மணிரத்னத்தின் கடல் படம் டைட்டில் கடல் என்று வைத்திருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அவர் மீனவன், விடுதலைப் புலி, ராஜபக்ஷே என்று டைட்டில் வைத்திருந்தாலும் இனி எடுபடுமா? தெரியவில்லை. ஒரு வேளை பம்பாய் மாதிரி இதில் ஈழப்
படுகொலையை மையமாக வைத்து காசு பண்ணாமலிருந்தால் நிம்மதி.
மணிரத்னம் கடல் என்றாலும் மேல்தட்டு கடலைத் தானே காட்டுவார் என்பது நன்கு புரிந்து விட்டதாலோ என்னவோ ரஹ்மான் ஒரு ஆல்பத்துக்கு இசையமைப்பது போலவே இசையமைத்திருக்கிறார்.
வழக்கம் போல தனது குருவுக்கு அவர் அர்ப்பணிப்புடன் உருவாக்கிய பாடல்கள். இரண்டு பாடல்கள் கேட்கும் முதல் தடவையிலேயே நெஞ்சில் அப்பிக் கொள்ளும். மற்றும் மூன்று பாடல்கள் கொஞ்சம் கேட்டால் தான் ஒட்டும். அப்புறம் இரண்டு தேவலை ரகம்.
அடியே – சிட் ஸ்ரீராம்.
அடியே.. அடியே என்று அப்படியே கிராமியப் பாடல் தன்னை மெல்லிய வெஸ்டர்னாக மாற்றியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பாடலைக் கேட்கும் போது கிராமத்தில் வயக்காட்டில் நிலா வெளிச்சத்தில் கயத்துக்கட்டிலில் ஐபோனில் பாட்டுக் கேட்பது போல் இருக்கும். அதனாலென்ன? நிச்சயமான ஹிட் பாடல் இது.
அன்பின் வாசலே – ஹரிசரண்.
சர்ச்சில் பாடும் இயேசு நாதர் பாடலின் தோற்றத்தை யொட்டியிருக்கும் ஒரு பாடல். படத்தில் ஹீரோவோ, ஹீரோயினோ கிறித்துவர்கள் போல் தெரிகிறது (அலைகள் ஓய்வதில்லை பார்ட் -2 ?). பக்திப் பாடல் வகை.
சித்திரை நிலா – விஜய் ஏசுதாஸ்
கிராமத்திய இசையை நினைவூட்டவே இசையில்லாமல் பெரும்பாலும் வாய்ப்பாட்டின் திசையிலேயே பாடல் பயணிக்க இசையை அவ்வப்போது ஊடாடவிடும் பாடல். விஜய் ஏசுதாஸ் பாடியிருக்கிறார். வைரமுத்து ‘ஏடே’ ‘வாடே’ என்று நாகர்கோவில் பாஷையை பாடலில் ஏற்றுகிறார்.
ஏலே கீச்சான் – ஏ.ஆர்.ரஹ்மான்.
கிடாரின் மையமாகக் கொண்டு அதிர்வுக் கருவிகள் இல்லாமல் ரஹ்மான் பாடியிருக்கும் அருமையான பாடல். மேற்கத்திய இசையில் நாட்டுப்புறப் பாடல்களின் (கன்ட்ரி(country) இசை) டைப்பில் நம்ம நாட்டு நாட்டுப்புறப் பாட்டை முயன்றிருக்கிறார். கட்டுமரத்தில் போகும் போது பாடும் பாடல் போல வர வாய்ப்பிருக்கிறது. ‘ஹம்னே ஹே ஹீரோ’ என்று ஹீரோ பைக் விளம்பரப் பாடல் இதன் தொடர்ச்சி போலத் தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஹிட் ரகம்.
மகுடி மகுடி – ஆர்யன் தினேஷ், கனகரத்னம், சின்மயி, தன்வி ஷா
பப்களிலும், பார்களிலும் கொஞ்ச நாள் அதிரப் போகும் ஹிப் ஹாப் வகைப் பாடல் இது. பாடலின் கூடவே ஒரு பெண் மனசாட்சியின் குரல் போல பேசும் ரகசிய வார்த்தைகள் கிக் ஏற்றுகின்றன. வைரமுத்து வரிகளில் சூடு தெரிகிறது.
மூங்கில் தோட்டம் – அபேய் ஜோத்பர்கர், ஹரிணி
இது போதுமே இது போதுமே என்று பியானோ இசையின் பிண்ணணியில் பாடிக்கொண்டே இருக்கிறார்கள் அபேயும், ஹரிணியும். சுமார் ரகம்.
நெஞ்சுக்குள்ளே – சக்தி ஸ்ரீகோபாலன்
இசைக் கோர்வை பெரிதாயில்லாமல் சக்தி ஸ்ரீகோபாலனின் (இவர் கர்நாடக இசைப் பாடகியோ?) நெஞ்சுக்குள்ளே நீ ஒளிஞ்சிருக்க என்று பாடும் வரிகளாலேயே நம் நெஞ்சுக்குள் பாடலை சென்று ஒளித்து விடுகிறார் ரஹ்மான். கேளுங்கள்.
கடல். வழக்கம் போல் ரஹ்மானின் ஆர்ப்பாட்டமான அரபிக் கடல் தான்.
–மருதுபாண்டி