ilayaraja

’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்கு, நாளை, மதுரையில் இசைவெளியீட்டு விழா நடக்கவிருப்பதாக, நேற்று அழைப்பிதழ் வந்திருந்தது இயக்குனர் பாரதிராசாவிடமிருந்து.

‘அன்னக்கொடி’யில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்தே, பாவம் பாரதிராசாவுக்கு அடிமேல் அடி விழுந்துகொண்டே இருந்தது.

தற்போது அழைப்பிதழ் மூலமும், நல்ல ரசனையுள்ள தமிழ்சினிமா ரசிகர்களிடம், செல்லக்கடி வாங்கவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார் பாரதிராசா.

துரதிர்ஷ்டவசமாக, உலகின் ஒப்பற்ற இசையமைப்பாளனை உயிர்த்தோழனாக வைத்துக்கொண்டு, கத்துக்குட்டிகளிடம் மியூசிக் கேட்டு காத்துக்கிடக்கும் கொடூர நிலைக்கு ஆளாகியுள்ளதை கொஞ்சம் தாமதமாகவேனும் புரிந்துகொண்டு, ‘அன்னக்கொடி’ இசைவெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க இசைஞானியையே தேர்வு செய்திருக்கிறார் பாரதிராசா.

இந்த எண்ணத்தின் முதல் புள்ளி கவுதம் வாசுதேவமேனனின் ‘நீதானே பொன்வசந்தம்’ விழாவின் போதுதான் ஏற்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் ராஜாவிடம் ‘செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த’ எண்ணற்ற பாடல்களை வாங்கிய முன்னணி இயக்குனர்கள் அனைவரும், ‘கவுதம் அளவுக்கு நாம யாருமே ராஜாவை கவுரவப்படுத்தினதில்லையே’ என்று எட்டு கட்டைக்கு உள்ளம் கூசிய உன்னத தினம் அது.

மற்றவர்கள் நிலையே அதுவென்றால், உயிர்த்தோழனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அந்த நாள் முதலே, ராஜாவைக் கவுரவிக்க, உலகசினிமா இதுவரை கண்டிராத விழா ஒன்றை மதுரையில் நடத்தவேண்டும் என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் பேசிவருகிற பாரதிராஜா, அதற்கு முன்னோட்டமாய் சின்னதாக ஒரு ட்ரெயிலர் ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டதன் விளைவுதான் ‘அ.கொ.கொ.வி’க்கு இசைஞானியின் தலைமை ஏற்பு.

இன்னொரு பக்கம், பரமக்குடி சண்டியர்களெல்லாம் மதுரையில் திருவிழா அளவுக்கு கூட்டம் கூட்டும்போது இந்த பாரதி,ராஜாக்களால் முடியாதா? என்ற வீராப்பு.

ஆனால் இந்த வீராப்பை நினைத்து இறுமாப்பு கொள்ளமுடியாத அளவுக்கு அழைப்பிதழில் பெரும்பிழை செய்திருக்கிறார் பாரதிராசா. இளையராஜாவின் தோழுக்குப் பின்னால் பாரதிராஜா நிற்க, அவருக்குப் பின்னால் ‘moneyரதனம் நிற்க, இவருக்குப்பின்னால் போய், தமிழ் சினிமாவின் மாமேதைகளான பாலுமகேந்திராவும், மகேந்திரனும் நிற்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

காவியங்கள் என்று சொல்லி காலகாலத்துக்கும் கொண்டாடக்கூடிய அற்புதமான படைப்புகளைத்தந்தவர்கள் மகேந்திரனும், பாலுமகேந்திராவும். ஆனால் உத்திகளையே சினிமாவாக்கி, தனது புத்தி முழுக்க துட்டு பார்ப்பதிலேயே கவனம் செலுத்துபவர் மணிரத்னம். அதுவும் இசைஞானியின் இசையமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, கழுதை தேய்ந்து கரப்பான்பூச்சியாய் ஆன கதையாய், படத்துக்குப் படம் இவரது தடம் தளர்ந்துகொண்டே வருவதை சுஹாசினியே பலமுறை சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளார்.

நிலைமை இப்படியிருக்க, அழைப்பிதழில் மணிரத்னத்துக்குப் பின்னால் பாலுமகேந்திராவையும், மகேந்திரனையும் நிறுத்தி, ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை புரிந்தமைக்காக, மதுரை விழாவில் பாரதிராசா மன்னிப்புக்கேட்கவேண்டும். அப்படிக் கேட்காவிட்டால்,..? கேட்காவிட்டால்,..?? கேட்காவிட்டால்,..???

யோசிக்கனும், கொஞ்சம் டைம் குடுங்க சார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.