ஜீவா, விக்ரம் இணைந்து நடிக்கும் ‘டேவிட்’ இந்தி மற்றும் தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று ராணி சீதை ஹாலில் நடந்தது. மணிரத்னத்தின் உதவியாளரும், ஏற்கனவே இந்தியில் ‘சைத்தான்’ என்ற படத்தை இயக்கியவருமான பிஜாய் நம்பியாரின் இரண்டாவது படமான ‘டேவிட்’ க்கு, நம்ம கொலவெறி பாய்
அனிருத் உட்பட மொத்தம் ஆறு இசையமைப்பாளர்கள்.
அப்ப ஆளுக்கொரு பாட்டுன்னு வச்சாலே படத்துல மொத்தம் ஆறு பாட்டு வருமே? என்று நீங்கள் ஆச்சரியப்படுவதாய் இருந்தால், அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக்கொள்ளுங்கள். தமிழ் ‘டேவிட்’டில் ஒன்பது பாடல்களும்,இந்தியில் 15 பாடல்களும் இடம்பெறுகின்றன.
நடிகர் ஜீவா தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மட்டும் வந்திருக்க, தனது மார்க்கெட் இறங்கி விட்டதோ என்ற சந்தேகத்தாலோ என்னவோ விக்ரம் ஏகப்பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஜீவா தனக்கு படத்தில் சண்டைக்காட்சி ஒன்றில் டைரக்டரும். ஸ்டண்ட் மாஸ்டரும் பெண்டு கழட்டியதைப் பற்றி விலாவாரியாக விளக்க, விக்ரமுக்கோ படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவரான இஷா ஷெர்வானியை சிலாகிக்கவே நேரம் போதவில்லை.
‘அந்தப்பொண்ணு ஜிம்முல எக்ஸர்சைஸ் பண்ணுற ஸ்டைலைப் பாத்து மிரண்டு போயிருக்கேன். [லேடீஸ் ஜிம்முல உங்களுக்கு என்னவேலை டேவிட்?] காலைத்தூக்கி சர்வசாதாரணமா கழுத்துக்கு மேல போடுது. இன்னொரு கால் ஆகாயத்தை நோக்கி செங்குத்தா போகுது. நானே பார்த்து மிரண்டு போயிட்டேன்.இன்னைக்கு இந்தியாவுல பெஸ்ட் ஹீரோயின் யாருன்னு கேட்டா நான் இஷாவைத்தான் சொல்வேன்’’ என்று அநியாயத்துக்கு ஐஸ் வைத்தார் விக்ரம்.
மேற்படி இஷா ஷெர்வானியைக் கரெக்ட் பண்ணும் எண்ணத்திலோ என்னவோ ஒருவகையான ப்ரவுன் கலர் ஷெர்வானி ஆடையில்தான் வந்திருந்தார் அண்ணன் அனிருத். படத்துக்கு அவர் இசையமைத்திருந்தது ‘நினைவே நினைவே’ என்னும் காதல் தோல்விப்பாடலுக்கு. அண்ணி ஆண்ட்ரியாவின் ஞாபக சுதியோடு இசையமைத்திருப்பார் போல. பாடலில் அப்படி ஒரு காதல்தோல்வி ரசம் பொங்கி வழிந்தது.