அதிர வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, ‘தயாரிப்பாளர் சங்கம் ‘சுந்தரபாண்டியன்’ டைட்டிலை நாங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது’ என்று சசிக்குமார் ஆணித்தரமாக பதிலளித்தார். அப்படி அவர் பேசிய சமயம், பழைய சுந்தரபாண்டியருக்கு ஒரு சின்ன செட்டில்மெண்ட் பண்ணினால் சைலண்டாகி விடுவார்கள் என்று கணக்கு போட்டிருந்தாராம் சசி.
ஆனால், அதற்கு தயாராகி, சசியை அவரது அலுவலகத்தில் சந்திக்க எம்.ஆர்.ஆர். ரகு வந்தபோது, ‘யாரக்கேட்டு அப்பாயின்மெண்ட் வாங்காம சசி சாரைப் பாக்க வந்தீங்க? அவர் இன்னைக்கு இண்டஸ்ட்ரியில எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அமீரும், பாலாவுமே கூட அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம அவரப்பாக்க வர்றதில்லை’’ என்று அவரை பெருமளவு இன்ஸல்ட் பண்ணி அனுப்பிவைத்தார்களாம்.
இதுதொடர்பாக ராதாரவி பலமுறை சசியை தொடர்புகொள்ள முயன்ற போதும் சசி பிடிகொடுக்கவேயில்லையாம்.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டே இந்த கடைசி நிமிட கழுத்தறுப்பு நடந்தது என்கிறது சசியின் வட்டாரம்.
ஏற்கனவே துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, வாலு, ‘தாண்டவம்’ போன்ற படங்களுக்கும் டைட்டில் பஞ்சாயத்து நடந்துவரும் நிலையில், ரிலீஸ் போஸ்டர்களே ஒட்டிமுடிக்கப்பட்ட நிலையில் கிளம்பியிருக்கும் ‘சுந்தரபாண்டியர்கள்’ பஞ்சாயத்துக்கு கிடைக்கும் தீர்ப்பு, இதற்கான ஒரு நிரந்தர தீர்வாக இருந்தால் அனைவரும் மகிழ்வார்கள்.