கே; என்ன கிளியாரே கொஞ்சநாளா ஆளையே காணோம்?’ நாங்ககூட உன்னை யாரோ சூப் போட்டு குடிச்சிட்டாங்கன்னுல்ல முடிவு பண்ணிட்டோம்??’ கணேஷ், ஆரப்பாளையம்.
கி: அதுகூட பரவாயில்ல,.. என்கூட 53 வாரமா பழகிக்கிடிருக்க ஆசிரியரே ‘கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து, அது ஹல்லோதமிழ்சினிமாவை விட்டுப் பறந்து போயிடுத்துன்னு
அபாண்டமா பல இடங்கள்ல ஆப்பு வச்சிருக்கார்.
வேற ஒண்ணுமில்லை பாஸ். கொஞ்சநாளா ஒரு மைனாவை ரூட்டு விட்டுக்கிட்டிருந்தேன். அது வேற ஒரு நைனா கிடச்ச உடனே, நம்மள கழட்டி வுட்டுடுச்சி. சரி பொழப்பப்பார்ப்போமேன்னு பொறப்பட்டு வந்துட்டேன்.
கே; 24 உலக நாடுகளோட மனித உரிமை அமைப்பாளர்கள் முன்னிலையில தன்னோட ‘திருமதி தமிழ்’ பட ஆடியோ ரிலீஸை வெளியிடுறாரே, நம்ம தேவயானை ராஜகுமாரன்?’ அசோக்ராஜா, அருப்புக்கோட்டை.
கி: நானும் அந்த விளம்பரத்தைப் பாக்குறதுக்கு முந்திவரைக்கும் வர்ற மாசக்கடைசியில உலகம் அழியப்போகுதுங்குறதுல நம்பிக்கை இல்லாமத்தான் இருந்தேன்.
அப்புறம் இன்னொரு விளம்பரத்துல, ‘.. இதுவரை எந்தக் கவிஞனும் கிள்ளாத இடுப்பு’ ன்னு தேவலோக ராணி தேவயானி இடுப்பு பத்தி யாரோ ஒரு அபாரமான பாட்டு எழுதியிருக்காங்க. அதையும் படிச்சப்ப பேசாம, கடுப்புல, நம்ம வீட்டு அடுப்புல தலையக் குடுத்து, கதைய முடிச்சிக்கலாம் போல இருக்கு.
கே: தனது ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச். கேபிளில் ரிலீஸ் செய்ய கமல் முடிவெடுத்திருப்பது புத்திசாலித்தனமானதா அல்லது தற்கொலை முயற்சியா கிளியாரே?’ ஸ்ரீனிவாசன், சிவகங்கை.
கமல் பாணியிலேயே சொல்றதா இருந்தா, அதை புத்திசாலித்தனம் நிறைந்த தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை முயற்சி நிறைந்த புத்திசாலித்தனம்னே சொல்லலாம்.
ஆனா எவ்வளவு சாதிச்சவர் கமல், அவருக்கும் கூட ‘களத்தூர் கண்ணம்மா’ தொடங்கி கண்ணம்மா பேட்டை வரைக்கும் இவ்வளவு தொடர்ச்சியான பஞ்சாயத்தா நினைக்கிறப்ப மனசு வலிக்குது பாஸ்,.
கே; தலைநகர் தில்லியில் ஒரு இளம்பெண் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக எழுதப்பட்ட தலையங்கத்தில், அவ்வாறு கற்பழிக்கப்பட்டதற்கு அப்பெண்ணே காரணம். ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கிறாரே தினமணி ஆசிரியர்? சம்பந்தன், கோவை.
கி: சில பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளைக் கற்பழிக்கும்போது, பத்திரிகை ஆசிரியராகிய நான் மட்டும் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று கேட்பது போலவே இருக்கிறது ‘தின’மணி’ ஆசிரியரின் தலையங்கம்.
நடுராத்திரியிலே ஏன் அந்த பஸ்ல ஏறுனே? ஒழுங்கா ட்ரெஸ் பண்ணியிருந்தியா?? போன்று அவர் தலையங்கத்தில் கேட்கும் கேள்விகளைப் படித்தபோது, பேசாம அந்த ஆளையும் கற்பழித்த ரவிடிகள் பட்டியலில் சேர்த்தால் என்ன என்று கேட்கத்தோன்றுகிறது.
கே: ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஒரு வெற்றிப்படம் என்கிறாரே கவுதம் மேனன்? ராம்ராஜ், வாணியம்பாடி.
கி: படத்துக்கு டைட்டில் வைக்கும்போது இலக்கண சுத்தமாக வைப்பாரே ஒழிய பேசும்போது மேனனுக்கு தமிழ் கொஞ்சம் ததிங்கணத்தோம் தான். அவர் அது ஒரு வெட்டிப்படம் என்று சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.