ஜெயா டி.வி.க்காக வரும் சனிக்கிழமை, 29-12-12 அன்று, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக, இன்று மதியம் 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இசைக்குயில் ஏ.ஆர்.ரஹுமேன்.
வழக்கம்போலவே வார்த்தைகளை டேப் வைத்து அளந்து பேசிய ரஹ்மான், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், கேட்கப்பட்ட கேள்வியில் கால்வாசிக்கும் கம்மியாகவே பதில் அளித்தார்.
‘’இந்த வருஷம் மணிரத்னம் படம், ரஜினியோட ‘கோச்சடையான்’ ஷங்கரோட ‘ஐ’ மாதிரி ரொம்ப எளிமையான, ஏழ்மையான, அதே சமயம் என்னோட மனசுக்குப் பிடிச்ச படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறேன். வர்ற வாரம் பண்ணப்போற கச்சேரியில வெறுமனே தமிழ்ப்பாடல்கள் மட்டும் தான் பாடப்போறோம். ஏன்னா மத்த லாங்குவேஜ் பாட்டுக்களைப் பாடினா சில தமிழருங்க வெறுப்பா பாக்குறாங்க’ என்று ரொம்ப சோகமாக குறிப்பிட்ட ரஹுமான், இதற்கு முன் வெறும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே பாடிய கச்சேரி பண்ணி 11 வருடங்கள் ஆகிறதாம்.
‘இந்த நிகழ்ச்சி மூலமா கிடைக்கப்போற சம்பளத்துல பத்து சதவிகிதத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்போறீங்களாமே?’ என்று ஒரு நிருபர் எதிர்பாராமல் குண்டைத்தூக்கிப் போட்டபோது, ‘அய்யய்யோ இது என்னடா புது கட்டிங்கா இருக்கு?’ என்று ரஹ்மான் கலங்கி நிற்க,
அவசரமாக மைக்கை வாங்கி ஜெயா டி.வி. அதிகாரி ஒருவர், ‘ அது ரஹ்மான் சம்பளத்திலிருந்து வழங்கப்படவில்லை. ஜெயா டி.வி.யின் கட்டண வசூலிலிருந்து நாங்கள் வழங்க இருக்கிறோம்’ என்ற சொன்னவுடன் தான் நிம்மதிப்புயல் மூச்சு விட்டார் ரஹ்மான்.