தமிழ் சினிமா காமெடி பக்கங்களில் தற்போது சந்தானத்துக்குத்தான் முதல் இடம். மற்ற காமெடி நடிகர்கள் மங்கலாகி இருக்கும் நேரம்.
தொடர்ந்து கலக்கவும் செய்யாமல் அளவாய் கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து தொடர்ந்து சினிமாவின் காமெடி பக்கங்களில் தனக்கும் கொஞ்சம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிட்டி பாபு.
ஓரளவு இடைவெளி விழுந்துவிட்டது என்றாலும் மீண்டும் சில புதிய படங்களில் தற்போது தொடர்கிறார் சிட்டிபாபு.
25 படங்களுக்கு மேல் தாண்டியிருக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் கலை வாழ்க்கையை துவங்கி, தற்போது காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நடித்து வருகிறார்.
சிறிய இடைவெளிக்குப் பின் அவர் காமெடி ரோலில் நடித்து மீண்டும் வருவது பற்றி்யும், பொதுவாக அவர் சினிமாவில் கடந்து வந்த பாதையைப் பற்றியும் மனம் திற்க்கிறார் :
“என்னோட சொந்த ஊர் உசிலம்பட்டி பக்கத்துல உள்ள புழுதிப்பட்டி அங்கிருந்து சினிமா ஆசையில மஞ்சள் பையை தூக்கிக்கிட்டு சென்னைக்கு வந்து. பசி தாங்காம கார்பரேஷன் குழாய் தண்ணிய குடிச்சு. படுக்க இடம் இல்லாம பிளாட்பார்முல படுத்து சான்ஸ் தேடி இந்த அளவுக்கு முன்னுக்கு வந்திருக்கேன்….” இப்படி எல்லாரும் பிளாஷ்பேக் டயலாக் உடுறமாதிரி நானும் உட முடியாதுங்க. நான் பக்கா சென்னை பையன். செல்லப்பேரு பாபு. சிட்டி பையன்ங்றதால சிட்டிபாபு.
படிக்கிறப்பவே சினிமா ஆசை. ஏங்க தியேட்டரே இல்லாத கிராமத்துலேருந்து நிறைய பேரு சினிமா தேடி சென்னை வர்றப்போ. 50 தியேட்டரும், பத்து ஸ்டுடியோவும், எம்.ஜி.ஆரும், சிவாஜியும், ரஜினியும், கமலும் வாழ்ற ஊர்ல பிறந்து எனக்கு இருக்ககூடாதா. பிரண்சுங்ககூட சேர்ந்து வாய்ப்பு தேடுனதுல கிடைச்சது சின்னத்திரை வாய்ப்பு. ஜெயா டி.வியில நுழைஞ்சேன்.
அப்புறம் முகவரி கொடுத்தது சன் டி.வி. ஒரு காலத்துல ராத்திரி 10 மணிக்கு மேல காமெடி டைம் மூலமாக கலக்குனேன். ஆயிரத்தை தாண்டிய எபிசோட் போச்சு. உலகம் முழுக்க ரசிகர்களும், நண்பர்களும் கிடைச்சாங்க. அப்புறம் கலக்கப்போவது யாரு. நிறைய திறமையாளர்களை மேடையேற்ற வாய்ப்பு கிடைச்சுது. அப்படியே தரணி சார் புண்ணியத்துல ‘தூள்’ல அறிமுகம். அப்போலேருந்து இப்போ வரைக்கும் தரணி சார், பேரரசு சார், கே.எஸ்.ரவிகுமார் சாருக்கு நான் ஆஸ்தான கலைஞனா இருக்கேன்.
இதுவரைக்கும் 25 படம் நடிச்சிட்டேன். யாரையும் காப்பி அடிக்காம, கருத்து சொல்லாம, தனியா டீம் வச்சிக்காம, ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கன்னு தயாரிப்பாளர டார்ச்சர் பண்ணாம, ஒரு இயக்குனரோட நடிகனா, அவர் என்ன சொல்றாரோ அதை செய்து முன்னுக்கு வந்திருக்கேன்.
இப்போ ‘மாசானி’, ‘மதகஜராஜா’, ‘தீயாய வேலை செய்யணும் குமாரு’ படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இன்னும் பத்து படங்கள் லிஸ்ட்டுல இருக்கு. அதுக்கெல்லாம் அட்வான்ஸ் வரலை. சினிமால அட்வான்ஸ் வந்தாத்தான் படம் உறுதி.
நிறைய பேரு அண்ணே ஹீரோவ நடிக்க வாங்கன்னு கூப்பிட்டாங்க. கையில எவ்வளவு பணம் வச்சிருக்கீங்கன்னு கேட்டேன் சில லட்சத்தை சொன்னாங்க. பேசாம ஊருக்கு போயி ஒரு அனாதை ஆசிரமம் கட்டுங்க, இல்லேன்னா சின்ன பேக்டரி கட்டி நாலு பேருக்க வேலை கொடுங்கன்னு அனுப்பி வச்சிட்டேன்.
நம்மள நமக்கு தெரியாதுங்களா. வேணா ஆசைக்கு ஒரு படத்துல நடிக்கலாம். அதுக்கான நேரம் இன்னும் வரலை.
சில பேரு நான் டவுள் மீனிங்ல பேசுறதா சொல்றாங்க. அண்ணா நான் எது பேசுனாலும் அதை டபுள் மீனிங்ல எடுத்துக்குறாங்க நான் என்ன செய்யட்டும். இனிமே ஜாக்கிரதையா பேச முயற்சி பண்றேன்.
நமக்கு பெருசா வந்து ஒரு நாளைக்கு பத்து லட்சம் 15 லட்சம்னு சம்பளம் வாங்கி ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல ‘சிட்டிபாபு சிட்டி’ன்னு ஒரு ஊரையே உருவாக்கணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. நல்ல கேரக்டர்கள்ல நடிச்சு, ஜனங்கள சிரிக்க வச்சு. அவுங்களையும் சந்தோஷப்படுத்தி நானும், என்னை சுற்றி இருக்குறவங்களும் சந்தோஷமா இருக்கணும் அவ்ளோதான்.”
“சுருக்கமான சொன்ன சிட்டி பாபு உங்க செல்லபாபுவா இருக்கணும்.”
அதுக்கு நீங்க இன்னும் மக்கள் வாழ்க்கையோட இணைந்த காமெடி பாத்திரங்களை பண்ணுங்க.. கண்டிப்பா மக்களின் செல்லபாபுவா மாறுவீங்க.