கதை, திரைக்கதை, நெறியாள்கை, இசை எட்ஸ்ட்ரா.. எட்ஸ்ட்ரா என்று நீள பட்டியல் போட்டு கடைசியில் தங்கர் மச்சான் அல்லது டி.ஆர் என்று போடுவதற்கே நாம் டென்ஷனாகி தியேட்டர் வாசலில் உயிரைக் கையில் பிடித்து நின்றது அறிந்ததே. நிற்க.
‘ஒன்’ என்னும் பெயரிலான ஒரு படத்தை முழுக்க முழுக்க ஒருவர் மட்டுமே உருவாக்கியிருக்கிறார்.
ஆம் வெங்காயம் படத்தின் இயக்குனரான சங்ககிரி ராஜ்குமார் தான் அவர். அவர் ஒருவரே இந்த படத்தை உதவியாளர், லைட் மேன், கேமாரா மேன், ட்ராலி மேன், இசை, ஒலிப்பதிவு, பாடல்கள், நடிப்பு, டப்பிங், கிராபிக்ஸ் எபக்ட்ஸ், எடிட்டிங், பிண்ணனி இசை, செட் டைரக்டர், இயக்கம் என்று சினிமாவில் என்னென்ன உண்டோ அனைத்து துறை விஷயங்களையும் அவர் ஒருவரே செய்திருப்பதாகச் சொல்கிறார்.
இந்த படத்தை பொறுத்தவரை இயக்குனரும் அவரே நடிகரும் அவரே ஆபிஸ் பாயும் அவரே காட்சிகளுக்காக லொகேஷன் பார்த்ததும் அவரே.கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உத்திகளை கையாண்டதும் அவரே.
நம்பவே முடியாமல் இருக்கும் இந்த விஷயத்தை இவர் செய்திருக்கிறார். இது நிச்சயம் ஒரு கின்னஸ் சாதனை விஷயமாக இருக்கலாம்.
படத்தில் 300க்கும் மேற்ப்படட நடிகர்கள் வருகின்றனர் என்று சொல்லும் ராஜ்குமார் அவ்வளவு பேராகவும் கிராபிக்ஸ் உதவியோடு தானே தோன்றுவதாக கூறுகிறார்.குறிப்பிட்ட ஒரு காட்சியில் மட்டும் தியேட்டரில் 500 பேருக்கு மேல் படம் பார்ப்பதாக அமைத்திருப்பதாக (அந்த 500 பேரும் அவரேவாம்) அவர் கூறுகிறார்.
திரைப்படத்துறையில் கவனம் பெற வேண்டும் என்றால் ஒன்று பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டும் அல்லது வித்தியாசமான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறும் ராஜ்குமார் தான் வித்தியாசமான வழியை தேர்வு செய்து ,தனி மனிதனாக ஒரு படத்தை உருவாக்கி காட்ட தீர்மானித்தாக கூறுகிறார்.இதற்காக 2003 முதல் திரைப்படத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறுபவர் இதற்கு 5 ஆண்டுகள் போதுமானது என நினைத்ததற்கு மாறாக 9 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறுகிறார்.
ஒருவராலேயே ஒரு படத்தை எடுத்து விட முடியுமா?இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்காகவே தான் தனியொருவனாக படம் எடுத்ததை காமிராவிலும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார். இதைத் தனியொருவனாக நின்று செய்த போது பெரிய ரிஸ்க் எடுத்து காரியங்கள் செய்தேன். நிறைய இடங்களில் விழுந்து அடிபட்டேன் என்கிறார் ராஜ்குமார். இந்த அனுபவம் சவாலானதாக இருந்தது ஆனால் நேசித்து செய்தேன் என்கிறார்.
ஆங்கிலத்தில் உருவாகும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அமெரிக்காவில் திரையிட அழைத்திருப்பதாக ராஜ்குமார் உற்சாகமாக கூறுகிறார். நிஜமாங்க இது?
படத்தின் 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன.விரைவில் எல்லா வேலைகளும் முடிந்து சர்வதேச அளவில் ஒன் திரைப்படம் வெளியாக உள்ளது.
ராஜ்குமார், சும்மா சாதனைக்குன்னு, அவார்டுக்குன்னு சிலபேர் மாதிரி எதையாவது சவசவன்னு எடுத்து வைக்காமல் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்திலும் நீங்கள் நிஜமாகவே நம்பர் ஒன் என்று காட்டும் பட்சத்தில் உங்களுக்காக கண்டிப்பா நாங்கள் ஒரு ‘ஓ’ போடுவோம்.