வடக்கு ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடைப்பட்ட மொராக்கோவில் துல்லியமாக குறிப்பிடமுடியாத ஒரு மலைக்கிராமம். சுற்றிலும் மலைகள் என்று சொல்வதைவிட பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கினுள் அமைந்திருக்கும் ஊர்.
வீட்டுக்குத்தேவையான தண்ணீரைச் சேகரித்துக் கொண்டுவரும் பொறுப்பு மூன்றாம் உலக நாடுகள் எங்கும் பெண்களின் கடமையாக இருப்பது போலவே, அங்கும். தண்ணீர் கொண்டுவர குண்டும் குழியுமான மலைப்பாதையில் சில கிலோமீட்டர்கள் கால்நடையாகச் செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் நால்வர் ஐவராக பேசிக்கொண்டே
நடந்துசென்று இரண்டுவாளிகளில் பிடித்த தண்ணீரை நீண்ட கழியின் இருமுனைகளில் தொங்கவிட்டவாறு மலைப்பாதையில் இறங்கிச் செல்கிறார்கள்.
அன்றும், தண்ணீரைத் தெளித்து விளையாடிவிட்டு, அவரவர் வாளிகளைத் தூக்கிக்கொண்டு இறங்குகையில் கால் இடறி தடுமாறி விழுகிறாள் இளம் கர்ப்பிணி ஒருத்தி. மற்றபெண்கள் பதட்டத்துடன் அவளைச் சூழ்ந்து நிற்கவும், கலைந்த கரு குருதியாக கால்வழியாக மண்ணில் சொட்டுகிற அதே நேரத்தில் ஊருக்குள் ஒரு பெண்ணுக்குப் பிரசவச் சடங்குகள் நடக்கிறது. மூதியவர்களாக சேர்ந்து செய்யும் பாரம்பரியமான பிரசவம். இதற்கிடையே எதைப்பற்றியும் கவலையில்லாமல், வேலையில்லாத ஆண்கள் ஊரின் ஒரே தேநீர்க்கடையில் தேநீர் குடித்தபடி பொழுதுகளைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அன்று பெண்களெல்லாம் சேர்ந்து குளிக்கும் குளியலறையில் சிறுமிகளிலிருந்து பலதரப்பட்ட வயதினரும் குளித்துக்கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் சீண்டல்கள், பாலியல் வம்புகளும் வெடிச்சிரிப்புமாய்.
’இன்றைக்கும் ஒருத்தியின் கரு கலைந்துவிட்டது’ என்ற லைலாவின் குரல் அனைவரின் கவனத்தையும் குவிக்கிறது.
இதையெல்லாம் இங்கு பேசத்தேவையில்லை என்கிறாள் லைலாவின் மாமியார்.
ஏன் பேசக்கூடாது. இப்படி நடப்பது முதல்முறையா?
ஆம். லைலாவும் அவளுடைய குழந்தையை மலையில்தான் இழந்தாள் என்கிறாள் இன்னொருத்தி.
நான் மட்டுமா? ஏன் ரஷிதா, யாஷ்மினா… ஆனா குழந்தையில்லை என்ற குறை எங்கள் மேல். எனக்கொரு மகள் பிறந்தால் அவளுக்கு இது நேரக்கூடாது.
நீ வெளியூர்க்காரி. நீ பேசக்கூடாது என்கிறாள் இன்னொருத்தி.
ஏன் மற்ற ஊர்களில் ஆண்கள் தண்ணீர் கொண்டு வருகிறார்களே..
தண்ணீர் வீட்டுக்குத்தேவையான ஒன்று. அதை பெண்கள்தான் கொண்டுவர வேண்டும். ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான், அதுதான் நம்ம மரபு. அதை மாற்றுவதற்கு நீ ஆளல்ல என்கிறாள் லைலாவின் மாமியார்.
ஆமாம். அன்றைக்கு ஆண்கள் நிலங்களில் வேலைசெய்யப்போனார்கள். போருக்குச் செல்லவேண்டியிருந்தது. இன்றைக்கு பெரும்பாலானபேர் நகரங்களில் வாழ்கிறார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள். தேநீர்க்கடைகளில் தேநீர்குடிக்கவும் சீட்டுவிளையாடுவதுமாய் பொழுதைப் போக்குகிறார்கள். அவர்கள் தண்ணீர் சுமந்துவரட்டும்.
அப்படிச்சுமந்தாலாவது என் புருஷனுக்கு தசைகள் இருகும் என்கிறாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பொலிகள் எழும்போது உள்ளே நுழைகிறாள் வயதுமுதிர்ந்த பெண்ணொருத்தி.
உட்காருங்கள். என்கிறாள்.
இது உன் விசயமல்ல. நீ தலையிட வேண்டாம் என்கிறாள் லைலாவின் மாமியார்.
போதும். நீ அதிகம் பேசிவிட்டாய். நீ உட்கார். அவள் ஒன்றும் வெளியூர்க்காரியல்ல. அவள் உன் மகனைக் கட்டியவள்.
ஒரு நாள் ஒரு ப்ரஞ்சுக்காரன் என்னிடம் கேட்டான். உன்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் எவையென்று?
அது எல்லாமே 14வயதுக்குள்தான் என்றேன். ஏன் தெரியுமா? எனக்குத் 14வயதில்தான் திருமணமானது. அன்றைக்கு ராத்திரித்தான் ‘அது’ என்னவென்றே எனக்குத் தெரியும். அதற்குமுன் எந்த அனுபவமும் இல்லை. உங்களைப்பொலவே அவரைப் பார்த்ததுமில்லை. காலையில் கதவைத்திறக்கும் வரை நான் எதையுமே பார்க்கவில்லை. ஒரே இருட்டு. நான் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டேன். நான் நினைத்திருந்தேன். கணவன் என்பவன் பக்கத்தில் அமர்ந்து கைகளை இதமாகப்பிடித்து… ம்… அவருக்கு அப்போது வயது 40. ஏற்கனவே இரண்டுகுழந்தைகள். ஒன்று 10.இன்னொன்று 11 அவர்களுடைய தாய் நீண்டநாள் வியாதியில் படுத்துச ஆறு மாதங்களுக்கு முன்தான் செத்துப்போயிருந்தாள். நான் 14வயதில் தாயானேன். 19குழந்தைகளைப் பெற்றேன் 12செத்துப்போனது. மஃபீசா உனக்கு 12குழந்தைகள். 5 இறந்துபோனது. உனக்கு 8. அதில் ஐந்து போய்ச்சேர்ந்த்து. யாஷ்மினா உனக்கு ஆறு. மூன்று செத்துப்போனது. பாதிகுழந்தைகளை கொல்கிறோம். அல்லது சாகடிக்கிறோம். இதுதான் நம் மரபு. என்னை வியாதிக்காரியாக என் புருஷன் நினைத்தான். என்னைத்தள்ளிவிட வழிபார்த்தான். இப்போது ஏழு குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றனர். கடவுளுக்கு நன்றி. பின் எப்படி நான் 14வயதுக்குமேல் மகிழ்ச்சியாக இருந்திருக்கமுடியும்? எப்படி?
லைலா சொல்வது சரிதான். ஆண்கள் தண்ணீர் கொண்டுவரட்டும்.
எப்படி? அவர்களை நீங்கள் வற்புறுத்துவீர்களா? என்று ஒருத்தி கேட்கவும் நீண்ட அமைதி சூழ்கிறது. மௌனத்தை உடைக்கும் லைலா கூறுகிறாள்
நாம் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்… ’காதல் வேலை நிறுத்தம்’. மீண்டும் மௌனம்.
ஏன் கூடாது.. காதல் வேலைநிறுத்தம். பெண்கள் புரிந்தும் புரியாமலும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொள்கிறார்கள். எதிரும் புதிருமான வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டே கலைந்து செல்கிறார்கள்.
பாலுறவுதான் நம் ஆயுதம் என்கிறாள் லைலா
எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. 10வருஷத்திற்குமுன்பே என்புருஷனைக் குழியில் இறக்கிவிட்டேன். யாருக்கு தைரியம் இருக்கு? என்று முதியவள் கேட்டு முடிக்கும் போது எஞ்சியிருப்பவள் லைலா மட்டும்தான்.
படிப்படியாக லைலாவும் அந்த முதியவளும் பெண்களை சமாதானப்படுத்தி வெற்றிகரமாக வேலைநிறுத்தத்தை அமுல் படுத்திவிடுகிறார்கள். இரவில் மெல்ல நெருங்கும் கணவர்கள் விதவிதமான சல்ஜாப்புகளால் துரத்தப்படுகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் அந்த ஊருக்கு வருவது வழக்கம். அப்படி மறுநாள் ஒரு சுற்றுலா கும்பல் வரப்போவது கேள்விப்பட்டு, சுவற்றில் இந்த ஊரில் காதல் வேலைநிறுத்தம் என்று சுவரில் எழுதி வைக்கிறாள் லைலா.
அவர்கள் நினைத்த வேகத்தில் எதுவும் நடந்துவிடவில்லை. ஊரின் மையத்தில் ஆண்கள் கூடும் தேநீர்கடை முன் தங்கள் படுக்கைகளை கிடத்தி முற்களால் ஒரு கிணற்றை உருவாக்கி ஒரு வாளியையும் தொங்க விடுகிறார்கள். துணியில்
’உங்கள் இதயமும் இவ்வளவு வறண்டதா? இந்த கிணற்றைப்போல்’
என்று எழுதிவைத்து அமர்ந்துகொள்கிறார்கள். அவர்களுடைய மதகுரு அழைக்கப்படுகிறார். அவர் பெண்களுக்கு அறிவுறை சொல்ல முனைகிறார். நீங்கள் ஆண்களுக்கு எதிரான ‘ஜிகாத்தைக்’ கைவிட வேண்டும் என்கிறார்.
லைலா நசொல்கிறாள், ‘இது ஆண்களுக்கு எதிரான ‘ஜிகாத்’ அல்ல. அநீதிக்கு எதிரான ஜிகாத் என்கிறாள்.
கடைசியில் காதல் வேலைநிறுத்தம் ஜெயித்து தண்ணீர் வந்து சேர்கிறது ஊருக்கு. அருமையான ஒளிப்பதிவும் வேறுபட்ட நிலவியலும் மிகப்புதிய அழகியலை உருவாக்குகின்றன. இயக்குநரின் திரைக்கதையில் அந்த சமூகத்தின் பண்பாட்டுச் சடங்குகள் கதையோடு இணைக்கப்பட்டுள்ள நேர்த்தி கவனிக்கத்தக்கது. நடிகர்கள் குறிப்பாக லைலாவாகவரும் Leïla Bekhti யின் ஓப்பனையற்ற அழகு பார்த்துக்கொண்டேயிருக்கத் தூண்டுவது. பாரம்பரிய இசையும் பாடல்களும் (இசை: Armand Amar) அற்புதமாகப் பொருந்திப் போகின்றன. மிகவும் கட்டுப்பெட்டியான இஸ்லாமிய சமூகத்தை பின்னனியாகக் கொண்ட இப்படம் ஒரு அற்புதமான பெண்ணியப் பிரதியாக முடிகிறது.
இந்தமாதிரி நடந்திருக்க் முடியுமா? என்பதைப் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாதுதான். யதார்த்தம் என்ற பெயரில் அவலங்களையே பதிவுசெய்துகொண்டிப்பதோடு, இம்மாதிரி நம்பிக்கைகளை விதைக்கிற கலைப்படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
நாம் சிந்திக்கும் வேகத்தைவிட சமூகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது எனும் ரது மிகைல்லியனு இப்படத்தின் இயக்குநர். ருமேனியாவில் பிறந்த பிரஞ்சு இயக்குநர். திரைக்கதை ஆசிரியர். கவிஞர்.
Radu Mihaileanu: “Society is moving along at a faster rate than our thinking”
ஐந்து படங்களை இயக்கியிருக்கும் இவரின் இன்னொரு முக்கியமான படம் ’தி கான்சர்ட்’(The Concert). சென்ற ஆண்டு கேன்ஸ் விழாவில் The Source மிகுந்த கவனத்தை ஈர்த்தது.
–இரா. பிரபாகர்(prabahar1964.blogspot.in)