லட்சணத்திற்கும் அவ லட்சணத்திற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. சில படங்களின் போஸ்டர்களே சொல்லிவிடும் அதன் லட்சணத்தை!
ஆனால் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட ஒரு ட்ரெய்லரும், பாடலும் இந்த வருடத்தின் பம்பர்
ஹிட் படம்தான் இது என்பதை சொல்லாமல் சொன்னது.
அரட்டைக்கும்பல் அத்தனையும் ஓரிடத்தில் இருந்தால் எப்படியிருக்கும், அப்படியிருந்தது விழாவும், திரையிடப்பட்ட அந்த க்ளிப்பிங்ஸ்களும்!
‘நான் இதுக்கு முன்னாடி ரெண்டு படத்தில் நடிச்சுருக்கேன். ஒண்ணு தெலுங்குல. இன்னொன்னு இந்தியில. அதை சில நு£று பேரு பார்த்திருக்காங்க’ என்று உண்மையை போட்டு டமாலென்று உடைத்தார் படத்தின் ஹீரோ சுந்தீப்கிஷன். ஒரு படுபயங்கரமான சோம்பேறிக்கு காதல் வந்தால் எப்படியிருக்கும்? இதுதான் கதை. அப்படியே என் வாழ்க்கையை எடுத்தா எப்படியிருக்கும், அப்படியிருந்துச்சு கதையை கேட்கும்போது என்றார் இந்த ஹீரோ.
சில டைரக்டர்களுக்குதான் இப்படியெல்லாம் அதிர்ஷ்டம் வாய்க்கும் என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த சக இயக்குனர்களே பொறாமைப்பட்டார்கள். வேறொன்றுமில்லை, இந்த கதையை ஒரு குறும்படமாக எடுக்கதான் ஆசைப்பட்டாராம் டைரக்டர் மதன்குமார். கதையை கேட்ட தயாரிப்பாளர், ஒரு முழு சினிமாகவே எடுக்கலாம் போலிருக்கே. எடுங்க என்று கூறிவிட்டாராம்.
‘ஒரிஜனல் மியூசிக் பை’ கோபிசுந்தர் என்று பிரஸ் ரிலீசில் அச்சிட்டிருந்தார்கள். (இதுக்கே தனி தில்லு வேணும்) இந்த ஒரிஜனல் மியூசிக்கும் செம கரைச்சலாக இருந்தது. அதிலும் ஒரு குத்துப்பாட்டு முந்தைய ஹிட் குத்துகளுக்கெல்லாம் சவால் விடும் போலிருந்தது.
‘யாருடா மகேஷ்’ என்று ஊரே ஆச்சர்யமாக பேசுகிற நாள் ரொம்ப து£ரத்தில் இல்லை என்பது மட்டும் புரிந்தது.