தமிழ் சினிமாவில், ஃபார்முலா படங்கள் தங்களுக்குத் தாங்களே பாடை கட்டிக்கொண்டு பயணம் புறப்பட்டிருப்பதை, இன்னும் ஓரளவு உறுதி செய்ய வந்திருக்கும் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று கூட சொல்லலாம்.
ஃபேஸ்புக் உட்பட்ட இணையதளங்களின் ஏகோபித்த கோமாளி, பவர்ஸ்டார் என்று நையாண்டி செய்யப்படுகிற
ஒரு குண்டு பல்புக்கு சொந்தமாக, வயர் இணைப்பு கூட இல்லாத சீனிவாசன் தான் ‘க ல தி ஆ’வின் ஹீரோ.
‘அவன் நடையைப் பாருடா கக்கா போய் நாலு நாளா கழுவாதவன் மாதிரி’ என்பதில் தொடங்கி, உலக சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் இவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருக்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு சந்தானம் அவரை ஓட்ட, அதை பவர்ஃபுல்லாக,ஸ்ட்ராங்கான சுவர் மாதிரி, இவர் தாங்கிக்கொள்வதுதான் படத்தின் ஒரே ஹை மற்றும் லோ லைட்.
கதை, பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பாக்கியராஜின் ‘இன்று போய் நாளை வா’ வின் மாடர்ன் மங்காத்தாதான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ’மூன்று பேர் ஒரு காதல்’ என்கிற மெயின் லைனில் துவங்கி, கதையின் முக்கியமான மூவ்மெண்ட்களையெல்லாம் பாக்கியராஜின் கதையிலிருந்தே பந்தாடியிருக்கிறார்கள். ஆனால் பழைய பாட்டிலில் புதிய சரக்கு மாதிரி, படம் முழுக்க சந்தானத்தின் டச், நச்சென்று கதையை நகர்த்துகிறது.
இதே பொங்கலுக்கு வந்த ‘அலெக்ஸ்பாண்டியன்’-ல் ஆபாச வசனங்களை அள்ளி இறைத்து நாலு படி சறுக்கியிருந்த சந்தானம், ‘க ல தி ஆ’ காமெடிகள் மூலம் ஏழு படி ஏறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு வொர்க்–ஷாப்பில் கொடுத்து பட்டி பிடித்து, டிங்கரிங் செய்து, பெயிண்ட் அடித்து ஃபினிஷிங் பண்ணி வாங்கினாலும் பார்க்கச் சகிக்காத பவர்ஸ்டாரை அவரது மைனஸ்களை வைத்தே கலாய்த்து கவுண்டரின் அடுத்த வாரிசு என்ற அரசல்புரசலான பட்டத்துக்கு ஸ்ட்ராங்காய் அச்சாரம் போட்டு விட்டார் சந்தானம். ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டிவிட்டுப் போனதாலோ என்னவோ சிம்புவைக்கூட ரசிக்கமுடிகிறது.
சந்தானம் மற்றும் பவருடன் மூன்றாவது சாது நண்பராக வரும் சேதுவுக்கு சுத்தமாக நடிப்பு வரலேது.
‘புடிச்சிருக்கு’ படத்தில் அறிமுகமாகி, கொஞ்சம் தடிச்சிருக்கும் நாயகி விசாகா, பவர்ஸ்டாரோட காதலைக்கூட ஜீரணிக்கிற அளவுக்கு, நல்லா நடிச்சிருக்கு.
ஓவர் வாசிப்பா இருக்கே படத்துல குறைகளே இல்லையா என்று கேட்கலாம். ஏன் இல்லை. ரீலுக்கு நாலு வீதம் ஏகப்பட்ட குறைகள் உள்ளன. முதல் குறை, பாக்கியராஜின் ஒரிஜினலில் இருந்த உயிர்ப்பு இதில் துளியும் இல்லை. பா.ரா.வும் படத்தில் இதே அளவுக்கு காமெடி பண்ணியிருந்தார் என்றாலும், அவரது பாத்திரப் படைப்புகள் நாம் எங்கோ சந்தித்தவையாய் இருந்தன. ‘க ல தி ஆ’-வில் அது சுத்தமாக மிஸ்ஸிங். அதுவும் பவர் ஸ்டாருக்கு ஒரு அறுவெருப்பான அண்ணனையும், அப்பாவையும் வைத்துக்கொண்டு பண்ணிய காமநெடிகளை ஒன்றிரண்டு காட்சிகளுக்கு மேல் சகிக்கமுடியவில்லை.
பவர் ஸ்டாருக்கு கோட் ஷூட் மாட்டிவிட்டமாதிரியே படத்துக்கு மேட்சிங் ஆகாத காஸ்ட்லி ஒளிப்பதிவு பாலசுப்புரமணியத்துடையது. இசை தமன். கானா பாலா பாடிய ‘ ஒரு லெட்டர் எழுத ஆசைப்பட்டேன்’ பாடல் மட்டும் பரவாயில்லை.
அறிமுக இயக்குனரான ’மணி’கண்டன் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்கிக்கொண்டிருந்தவராம். இன்னொரு படம் பார்க்காமல் இவரையும் பவர்ஸ்டாரையும் விமர்சிப்பது, அடாத செயல் என்பதாகவே படுகிறது. இன்று போகட்டும் நாளை அடுத்த படத்தோடு வரும்போது ‘கவனித்து’க்கொள்ளலாம்.