பொங்கல் ரிலீஸ்களில் ‘கண்ணா துட்டு பண்ண ஆசையா’ படம் பயங்கர கல்லா கட்ட ஆரம்பித்திருப்பதில், கண்ணீரும் கம்பலையுமாய் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்திருப்பவர், அதன் மூலக்கதைக்குச் சொந்தக்காரரான பாக்யராஜ்.
ரிலீஸுக்கு இரு தினங்கள் முன்பிலிருந்தே அவருக்கு 50 லட்சம் ‘செட்டில்மெண்டாகத் தரப்பட்டு சைலண்டாக்கப்பட்டார்’ என்ற செய்திகள் கோடம்பாக்க வட்டாரங்களில் கண்ணா பின்னாவென்று அலைந்தன.
அது உண்மை என்று நம்பும் விதமாக அவருக்கு படத்தில் ‘நன்றி’ கார்டும் போட்டார்கள்.
என்ன காரணத்தாலோ அப்போதைக்கு சைலண்டாக இருந்த பாக்கியராஜ், நேற்று முதல், ’ எனக்கு பணம் எதுவும் தரவேயில்லை. கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு படத்தை மாற்றிவிட்டு என்னை மோசடி செய்துவிட்டார்கள்’ என்று ஓப்பனாகப் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் அப்பாவின் சார்பாக ட்விட்டரில், அவரது மகன் சாந்தனுவும், ‘எங்க அப்பா சோகக் கதையைக்கேளு தமிழ்க்குலமே, அதைக்கேக்காவிட்டா தாங்காதய்யா எங்க மனமே’ என்று ஒப்பாரி ராகத்தில் ட்விட்ட ஆரம்பித்திருக்கிறார்.
படம் ரிலீஸாகி அது பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’வின் மாடர்ன் உல்டாதான் என்று தெரிந்தவுடன் பாக்யராஜுக்கு முன்பே அந்தக் கதைக்கு சொந்தம் கொண்டாடிய சுந்தர் என்ற உதவி இயக்குனர் சொந்த ஊருக்கு ஓடி, தலையில் துண்டு போட்டு அலைந்துகொண்டிருப்பதாகத் தகவல்.