‘நடித்ததுபோதும், இனி மீதி வாழ்நாட்களை, ஆன்மீகப்பணிகளுக்கு அர்ப்பணித்து, ஓய்வெடுத்து கழிப்போம்’ என்று முடிவெடுத்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினியை, ‘ அடடா அப்பிடியெல்லாம் உங்கள போகவிட்டுரமாட்டோம் சார்’ என்று உலுக்கி எடுத்துவிட்டதாம் ஒரு இயக்குனரின் சமீபத்திய அறிக்கை.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ட்ரீட்மெண்டாக, சமீபத்தில் ‘திருத்தணி’ என்னும் படத்தை இயக்கி, இசையமைத்து வெளியிட்டிருந்த பேரரசுதான் அவர்.
மலையாளத்தில் அடுத்து இயக்கவிருக்கும் ‘சாம்ராஜ்யம் பார்ட்-2’வுக்காக கேரள மலைவாசஸ்தலம் ஒன்றில் முகாமிட்டிருக்கும் பேரரசுவை, கடந்தவாரம் மலையாள மலைக்குரங்கு ஒன்று பின்பக்கத்தில் பிடுங்கி எடுத்துவிட்டதாம். இதனால் சற்றே சித்தம் கலங்கிப் போயிருந்த அவர், மலை உச்சியில் கடந்த 5 தினங்களாக முகாமிட்டிருந்ததில், ஒரு மெர்சலான கதை உருவானதாம்.
‘குண்டக்கமண்டக்க குப்புற மல்லாக்க என்று எல்லா பொசிஷன்களிலும் படுத்து யோசித்துப் பார்த்ததில் இந்தக்கதை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சூப்பராக பொருந்தும் என்று எனக்குத்தோன்றுகிறது. எனவே ‘கோச்சடையானோடு’ அவர் தமிழ்சினிமாவை விட்டு கோவிச்சிக்கொண்டு போவதை மறுபரிசீலனை செய்து கடைசியாக என் படத்தில் நடித்துவிட்டுப் போகவேண்டும்’ என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் பேரரசு.
கதையைப்பற்றி சுருக்கமாக ஏதாவது சொல்லமுடியுமா என்று கேட்டால், ‘அதைப்பத்தி ரஜினி சார் தவிர யார்கிட்டயும் மூச் விடுறதா இல்லை’ என்று இறுக்கமாக தனது முகத்தை வைத்துக்கொள்கிறார்.
‘ங்கொய்யால மாயன் காலண்டர் பிரகாரம் ஒலகம் அழியலைன்னவுடனே அவ்வளவு திமிராடா உங்களுக்கு, இதோ ரஜினி சப்ஜெக்டோட வாரேண்டா’- பேயரசு