தனது இளம்பருவத்து தோழிகளையெல்லாம் சினிமாவில் கதாநாயகிகளாக களம் இறக்கி விடுவது என்று விஷால் கங்கணம் கட்டியிருப்பார் போலும். சரத்தின் மகள் வரலட்சுமிக்கு அடுத்தபடியாக, இப்போது அவருடன் டூயட் பாட
களம் இறங்கியிருப்பவர் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா.
பெத்ததுக்கு அப்புறம் பேரு வச்சாங்களா, அல்லது இப்படி பேரை வச்சிட்டுப் பெத்தாங்களான்னு நினைக்கிற அளவுக்கு, அப்படி ஒரு ஐஸ்வர்யமான பொண்ணுதான்.
’சிந்து சமவெளி’ படத்தயாரிப்புக்கு அப்புறமா அரசியல் வழியா அரசல்புரசலா ஆஜராகி எம்.எல்.ஏ.வும் ஆனதுக்கு அப்புறம் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிற ‘பட்டத்து யானை’ படத்துலதான் ஐஸ்வர்யா பட்டத்து அரசியா மகுடம் சூட்டுறாங்க. டைரக்டர் பூபதிபாண்டியன்.
‘ என் மகளுக்கு நடிப்பு ஆசையெல்லாம் இருந்ததில்லை. திடீர்னு ஒருநாள், விஷாலை வச்சி நான் இயக்குற படத்துக்கு ஹீரோயினா உங்க பொண்ணு நடிச்சா நல்லாருக்கும்னு பூபதி ஒரு கதை சொன்னார்.அந்தக் கதை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருந்தது.அதனால நடிக்க ஒத்துக்கிட்டா.
பிள்ளைங்க என்னவாக ஆசைப்படுறாங்களோ, அதுக்கான பாதையை உருவாக்கி, அவங்களை ஜெயிக்க வச்சிப் பாக்குறதுதான் பெற்றோர்களோட கடமைன்னு நினைக்கிறவன் நான்.
என் மக நடிக்கிறான்னு கேள்விப்பட்ட உடனே வாழ்த்துச்சொன்னவங்க சிலபேர். இன்னும் சிலரோ பொம்பளப் பிள்ளையப்போய் சினிமாவுல இறக்குறீங்களேன்னும் கேட்டாங்க.கடந்த 30 வருஷங்களா எனக்கு பணம் புகழ், அந்தஸ்து கொடுத்தது இந்த சினிமாத்துறைதான். இதைப் பத்தி யார் தப்பா சொன்னாலும் நான் பொருட்படுத்தமாட்டேன். எல்லாதுறைகள்லயும் இருக்கமாதிரிதான் இங்கேயும் நல்லவங்களும் கெட்டவங்களும் இருக்காங்க.
என் பொண்ண நான் பொறுப்பானவளா வளர்த்திருக்கேன். இன்னும் சொல்லப்போனா அவளை ஒரு பையன் மாதிரி தைரியசாலியா வளர்த்திருக்கேன்’ என்று ஆக்ஷன் அப்பாவாகவே மாறினார் அர்ஜுன்.
அப்பாவின் அறிமுகத்துக்கு அடுத்து மைக்கைப்பிடித்து,’ சினிமாவுக்கு 100சதவிகிதம் விசுவாசமாக இருப்பேன்’ என்று ஓரிரு வார்த்தைகளே பேசிய ஐஸ்வர்யா பிரிடிஷ் ஆங்கிலத்தில் பொழந்துகட்டினார்.
ஷூட்டிங் டைம்ல கொஞ்சம் ‘ஆனா ஆவன்னா, ஐயன்னா’ கத்துக்கங்க ஐஸ்வர்யா.