‘விஸ்வரூபம்’ தொடர்பாக கமலை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ அவரவர் மனநிலை சம்பந்தப்பட்டது. இப்படம் பாதியில் நின்று கமலே தயாரிப்பாளராக மாறிய நாளில் தொடங்கி, இன்று வரை, இப்பட விவகாரங்களுக்கு தக்கவாறு கமலை ஆதரிப்பது, விமரிசிப்பது ஆகிய இரு காரியங்களையுமே ’ஹல்லோ’ தயங்காமல் செய்திருக்கிறது.
’படத்தின் பட்ஜெட் 120 கோடி’ என்று ’தினத்தந்தி’க்கு மட்டும் கமல் பிரத்தியேகமாகப் புழுகியபோது ‘120 கோடியும் கமல் என்னும் கேடியும்’ என்று தலைப்பிட்டு, பேராசையால், அவருக்கு நேரவிருக்கும் பேராபத்தை அன்றே எச்சரித்தோம்.
அடுத்து ‘விஸ்வரூபம்’ தொடர்பாக கமல் எடுத்து வைத்த அத்தனை அடிகளுமே அவருக்கு தர்ம அடியாகவே மாறின. தியேட்டர் தர்மகர்த்தாக்களின் டி.டி.ஹெச்’ அடி முடிந்து, தற்போது சிறுபான்மைக்கு எதிரான படம் என்ற பெயரில் பெரும்பானமையானவர்கள் கிளம்ப, ‘அழுகையில எவ்வளவு வெரைட்டி பாத்தவன் நான். ஆனா இப்ப எப்பிடி அழுகுறதுன்னு கூட தெரியலையே’ என்று மய்யமாகக் குழம்பிப்போய் இருக்கிறாராம். அடிக்க ஆரம்பிப்பவர்களும் ‘இவரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு. ரொம்ப நல்லவரா இருக்குறாருடா’ என்றே மேலும் மேலும் கண்மூடித்தனமான வன்முறையில் இறங்குகிறார்கள்.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட படத்தை நீதிபதிகள் பார்த்து தீர்ப்புச்சொல்லவேண்டிய நிலையில், கமலுக்குக் கொஞ்சமாய் வக்காலத்து வாங்கிவிட்டு நடுநிலை வகிக்கிறேன் என்ற பெயரில் ரஜினி வெளியிட்ட அறிக்கையால் துயரத்தின் உச்சிக்கே போய்விட்டாராம் கமல். ‘கமல் என் நாற்பதாண்டு கால நண்பர். ரொம்ப நல்ல கலைஞர். அவர் முஸ்லீம்களுக்கு எதிராகப்படம் எடுக்கக்கூடியவரல்ல’ என்கிறவரை நன்றாகப்போய்க்கொண்டிருந்த ரஜினி, அறிக்கையின் இறுதியில், ‘பட்த்தை மொத்தமா தடை பண்ணீராம, உக்காந்து பேசி, வெட்ட வேண்டியதை வெட்டிட்டு ரிலீஸ் பண்ணிவிட்டிடுங்க’ என்று மிலாது நபி வாழ்த்துக்களுடன் அறிக்கை வெளியிட்டு கமலை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டிருக்கிறார் ரஜினி.
ரஜினியைப் போல் கி.வீரமணியும் நடுநிலை அறிக்கையுடன் கிளம்ப, அந்த வரிசையில் இன்னும் ஏகப்பட்ட நடுநிலையாளர்கள் கிளம்பவிருப்பதாகத் தகவல்.
‘ஐயா ரஜினி உட்பட்ட நடுநிலையாளப் புண்ணியவான்களே.
உலகத்துல எல்லாவிசயங்களுக்கும் நல்லது அல்லது கெட்டதுங்கிற ஏதோ ஒருநிலைதான் இருக்கு. நடுநிலைங்கிறது சுத்த ஹம்பக், சீட்டிங், தத்துவரித்தனம் இப்பிடி இன்னும் என்னென்னவோ சொல்லலாம். இன்னும் சுருக்கமா கமல் பாஷையில சொன்னா நடுநிலைங்குறது ஒரு கெட்டவார்த்தை. அதனால இனிமே நடுநிலை பேச யாரும் அறிக்கையோட வராதீங்க. ஒண்ணு, சென்சாரைத்தாண்டி படத்தைத் தடை பண்ண நீ யாரு? ன்னு தெளிவா கமலுக்கும், நியாயத்துக்கும் சப்போர்ட் பண்ணுங்க. இல்லைன்னா, கமல் செஞ்சது தப்புன்னு சொல்லி விஸ்வரூபம்’ படப்பொட்டியைத் தூக்கி இந்துமகா சமுத்திரக் கடல்ல போடுங்க. ஆனா தயவு செய்து நடுநிலை பேசி நழுவாதீங்க,…