’என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னது ‘போடா போடி’ கதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் என்பது படத்தை பார்க்கநேரும் பரிதாப ஜீவன்களுக்கு மட்டுமே புரியும்.
பின்ன என்னங்க,கதைன்னு ஒண்ணே படத்துல இல்லாதப்ப, அது எப்பிடிங்க லீக் ஆக முடியும்?
வெளிநாட்டுல வசிக்கிற சிம்புவும், வரலட்சுமியும் முதல் சந்திப்பிலேயே, ‘கத்திரிக்கா கிலோ என்ன விலைன்னு கேக்குற மாதிரியே, ‘ நீ என்னைக் காதலிக்கிறியா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ‘போடா போடி’ன்னு பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே பிரிஞ்சிடுறாங்க. பழைய படி சேர்ந்துக்கிறாங்க. கட்டிக்கிறாங்க. பிள்ளை ஒண்ணு பெத்துக்கிறாங்க.
பாலே டான்சரான வரலட்சுமி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்ட ஆம்பிளைங்க கட்டிப்புடிக்க டான்ஸ் ஆடுறது, சிம்புவுக்குப் புடிக்கலை. தான் டான்ஸ் ஆடுறது புடிக்கலைன்னு சொல்ற சிம்புவை வரலட்சுமிக்கு புடிக்கலை. அவிங்க ரெண்டு பேருமே ஆடுற அழுகுணி ஆட்டம் புடிக்கலைங்கிறதால என்ன ஆனாய்ங்கன்னு நான் எழுதி முடிக்கலை.
இந்தக் கதைய தங்களோட வாழ்க்கையில நடந்த ஏழு எபிசோடுகளா பிரிச்சி சிம்புவும் வரலட்சுமியும் சொல்ல ஆரம்பிக்கிறப்பவே, நம்ம நேரம் சரியில்லைன்றது நமக்குப் புரிய ஆரம்பிச்சிடுது.
இதில் அச்சன் பெருந்தச்சன் டி. ஆர். பாணியிலேயே பாடலை இயற்றி, பாடி, ஆடி நம்மை ஏறத்தாழ ஒரு டெட்பாடி ஆக்குகிறார் இழைய சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.
சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி கவர்ச்சிகரலட்சுமியாக கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸை ஒட்டியுள்ள குத்துப்பாடலில் இவரது கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்தால் நமீதாவின் நாலுநாள் தூக்கம் கெடுவது உறுதி.
ஒரு புதுமுகமாக, வரலட்சுமி ஆர்வக்கோளாறில் தானே டப்பிங் பேச ஆசைப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கம்பீரமான அவர் குரலைக் கேட்டபிறகாவது மனித வதைச்சட்டத்தின் கீழ் அதை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டாமா? அட என்னமோ போங்க, நம்ம தமிழ் சினிமாவுல மிருக வதைகளுக்கு எதிரா இருக்கிற அளவுக்கு மனித வதைகளுக்கு எதிரா சட்டங்கள் இருக்கிறதா எனக்குத்தெரியலை.
படத்துல இவங்க ரெண்டு பேரைத் தாண்டின ரொம்ப முக்கியமான விஷயம் எசை. தரண் குமார் செய்திருக்கிறார். பாடல்களின் இசையமைப்பு நன்றாக இல்லை. போதாத குறைக்கு ‘அப்பன் மவனே, டண்டணக்கா, டமுக்கணக்கா, ங்கொக்காமக்கா’ என்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய வரிகள் வேறு.
இப்படி ஒரு ரெண்டுமணிநேரம் இவர்கள் பஞ்சாயத்தைப் பார்த்து முடித்தவுடன், என்னையும் அறியாமல் ஏர்வாடியை நோக்கி பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். உங்க சவுகரியம் எப்படி?