2013 தனது பூதா கரங்களுக்குள் அடுத்த 364 நாட்களுக்கு என்னென்ன ரகசியங்களையெல்லாம் ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் வருடத்தின் முதல் நாளே முன்னூத்திச்சொச்ச நாட்களுக்கான பேரதிர்ச்சிகளையும் ஓரதிர்ச்சியாக்கி உட்லாண்ட்ஸ் தியேட்டர்
நம்மை வரவேற்றது.
யெஸ்,உட்லாண்ட்ஸ் தியேட்டரில்தான், புத்தாண்டின் து[வ]க்க நாளும் அதுவுமாய், தேவயானி ராஜகுமாரன் தனது ‘திருமதி தமிழ்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலரை வெளியிட்டு, படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களையும் ஒளிபரப்பி நம் விழி நிரப்பினார்.
’,..ராஜகுமாரனை திரையில் பார்த்தபோது,.. காண்பவர்களை கதிகலங்கவைக்கும் அவரது காஸ்ட்யூம், இரண்டு கால்கள் இல்லாதவர்களையும் எழுந்து நின்று ஆடத்தூண்டும் டான்ஸ் மூவ்மெண்ட், எதிரிகளை அவர் உருட்டுக்கட்டிகளுடன் புரட்டி எடுத்தபோது நமக்கு எடுத்த வலி, தலைவி தேவயானி மற்றும் கீர்த்தி சாவ்லாவை கிள்ளுக்கீரையாய் அள்ளி முடிந்தபோது நமக்கும் ஏற்பட்ட ஒரு கிளுகிளுப்பு,, ஒரு ஃப்ரேமில் ஏழெட்டு ராஜகுமாரன்கள் தோன்றி ஒருத்தர் கிடார் வாசிக்க, இன்னொருத்தர் ட்ரம்ஸ் வாசிக்க, அடுத்தொருத்தர் அண்ணி தேவயானியிடம் காதலை யாசிக்க,…’ இப்படி சொல்லில் அடங்காமல் சொல்லிக்கொண்டே போகலாம், ‘திருமதி தமிழை’ தரிசித்த அனுபவத்தை.
சுருக்கமாகச் சொல்வதானால், ட்ரெயிலரையும் பாடல்களையும் பார்த்த பிறகு, படத்தை சீக்கிரம் பாக்கலைன்னா பைத்தியமே பிடித்து விடும் என்கிற மனநிலைக்கு நாம் தள்ளப்படுவது உறுதி.
அப்ப படம் பாத்தபிறகு என்ன மனநிலைக்கு தள்ளப்படுவோம்? அதை படம் பாத்தபிறகு பாத்துக்கலாம்ங்குறீங்களா? சரி, விடுங்க. படம் பாத்தபிறகு நீங்களே உங்களை எப்பிடிப் பாத்துக்கமுடியும்? மத்தவங்க பாத்துக்குவாங்க.