’வெளிநாட்டு ஆடியோ சி.டி.களை அநியாயத்துக்கு காப்பி அடிச்சி, இசைங்குற பேர்ல இந்தப்பொடியன் நம்மை அநியாயத்துக்கு இம்சை பண்றானே’ என்று ஜீ. வி.பிரகாஷ் குறித்து அபிப்ராயம் கொண்டிருப்பவர்களில், நீங்களும் ஒருவர் எனில், இந்தச் செய்தி கண்டிப்பாக உங்களுக்கு கல்கண்டையும் விட அதிகமாக இனிக்கும்.
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் கதை விவாதக்குழு வல்லுநர்களில் ஒருவரான ராஜசேகர், கடந்த வாரம், தனியாகப் படம் ஒன்றை இயக்குவதற்காக, தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸிடம் ’பாட்டிசைக்கும்பையன்’ சம்பந்தப்பட்ட கதை ஒன்றை சொன்னாராம்.
அந்தக்கதை முருகதாஸுக்கு மிகவும் பிடித்துப்போகவே, யாரை ஹீரோவாகப்போடுவது என்ற விவாதம் வந்தபோது, கருத்து வேறுபாடு எதுவுமின்றி, முருகதாஸ்,ராஜசேகர் உட்பட்ட அனைவர் மனதிலும் உதயமானவர் ஜீ.வி.பிரகாஷ்.
ஒரு இசையமைப்பாளர், தனது இசையில் பாட வரும் ஒரு கல்லூரி மாணவியை காதலிப்பது, டூயட் பாடுவது, இன்னொரு பாடகர் அதே பாடகி மாணவியை அடைய, ஜீ.வி.க்கு எதிரான வில்லத்தனங்களில் ஈடுபடுவது என்று போகும் அந்தக்கதையை, பிரகாஷும் கேட்டு, பிரகாசமடைந்து ஓ.கே.சொல்லிவிட்டாராம்.
தற்போது பாலா, வெற்றிமாறன், இந்தியில் அனுராக் காஷ்யப் என்று பிஸியாக இருக்கும் ஜீ.வி.பிரகாஷ், ஜனவரியிலிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள சம்மதித்து, புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல், சர்வசதா காலமும் கண்ணாடியில் முகம் பார்த்தே காலம் கழிக்கிறாராம்.
அவர் நடிக்கிற படம் ஒருவேளை சூப்ப டூப்பர் ஹிட்டானா?
முதல் பாராவை மறுபடியும் படிச்சி பரவசமடையுங்க.