‘குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக்கூடாது’ படத்தின் நாயகனும், தயாரிப்பளருமான சசிக்குமார் படத்தின் இறுதியில் அடித்திருக்கும் பஞ்ச் டயலாக் இது.
குத்துபவன் எப்படி நண்பனாக முடியும்? நண்பனாக இருப்பவனால் குத்த முடியுமா? குத்தின உடனோ, அல்லது கொஞ்சநேரம் கழித்தோ எப்படி செத்தாலும், செத்த பிறகு வெளியே எப்படி சொல்லமுடியும்?
இன்னும் புரியும் படி, விசு பாஷையில் சொல்வதானால்
’கத்தினா குத்துவேன். குத்துனா கத்துவேன்’. இதுதான் ’சுந்தரபாண்டி’ படம் சொல்லவரும் சேதி.
ஊர்க்குமரிகளைவிட, கிழவிகள் அதிகம் காமம் கொள்ளும், கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார்.கிராமத்து மைனர்களுக்கே உரிய பந்தாக்களுடன் அலையும் அவருக்கு பஞ்சபாண்டவர்கள் என்ற பெயரில் ஐந்து நண்பர்கள்.
அதில் ஒரு நண்பர் கதாநாயகி லட்சுமி மேனனை காதலிக்க, அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க கிளம்பும் சசிக்குமாரை லட்சுமிக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அந்த நண்பருக்கும் முந்தியே காதலைச்சொல்லியிருந்தாராம் சசி.
இதே லட்சுமிக்கு லவ்ஸ் விட்டுக்கொண்டிருக்கும் அப்புக்குட்டி, சசிக்கும் லட்சுமிக்கும் காதல் கன்ஃபர்ம் ஆனபிறகும் தன் காதலை வாபஸ் வாங்க மறுக்கிறார். இதை ஒட்டி ஏற்படும் கைகலப்பில், பஸ்ஸிலிருந்து கீழே தள்ளப்படும் அப்புக்குட்டி இறந்துவிட, நம்ம பவர்ஸ்டார் பாணியில் 15 நாள் ஜெயிலுக்குப்போகிறார் சசிக்குமார்.
இதற்கிடையில் லட்சுமியை அவரது முறை மாப்பிள்ளைக்கு கட்டிவைக்க ஏற்பாடு நடந்து, பிற்பாடு அது வாபஸ் வாங்கப்பட்டு, லட்சுமி சசிக்கே என்று முடிவுக்கு வரும்போது நம்மைச்சேர்க்காமல், ஐந்து நண்பர்களில் மூன்றுபேர் எதிரிகளாய் மாறிவிடுகிறார்கள்.
அவர்கள் மூவரும் சேர்ந்து சசியை அத்துவானக்காட்டுக்கு அழைத்துச்சென்று, கர்ணகொடூரமான ஆயுதங்களால் தாக்க,மரணத்தின் விளிம்புக்குச்சென்று,மறுநிமிடமே, களிம்பு தடவியபடி எழுந்துவரும் சசி, அவர்கள் மூவரையும் நையப்புடைத்து நட்பின், அருமையை நாக்கைப்புடுங்குகிற மாதிரி சொல்லிவிட்டு நடையைக்கட்டுக்கிறார்.
ஒரு கதையாகப் பார்க்கும்போது ஏற்கனவே பலபடங்கள் அரைத்த மாவுதான் என்கிறபோதும் பல சுவாரசியமான காட்சிகளால், புதிய வரவு, இயக்குனர் பிரபாகரன் நம்மைக் கட்டிப்போடுகிறார். அதிலும் படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை, குறிப்பாக பரோட்டா’ சூரியும் அப்புக்குட்டியும் அசத்துகிறார்கள்.
ஒரு நல்ல தயாரிப்பாளராக, நல்ல கதையையும், நல்ல இயக்குனரையும் தேர்ந்தெடுத்த சசிக்குமார், ஒரு நடிகராக சகிக்கமுடியாத குமாராகவே இருக்கிறார். ஓவர் அலட்டலும், தன்னை ரஜினி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிக்கொண்டு ஆடியன்ஸுக்கு அடிக்கடி லுக்கு விடுவதும் ஸாரி கொஞ்சம் ஓவர். இந்த குரங்கு சேட்டைகள் தொடர்ந்தால் அடுத்த டி.ராஜேந்தர் ஆகிவிடும் ஆபத்தும் கூட அவருக்கு இருக்கிறது.
நாயகி லட்சுமி மேனன் பெயருக்கு ஏற்ற லட்சணமான மீன். பெண் கேட்டு வந்த மாமனார் குடிக்க தண்ணீர் கேட்டவுடன், கண்ணீருடன் கொண்டுவந்து தரும்போதும், பிடிவாதக்கார அப்பா காதலுக்கு ஓ.கே. சொன்னவுடன் அவரைக்கட்டிப்பிடித்து அழும்போதும் வாங்க ‘குட்டி ரேவதி’.
ஒளிப்பதிவு ச. பிரேம்குமார். உங்க ஃப்ரேம் சுமார்.
இசை ரகுநந்தன். முதல்பாதி முழுக்க அட்மாஸ்பியர் என்ற பெயரில் ‘சுப்பிரமணியபுரத்தில் போட்ட மாதிரியே இசைஞானியின் பாடல்களைப்போட்டு ஜல்லியடித்திருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் ரகுநந்தன் தன்பங்குக்கு சொந்தமாக ஏதோ முயற்சித்திருக்கிறார். அதிலும் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸின் வாசனை இருந்துகொண்டே இருக்கிறது.
மீண்டும், கொஞ்சம்காதல், கொஞ்சம்நட்பு, இன்னும் கொஞ்சம் தூக்கலாய்துரோகம் என்று கொஞ்சம் ’சுப்பிரமணியபுரம்’., கொஞ்சம் ‘நாடோடிகள்’ கலந்து ‘சுந்தர ’பாண்டி’ ஆடியிருக்கிறார்கள். இருந்தாலும் கொஞ்சம் சுவாரசியமான சுவாரசியமான ஆட்டம்தான்.
மொத்தத்தில் நம்ம சுந்தரபாண்டி ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’.