பக்தி பலவகைப்படும். அதில் ஸ்ரீதேவி மீது இயக்குனர் ராம்கோபால் வர்மா கொண்ட பக்தி வார்த்தைகளுக்குள் அடங்காதது. ஸ்ரீதேவியை கல்யாணம் செய்தபோது போணிகபூரை ‘போட்டுத்தள்ள ஆசைப்பட்டேன்’ என்று முரட்டு அறிக்கை விட்ட வர்மா, ஸ்ரீதேவி பாட்டி ஆனபிறகும் அவரை ஒரு பார்ட்டி போலவே கொண்டாடுவதை நிறுத்துவதாயில்லை.
16 வருட இடைவெளிக்குப் பிறகு ,’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவி நடிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே, அப்படத்தின் சம்பளம் வாங்காத பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வந்த வர்மா, நேற்று, கேட்பவர்கள் கிறுகிறுத்துப்போகும் அளவுக்கு, புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தை, மக்களோடு மக்களாக கியூவில் நின்று பார்க்கவிருக்கிறாராம் வர்மா.
‘’ சிவா’ [உதயம்] படத்தை இயக்கி 20 வருடங்கள் ஆகிவிட்டன. அந்நாளிலிருந்து இதுவரை ஒரு படத்தைக் கூட நான் தியேட்டரில் கியூவில் நின்று பார்த்ததில்லை. இப்பட ரிலீஸுக்காக நான் நகம் கடிக்க ஆரம்பித்து, நாள் பல ஆகிவிட்டது. வரும் வெள்ளிக்கிழமை எப்படா விடியும் என்று இருக்கிறது.
தேவிக்கு பக்தனின் காணிக்கையாக ‘இ.வி’ படத்தை நீண்ட கியூவில் நின்று,காத்திருந்து பாமர ஜனங்களோடு சேர்ந்து பார்க்க விரும்புகிறேன்’’ என்கிறார்.
இதுவரைக்கும் உங்க ஃபீலிங் எல்லாம் ஓகே. இனி, படம் பாத்த பிறகாவது, உங்க பழைய கண்ணாடியை மாத்துங்க, ராம் கோளாறு வர்மா?