கதையைச் சுட்டகதையை மறைப்பதற்காக, ஒரிஜினல் கதை என்பதுபோல ’ஒரு கதை’ விடுவார்களே அதில் நம்ம டமில் சினிமா இயக்குனர்களை அடித்துக்கொள்ள ஹாலிவுட் வரை ஆள் கிடையாது.
சிலவாரங்களுக்கு முன் ‘மாற்றான்’ கதையை, தாய்லாந்து ஃப்ளைட் ஒன்றில் பயணம் செய்தபோது பிரசவ வலி ஏற்பட்டது என்று கே.வி.ஆனந்த் ரீல் விட்டது போல, இன்று மதியம் ‘தாண்டவம்’ இயக்குனர் விஜய், இங்கிருந்து அமெரிக்கா நீளத்துக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒரு கதை அளந்தார்.
இன்று மதியம்ரெசிடன்ஸி டவர்ஸ் ஓட்டலில் ‘தாண்டவம்’ படத்துக்கான ஒரு திடீர் பிரஸ்மீட் நடந்தது.
‘தாண்டவம்’ கதை உதவி இயக்குனர் பொன்னுச்சாமியிடமிருந்து திருடப்பட்டது என்று நிரூபணமான பிறகு, அதை திசை திருப்புவதற்கென்றே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரஸ் மீட்டில், யூ.எஸ்.சிலிருந்து வரவழைக்கப்பட்ட, பார்வையற்றவரான கிரிஷ் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
‘தாண்டவம்’ கதை ‘தெய்வத்திருமகள்’ முடியும் முன்பே, தனக்கு சினை கட்டியிருந்ததாகவும், அதை அப்போதே விக்ரமிடம் சொல்லி, அவர் வியந்து, கேமராமேன் நிரவ் ஷாவிடம் சொல்லி, அவர் அயர்ந்து, தயாரிப்பாளர் தன்ஞஜ்செயனிடம் சொல்லி அவர் பயந்து [வேற யாரும் காப்பி அடிச்சிடப்போறாங்களோன்னு ] இப்படி என்னென்னவோ ஆனதாம்.
அதன் தொடர்ச்சியாக, நிரவ் ஷா கொடுத்த தகவலின் படி, அமெரிக்காவில் வசித்த ’echo location’ வல்லுநர் கிரிஷை சந்தித்து, அவர் மூலம் விக்ரமுக்கு பயிற்சியளித்து படத்தில் பயன்படுத்திக்கொண்டதாகவும், அதை பத்திரிகையாளர்களிடம் கிரிஷை வைத்தே சொல்லச்சொல்லிவிட்டால் மேற்கொண்டு கதைத்திருட்டு பஞ்சாயத்துகள் வராமல் இருக்கக்கூடும் என்பது விக்ரம், தனஞ்செயன், விஜய் ஆகிய முக்கூட்டு களாவாணிகளின் திட்டம்.
பிரஸ்மீட்டில், மிக வெவரமாக கிரிஷ் தவிர, வேறு யாரிடமும் நிருபர்கள் கேள்விகேட்க வாய்ப்பு தராததால் கதைத்திருட்டு பற்றி யாரும் கேள்வி கேட்கமுடியவில்லை.
ஆனால் ஒரு சின்ன திருட்டை மறைக்க, எவ்வளவு காஸ்ட்லியான நாடகம் ஆடுகிறார்கள்? என்ற கமெண்டை அந்த ஹால் முழுக்க கேட்க முடிந்தது.