நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பின் இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் பட ஆல்பம்.
இளையராஜா நீதானே என் பொன் வசந்தத்தில் தன்னையே புதுமையாக மாற்றிச் செய்த பரிசோதனைகள் மாதிரி எதுவும் இப்படத்தில் செய்யவில்லை.
அதே 80-90 கால இளையராஜாவாகவே அதே சத்தங்களுடன் அதே விதம் விதமான ட்யூன்களுடன், அதே தன்மை மாறாமல் இசையமைத்துள்ள படங்களில் மற்றுமொரு படம்.
1. குதிக்குதம்மா – இளையராஜா – முத்துலிங்கம்.
காவிரி ஆற்றில் ஹீரோவாக இளையராஜா நின்று பாடுகிறார். அவருடைய எவ்வளவோ படங்களில் கேட்டிருக்கும் (பழமுதிர்ச்சோலை-வருஷம் 16, சொர்க்கமே என்றாலும் – ஊருவிட்டு ஊருவந்து) பாடல்களின் சாயல் கொண்ட பாடல். கேட்டு ரசிக்கலாம்.
2. சிக்கிமுக்கி சிக்கிமுக்கி – ஆண்ட்ரியா, ராகுல் – நா.முத்துக்குமார்.
ஆண்ட்ரியாவின் ராகுல் குரல்களில் மற்றுமொரு ராஜாவின் மிட் நைட் மசாலாப் பாடல். ரசிக்கும்படி இருக்கிறது.
3. ராத்திரி நேரத்து – ஸ்ரீவர்த்தினி – பழனி பாரதி
ஆசைய காத்துல தூதுவிட்டேன் பாட்டை அப்படியே போட்டிருக்கிறார். இசைக்கருவிகளை கூட மாற்றவில்லை. பாடல் வரிகள் மட்டும் மாற்றியிருக்கிறார். ஸ்ரீவர்த்தினியின் குரல் பழைய எஸ்.பி.சைலஜாவின் குரலை அப்படியே ஒத்திருக்கிறது. பழைய பாடலில் இருந்த சிரத்தை ஸ்ரீவர்த்தினியிடம் கொஞ்சம் குறைவு. பழனி பாரதி சிரத்தையாக புது வரிகளைச் சேர்த்துள்ளார்.
4. அலையோடு அலையாக – பவதாரிணி – பழனி பாரதி
பவதாரிணி பாடும் பாட்டு. ஏற்கனவே ராஜாவிடம் கேட்ட எத்தனையோ ஹீரோயின் தனித்து பாடும் கிராமத்துப் மெலடிகளில் ஒன்று. கேட்கலாம்.
5. எங்கு இருக்கு என் கோழி – மனோ, அனிதா – மு.மேத்தா
ஹீரோ,ஹீரோயின் ஒருவரை ஒருவர் பார்த்துப் விரகத்துடன் பாடும் டூயட் பாடல். 80களில் வரும் பாடலின் அமைப்பிலேயே இசையமைப்பு இருக்கிறது. அத்தோடு 80களில் பாப்புலரான மனோவும் பாடியிருக்கிறார். தனது பழைய ஆஸ்தான கவிஞர்களில் ஒருவர் மு.மேத்தாவுக்கு வாய்ப்பு மீண்டும் கொடுத்திருக்கிறார் இளையராஜா.
6. என் ஊரு ஈரோடு – ரம்யா, என்.எஸ் – நா.முத்துக்குமார்
கிராமத்து தெருக்கூத்து டைப்பில் இருக்கும் பாடல். நா.முத்துக்குமார் தெருக்கூத்து ஸ்டைலில் எழுத நன்றாக முயற்சி செய்திருக்கிறார். கேட்டு ரசிக்கக்கூடிய பாட்டு. ஹிட்டாகும்.
7. வச்சானி வயசு – கீதா மாதுரி – ஆர். ராமு
ராஜாவின் பழைய மச்சானப் பார்த்தீங்களா பாட்டை அப்படியே மீண்டும் போட்டுள்ளார் ராஜா. தெலுங்கு பாடல் வரிகள். வரிகளும் அப்படியே தெலுங்கில் டப் செய்யப்பட்டது போலவே தோற்றம் தருகிறது. உங்கள்ல யாருக்காச்சும் தெலுங்கு தெலுசுன்னா பாட்டு அதேவா இல்லை வேறயான்னு கேட்டுச் சொல்லுங்களேன்.
மொத்தத்தில் இது ராஜா ரசிகர்களுக்கு கேட்க ஓகேவான படம். மற்றவர்களுக்கு இசையில் புதுமையாய் கவர ராஜா எதுவும் இந்தப் படத்தில் கொடுக்கவில்லை.