இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 என்கிற விசேஷமான நாளில் வருவதாலோ என்னவோ, ஒரு பக்கம் எல்லா கடைகளும் சிறப்புத் தள்ளுபடி தள்ளுபடி என்று கூவி விற்க, மறுபக்கத்தில் சிவாஜி 3டியில் ரிலீசாக, இன்னொரு பக்கத்தில் ரஜினி அமைதியாக எளிமையாக ரசிகர்களை சந்தித்து பிறந்த நாளைக் கொண்டாடினார்.
வழக்கமாக அவர் இமயமலை அல்லது கேதார் நாத் அல்லது நேபாளம் என்று எங்காவது கண் காணாமல் போய்விடுவார். அப்போது அவர் மிகவும் கரண்ட்டில் இருந்ததால் அவருக்கு அந்த ப்ரேக் தேவையும் பட்டது.
இப்போது கோச்சடையான் தவிர வேறு படங்கள் நடிக்கவில்லை. அடுத்து படம் நடிக்கலாமா அல்லது போதுமா என்று மனதில் யோசித்தபடி இருக்கும் தமிழக சூப்பர் ஸ்டார் இந்த வருடம் பிறந்த நாளில் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சந்தித்தார். அவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார்.
போயஸ் கார்டனெங்கும் ரசிகர்கள் கூட்டம் மடைகட்டி நிற்க ரஜினி வீட்டின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த ஒரு சிறு மேடை மீது ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். பின்பு அவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை வாங்கினார். கைகுலுக்கி, படங்கள் எடுத்துக் கொண்டார்.
பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது அவர்கள் கோச்சடையான் படம் பற்றிக் கேட்டார்கள். அவர் தனது பிறந்த நாளில் சிவாஜி 3D படம் வெளியாவது தனக்கு மகிழ்ச்சி எனவும் அவருக்கு ரொம்ப ஆச்சரியம் தந்த படம் அது எனவும் கூறினார்.
சிவாஜி போலல்லாது கோச்சடையான் முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் என்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப் படுகிறது. அதில் அவரது அசைவுகளை அவரை நடிக்கை வைத்து வெளிக்கோடாக கம்ப்யூட்டரில் அந்த அசைவுகளை சேமித்து விடுவார்கள்.
பின்பு முகம், கை, கால்கள் போன்றவற்றிற்கு கிராபிக்ஸ் பயன்படுத்தி நன்கு இளமையான கிராபிக்ஸ் கதாபாத்திரமாக கோச்சடையான் வருவார். இந்தியாவிலேயே முதல் முறையாக இம்முறை கோச்சடையானில் தான் முயற்சி செய்யப்படுகிறது.
ரசிகர்களுக்கு பிறந்த நாள் செய்தி என்ன என்று கேட்ட போது “வாழ்க்கையை நெகட்டிவ்வாக பார்க்க வேண்டாம். பாசிட்டிவ்வாகப் பாருங்கள். என் பிறந்த நாளை நீங்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி தான். அதைப் போல உங்கள் அம்மா அப்பாவின் பிறந்த நாட்களையும் அவர்களுடன் நீங்கள் கொண்டாடி அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். அதுவே என் விருப்பம் ” என்று முடித்தார் ரஜினி காந்த்.
ரஜினி காந்த் ஒரு நல்ல, எளிமையான மனிதர். அத்தோடு அவருக்கு அரசியல் ஞானமும் கொஞ்சம் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் மக்களை விரும்பக்கூடிய, மக்களும் விரும்பக்கூடிய ஒரு நல்ல தலைவர் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.