ஸ்ரீஹரிபாலாஜி மூவிஸ் தயாரிக்க 35க்கும் மேற்பட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவரும் மேடை நாடகங்களுக்காகத் தேசிய விருது பெற்றவருமான இ வி கணேஷ் பாபு இயக்கும் யமுனா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது
.பிரபலத் திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய வைரவரிகளுக்கு அறிமுக இசையமைப்பாளர் இலக்கியன் இசையமைத்த யமுனா திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை மூத்த இயக்குனர் எஸ் பி முத்துராமன் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பெற்றுக் கொண்டார்.
ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் யமுனா என்று பெண்பால் பெயரைத் தலைப்பில் வைத்த இயக்குனர் இவி கணேஷ்பாபுவைப் பாராட்டிய சீனு ராமசாமி, “மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்களை விட எனக்கு கால் நடை மருத்துவர்களைத் தான் மிகவும் பிடிக்கும்… ஏனென்றால் தனக்கு என்ன நோய் என்று பேசத்தெரியாத கால் நடைகளின் நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்தும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அதுபோல படத்தின் காட்சிகளைச் சரியாக விவரிக்கத் தெரியாத இயக்குனர்களுக்குக் கூடச் அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாகப் பாட்டெழுதும் வல்லமை கவிப்பேரரசுவிற்கு உண்டு. அப்படியிருக்கும் போது மிகச்சிறந்த திரைக்கதையுடன் வைரமுத்துவின் அலுவலகத்திற்குச் சென்றிருக்கும் இயக்குனர் இ வி கணேஷ்பாபுவிற்கு மிகமிகச்சிறப்பாக பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து.” என்று பாராட்டினார்.
திருப்பூரில் தகனமேடையில் யார் எரியூட்டப்பட்டாலும் அங்கே வைரமுத்துவின் பாடல் ஒன்றினை ஒலிக்கச் செய்வார்கள் என்கிற தகவலைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர் நடிகர் ஆர் பாண்டியராஜன் பேசும் போது, “ இந்த உலகில் மிகப்பெரிய ஏழை- நண்பர்கள் இல்லாதவன் தான்… மாறாக நண்பர்களை அதிகமாகப் பெற்றிருப்பவன் தான் பெரிய கோடீஸ்வரன்..” என்று யமுனா கதாநாயகன் சத்யாவைப் பார்த்துப் பேச அரங்கத்தில் அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் –சத்யாவின் நண்பர்கள் விசில்-கரகோஷங்களுடன் பெருத்த ஆராவரம் செய்தனர். ஆனால் அவர்கள் சத்யாவின் நண்பர்களாக மட்டும் இருந்து விடாமல் அரங்கத்தில் பேசிய அத்துனை பேருக்கும் தங்கள் கரவொலிகளால் உற்சாகம் அளித்துக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து பேசிய பாண்டியராஜன், “ யமுனா படத்தில் பங்குபெற்ற அத்துனை பேரும் அதற்கு முன் வெவ்வெறு அடையாளங்களை முகவரிகளைக் கொண்டிருக்கலாம்… ஆனால் யமுனா படத்திற்குப் பின் அவர்கள் நான் யமுனாவில் பணியாற்றியிருக்கிறேன்..என்கிற ஒரு விசிட்டிங்க் கார்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்…அந்த அளவிற்கு யமுனாத் திரைப்படத்தின் முன்னோட்டமும் பாடல்காட்சிகளும் மிகவும் அருமையாக இருக்கின்றன..” என்றார்.
யமுனா திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நமீதாவுக்கு ஆறடி உயர மோகினி பட்டம் வழங்கப்பட்டது. ஆறடி உயர மோகினி, யமுனா படத்தின் கதாநாயகன் சத்யாவையும் கதாநாயகி ஸ்ரீ ரம்யாவையும் ஊக்கப்படுத்தி வாழ்த்திபேசியது, மற்றவர்களால் கவர்ச்சிப் போர்வைப் போர்த்தப்பட்டிருக்கும் நடிகைக்குள்ளும் புதியவர்களை ஊக்கப்படுத்தும் பண்பும் , பாசமும் இருப்பதைப் பறைசாற்றுவதாய் இருந்தது.
முத்தாய்ப்பாகப் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “யமுனா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை ஒரு விழாவாக மட்டுமல்லாமல் கவிஞனைக் கெளரவப்படுத்தும் விழாவாக ஒரு பாராட்டு விழாவாக நான் பார்க்கிறேன். நானும் வறுமையில் இருந்து கஷ்டப்பட்டு வந்தவன் தான்… ஆகவே புதிதாக வரும் இளைஞர்களின் கதைகளை மட்டும் பார்க்காமல் அவர்களது கண்களுக்குள் இருக்கும் வெளிச்சத்தைப் பார்க்கிறேன்… இன்னும் 25 வருடங்கள் சினிமாவைத் தங்கள் தோளில் சுமக்கப் போகும் அந்தத் திறமைசாலிகளுக்குப் பாட்டெழுவதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொள்கிறேன். கோவை நமக்குத் தொழிலைத் தந்தது, மதுரை நமக்குத் தமிழைத் தந்தது, தஞ்சை நமக்குக் கலையைத் தந்தது. தஞ்சை மண்ணில் இருந்து வந்திருக்கும் மிகச்சிறந்த கலைஞர்கள் வரிசையில் நிச்சயம் யமுனா திரைப்படத்தின் இயக்குனர் இ வி கணேஷ்பாபுவும் இடம்பிடிப்பார். இது போன்ற மேடைகளில் இன்றுக் கொண்டாட யாருமே இல்லாத அல்லது கொண்டாடக்கூடியச் சூழலில் இல்லாத பழம்பெரும் சாதனையாளர்களின் புகைப்படங்களை வைத்தால் ஊடகங்களின் வாயிலாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ரசிகர்களின் வாயிலாகவும் அவர்களது பெருமை இந்த உலகிற்கு நினைவூட்டப்படும்.
திரைப்படத்துறையில் சாதிப்பதற்குத் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அத்துடன் அவமானங்களைத் தாங்கும் சக்தியும் வேண்டியிருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அவமானங்களைச் சந்திருக்கின்றோமோ அதை விடப்பல மடங்கு வெகுமானங்கள் நம்மைத் தேடிவரும்” என்றார். தொடர்ந்து பேசிய வைரமுத்து 1987 இல் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்தினார்.
“வேதம்புதிது படத்தைப் பார்க்க வந்த எம் ஜி ஆர் கமல்ஹாசனிடம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க அவர் சத்யா என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகச் சொல்ல மகிழ்ந்த எம் ஜி ஆர் “ நான் எனது அன்னையார் பெயரில் ஸ்டுடியோ கட்டியிருக்கிறேன்… நீ அவர் பெயரில் படமே எடுக்கின்றாயே மகிழ்ச்சி..” என்றாராம். சத்யா என்கிர பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது. சத்யா என்கிற பெயரிலேயே தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் யமுனா படத்தின் நாயகன் சத்யா அதிக உயரங்களைத் தொடுவார்..” என்று வாழ்த்தினார்.