வரும் 9ஆம் தேதி ரிலீசாகவிருந்த விஜய்யின் துப்பாக்கி ஒருவாரம் தள்ளி தீபாவளியன்று தான் ரிலீசாகிறதாம்.
காரணமென்னவென்றால் ஹாரிஸ் ஜெயராஜ் தனது பிண்ணணி இசை வேலைகளை இழு இழுவென்று இழுத்துவிட்டதால் படத்தின் கடைசி கட்ட போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தொங்கிவிட்டதாம். இதனால் விஜய்க்கும், முருகதாஸூக்கும்
இடையே மனத்தாங்கல் என்று கூடப் புரடக்ஷன் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
விஜய் என்னவோ ஆரம்ப காலங்களில் அப்பாவால் வளர்த்து விடப்பட்டிருந்தாலும் பிற்காலத்தில் நடித்த சில நல்ல படங்களால் இமேஜ் வளர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார்.
அதை வைத்துக் கொண்டு அவர் தன்னை ஒரு அடுத்த ரஜினி என்று நம்புவது ஒரு வேடிக்கை என் வாடிக்கை கதைதான் என்றாலும் அவருடைய படங்கள் ரிலீசாகும் போது இணையத்தில் அவருடைய படத்தைக் கலாய்ப்பது என்பது ஒன்று கடந்த சில வருடங்களாக நடைபெறுகிறது.
ஒரு சாம்பிள்: துப்பாக்கி படத்தைப் பார்த்த எலியொன்று தூக்குப் போட்டு செத்துப் போனது… இந்த ரேஞ்சில் படத்தை போட்டு வறுப்பார்கள். அது நல்ல படமோ இல்லை மசாலவோ கவலையில்லை. முதலில் அறுவையான படங்களுக்குத் தான் இப்படி என்று ஆனத இந்தக் கிண்டல் இப்போது ஸ்பெஷலாக விஜய் படங்களை மட்டும் குறி வைக்கிறது.
விஜய் தமிழ்நாட்டின் மற்ற ஸ்டார் நடிகர்களைப் போலவே பெரும்பாலும் சுயநலமான, தான், தனது ரசிகர்களிடம் தனக்கு உருவாகும் இமேஜ் என்பதை மட்டுமே கவனம் கொண்ட நடிகர் தான். அஜித் இந்த இமேஜ் என்பதைப் பற்றி கவலையே படாமல் ரசிகர்களே என் வாழ்க்கை நடிப்பு நான் நடிக்கிறேன்.,, உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க.. என் பின்னால் வீணாக அலையாதீர்கள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஆனாலும் கார்த்தி, சூர்யா, ரஜினி, கமல், சிம்பு, தனுஷ் போன்ற எந்த நடிகர்களின் படங்களையும் இப்படி ஓட்டு ஓட்டென்று ஓட்டாத இணைய புத்திசாலிகள்/ அறிவாளிகள்(?) ஏன் விஜய்யை மட்டும் ஊருக்கு இளைத்தவன் ஆண்டி கதையாக இப்படி ஓட்டுகிறார்கள். இவர்களெல்லாம் விஜய்யை விட எந்த விதத்திலும் மாறுபட்டவர்களில்லை. புத்திசாலிகளுமில்லை.
ஏன் விஜய்யை மட்டும் எல்லோரும் ஏன் மட்டம் தட்டுகிறார்கள் ? மற்ற நடிகர்களெல்லாம் ஏன் விட்டுவிடுகிறார்கள்? ரூம் போட்டு யோசிக்கவேண்டிய கேள்வி இது. விடை தெரிந்தவர்கள் பதில் அனுப்பவேண்டிய முகவரி துப்பாக்கி@ஹலோதமிழ்சினிமா.காம். சரியான பதில்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று துப்பாக்கிகளும், 4 ரோல் கேப்புகளும் பரிசு.