’எப்போதுமே ரஜினி ஒரு கேள்விக்குறிதான். அரசியல் மாதிரியே சினிமாவிலும் சில நேரங்களில் அவர் நடவடிக்கையைப் புரிந்துகொள்வது கஷ்டம்.
சேவை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ் திரையுலகத்தினர் அறிவித்திருந்த
உண்ணாவிரத போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று காலை தொடங்கியது. இந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறிது நேரம் உண்ணாவிரத மேடையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த், இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு, மதிய உணவு நேரத்துக்கு முன் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
ரஜினி பேசியபோது, “கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர, மத்திய அரசு பெரிய பெரிய திட்டங்களைப் போடும்போது, வரிகளை மேலும் மேலும் உயர்த்துகிறது. ஆனால் இப்படிச் செய்வதால் கறுப்பு பணம்தான் அதிகரிக்கும் என்பது அரசுக்கு தெரியாததல்ல.
கறுப்புப் பணத்தை ஒழிக்க, வரி செலுத்தாதவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அதே நேரம், இந்த கோரிக்கைகளை ஏற்று சேவை வரியை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
காலையில் ‘ரஜினி நிகழ்ச்சிக்கு உறுதியாக வரமாட்டார்’ என்று பேசிக்கொண்டிருந்தவர்கள், அவர் திடீரென கிளம்பிப்போனதும், ‘வந்தாரு பட்டும் படாம ரெண்டு வார்த்தை பேசினாரு. அப்புறம் அவர் பாட்டுக்க கிளம்பிப்போயிட்டாரு’.என்று மீண்டும் சலசலக்க ஆரம்பித்தார்கள்.
இண்டஸ்ட்ரியைச் சேர்ந்த ஏகப்பட்ட பேர் சேவை வரியைக் கட்டும் இண்ட்ரஸ்டில் இருப்பவர்கள் போல் தெரிகிறது. ஏனெனில் விஜய், சூர்யா,கார்த்தி, அருண்விஜயகுமார்,அமீர், ராதிகா சரத்குமார், சத்யராஜ் போன்ற ஒருசில பிரபலங்கள் தவிர்த்து, உண்ணாவிரதத்துக்கு ஆஜராகியிருந்த கூட்டம் அவ்வளவு குறைச்சலாக இருந்தது.