புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் ஸ்டார் வார்ஸ் – பாகம் 7 ஐ 2015ல் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது. என்னடா இது? ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ்பெற்ற டைரக்டர் ஜார்ஜ் லூகாஸின் லூகாஸ்பில்ம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாயிற்றே அதை எப்படி டிஸ்னி உபயோகப்படுத்தலாம் என்று நீங்கள் யோசிப்பது சரிதான்.
விவரம் என்னவென்றால் டிஸ்னி நிறுவனம் லூகாஸ்பில்ம்ஸை சுமார் 400 கோடி டாலர்கள் கொடுத்து வாங்கிவிட்டது. ஏற்கனவே இதுபோல ஈஎஸ்பிஎன்(ESPN), ஏபிஸி(ABC), பிக்ஸார்(Pixar) அனிமேஷன் ஸ்டூடியோஸ், மார்வல் காமிக்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களை வால்ட் டிஸ்னி நிறுவனம் இப்படி வாங்கி முழுங்கிவிட்டது.
இந்த மாதிரி கம்பெனிகளை கம்பெனிகள் முழுங்குவது எதைக் காட்டுகிறது என்றால் மீண்டும் ஒரு பொருளாதாரப் பிரச்சனை நாட்டில் ஏற்படப் போவது என்பதையே. ஏனெனில் பெரிய பெரிய கம்பெனிகளிடம் பணம் கன்னா பின்னாவென்று குவிந்து போனால் அதை ஒயிட்டாக மாற்ற தன்னை விட சிறிய கம்பெனிகளை அவை விலை கொடுத்து வாங்கிப் போடும்.
ஆனால் வாங்கப்பட்ட சிறிய கம்பெனியின் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டுக்குப் போகவேண்டியது தான்.
68 வயதான ஜார்ஜ் லூகாஸைப் பொறுத்தவரை அவருக்கு 40 கோடி வால்ட் டிஸ்னியின் ஷேர்கள் கிடைக்கப் போகின்றன. அவரது பழைய கம்பெனியின் சேர்மன் கேத்தலின் கென்னடி அப்படியே டிஸ்னி குரூப் கம்பெனியிலடங்கும் லூகாஸ்பில்ம்ஸூக்கும் சேர்மனாகத் தொடர்வார்.
இனிமேல் டிஸ்னியின் பெயரிலேயே ஸ்டார் வார்ஸ் 7, 8 மற்றும் 9 வது பாகங்கள் வெளியிடப்படும்.
எதுன்னா என்ன.. நல்லா பாக்குற மாதிரியா படம் எடுக்கிறவரைக்கும் சரிதான்.