தனது கதையைத்திருடி, ’தாண்டவம்’ எடுக்கப்பட்டது உறுதியானது என்று தெரிந்தும், நீதி வழங்காத இயக்குனர் சங்கத்தின் முகத்தில் கரியைப் பூசுவதற்காக, கோர்ட் படி ஏறினார் உதவி இயக்குனர் ‘தாண்டவம்’ பொன்னுச்சாமி.
‘தாண்டவம்’ படத்தின் கதையை, தன்னிடமிருந்து, யூ.டி.வி. தனஞ்செயன், இயக்குனர் விஜய், நடிகர் விக்ரம் ஆகிய மூவரும் கூட்டுக்களவாணிகளாக சேர்ந்து திருடி விட்டார்கள் என்று உதவி இயக்குனர் பொன்னுச்சாமி புலம்பி வருவது பல மாதங்களாக நடந்து வரும் கதை.
இதை பல நாட்களாக, பல்வேறு கோணங்களில், விசாரித்து வந்த இயக்குனர் சங்கம், பொன்னுச்சாமியின் பக்கம் நியாயம் இருக்கிறது, எனவே அவருக்கு படத்தில் டைட்டில் கார்டில் பெயர் போடுவதோடு, ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று முடிவெடுத்ததாகவும், அந்த முடிவைத் தெரிந்துகொண்ட மூன்று திருடர்கள், முழு மூச்சாக களத்தில் இறங்கி ஆட்டையைக் கலைத்ததாகவும் தெரிகிறது.
இந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியாக, தீர்ப்பு எதுவும் சொல்லாமலே தனது சங்கம் இழுத்தடித்து வருவதை சற்று தாமதமாக புரிந்துகொண்ட பொன்னுச்சாமி, வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாகிவிட்டால், கதைத்திருட்டைப் பற்றி தனக்குத்தானே கூட பேசிக்கொள்ளமுடியாத சூழல் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்து, வேறுவழியின்றி கடந்த வெள்ளியன்று நீதி கேட்டு, தாண்டவம்’ படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட் வரும் செவ்வாயன்று விசாரணையை துவங்குகிறது.
இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் பொன்னுச்சாமியை கழுத்தறுத்து விட்ட நிலையில், உதவி இயக்குனர்கள் சிலரின் வீறுகொண்ட ஆதரவுடன் தான் கோர்ட்டுக்குப் போகவே துணிந்தாராம் பொன்னுச்சாமி.
நாமும் ஒரு காலத்தில் உதவி இயக்குனராக இருந்துதான் இயக்குனராகவே ஆனோம் என்பதை, எப்போதும் போலவே, சவுகர்யமாக இயக்குனர்கள் மறந்து விட்டு, இப்படி மனசாட்சியை பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைப்பது, தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிய காட்சி இல்லையே?