சென்சார் சர்டிபிகேட் போட்டு முடிந்ததும், எடுத்தவுடன், கன்னங்கரிய திரையில் ‘ எ சீனு ராமசாமி ஃபிலிம்’ என்ற வெண்ணிற எழுத்துக்கள் மிளிர்கின்றன.
ஏற்கனவே தனது முந்தைய படமான ‘தென்மேற்குப் பருவக்காற்று’க்கு ரெண்டுமுனு பிராந்திய விருதுகள் வாங்கிய இயக்குனர், இந்த முறை, உதயநிதி ஸ்டாலின் போல ஒரு பிக் ஜெயண்ட் கிடைத்திருப்பதால், ஒரு அஞ்சாறு ஆஸ்கார்களும், ஏழெட்டு கேன்ஸ் பட விருதுகளும், நமக்குப் பெயர் விளங்காத, இன்னபிற வெளிநாட்டு விருதுகளும் வாங்கிவிட முடியும் என்ற மனத்திட்பம் இல்லாவிட்டால்,
இப்படி எடுத்தவுடன் நம்ம முகத்தில்’ a film by seenu ramasamy’ என்று டார்ச்லைட் அடிப்பாரா என்ற யோசனையுடனேதான் படம் பார்க்கத் துவங்கினேன்.
ஏற்கனவே பேட்டிகளில், விளம்பரங்களில் அவர்கள் நீட்டி முழங்கியிருந்தபடி கதை என்னவோ மீனவன் சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் அதைக் கையாண்டிருக்கும் விதமோ ‘எங்க ஆத்துக்காரரும் கடலுக்கு மீன் பிடிக்கப் போனாரு’ என்பதையும் விட இன்னும் சற்றே கேவலமானது.
டைட்டில் கார்டு போடும்போது ’25 ஆண்டுகளுக்கு முன்பு’ என்று துவங்கும் ஒரு காட்சி, சில விநாடிகளில் அற்ப ஆயுளில் முடிய, நந்திதா தாஸின் ஃப்ளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது.
கடைசி வரை என்ன காரணத்துக்காக அப்படிக் குடித்தான் என்று சொல்லப்படாத பெருங்குடிகாரன் நாயகன் விஷ்ணு. படத்தின் இடைவேளை வரை வரும், 31 காட்சிகளிலும் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு கிளாஸ்களில் குடித்துக்கொண்டே இருக்கிறான்.
தமிழ்சினிமாவின் பலகால ட்ரீட்மெண்ட் பிரகாரம், நாயகி சுனைனாவிடம் காதல் வயப்பட்ட பிறகு, அவன் தன் குடியை நினைத்து, சரக்கு குடியை மறந்து மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விரும்புகிறான்.
பேட் இல்லாமல் கிரிக்கெட் கிரவுண்டுக்குள் இறங்கிய பேட்ஸ்மேன் மாதிரி, கடலுக்கு செல்ல போட் இல்லாமல் தவிக்கிறான். தாஸ் என்கிற செமி வில்லன், ‘நீ என்ன இனமோ என்ன குலமோ தெரியலை?’ என போட் தரமறுக்க, சமுத்திரக்கனிபாய் விஷ்ணுவுக்கு மீன்பிடிக்க போட் தருகிறார்.
கடலுக்குள் மீன்பிடிக்கப்போன விஷ்ணுவை ‘துப்பாக்கி’ படக்குழுவைச் சேர்ந்த யாரோ சுட்டுக்கொன்று விட, அது வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று விஷ்ணுவின் உடலை வீட்டுக்குள் புதைத்துவைத்து 25 ஆண்டுகளாக கண்ணீர்ப்பறவையாக வாழ்ந்து வருகிறார் நந்திதா.
இவர்களுக்கு சிங்கள மீனவனே தேவலாமோ என்று தோணுகிற அளவுக்கு அவ்வளவு வீராவேசமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.
பிரபல இலக்கியவியாதி ஜெயஜெயமோகனுடன் சேர்ந்து உரையாடலைத் திரையாடல் ஆக்கியிருக்கிறார் மீனு ராமசாமி.
மீனவன் என்றாலே சதா குடித்துக்கொண்டே இருப்பவன் என்கிற தோற்றத்தை நாயகன் விஷ்ணு கனகச்சிதமாக செய்துமுடித்திருக்க, மீனவப்பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள் என்று பொருள்படும்படி, நாயகி சுனைனா கறுப்பு மை பூசப்பட்டு கண்றாவியாகக் காட்சியளிக்கிறார். [இனிமே செவத்த பொண்ணுங்களைக் கூப்பிட்டு கருப்பு பெயிண்ட் அடிக்கிறவங்கள கியூவுல நிறுத்தி ஆளுக்கு நாலு சவுக்கடி குடுத்தாலொழிய தமிழ்சினிமா உருப்பட வாய்ப்பே இல்லை.]
ரகுநந்தன் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்று சொல்லவிரும்பும்போது, அவரது பின்னணி இசை நம்மை பின்னோக்கி இழுக்கிறது. நமது ரெண்டு காதுகளுக்குள்ளும்,கயிறுகள் வழியாய், பியானோவைக் கட்டிக்கொண்டு உள்ளே இறங்கி வாசிப்பது போல் அப்படி ஒரு இம்சை.
பாலசுப்பிரமெணியெத்தின் ஒளிப்பதிவு, உதயநிதி ஸ்டாலின் தனது கோட்-ஷூட் சகிதமாய் கட்டுமரத்தில் மீன்பிடிக்கக் கிளம்பினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
படத்தில் இடம்பெறும் ஏழு பாடல்களயும் எழுதி இருப்பவர் கவிப்’போரரசு’ வைரம். பாடல் எழுதுவதிலிருந்து இவருக்கு விரைவிலேயே இளைப்பாறுதல் தரும்படி கர்த்தரை வேண்டுவதைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே.
தமிழ்சினிமாவில் சமீபகாலமாக ‘மேதாவிபோல் நடிப்பவர்களின்’ [ஹிபோகிரட்ஸ்] முகத்திரை கிழிந்து வருகிறது. அவர்கள் அனைவரையும் திருவாளர் தங்கர் மச்சானுடன் சேர்த்து கியூவில் நிறுத்தும் வேலைகளை மக்கள் மவுனமாக செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
விரைவில், மிக நீளமாக ஆகப்போகும் அந்தக் கியூவில், இதோ மீனு ராமசாமியும் ‘நீர்ப்பறவை’ என்ற அரைவேக்காட்டுப் படத்தின் மூலம் தானே போய் நின்றுகொண்டார்.