’வி’ பட விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததில், யாரும் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக நடந்த உணர்ச்சிகரமான , உக்கிரமான, அக்கிரமமான போராட்டங்களில் கமல், இஸ்லாமிய போராளிகள், முதல்வர் அம்மா, நீதியர்சர்கள், நடுநடுவே அவ்வப்போது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் என்று அனைவருமே ஜெயித்தார்கள். இந்தப்பிரச்சினையில் முகத்தில் கறுஞ்சாயம் பூசப்பட்ட ஒரே இனம், இனம் தெரியாமல் எல்லாவற்றுக்கும் உணர்ச்சி
வசப்பட்ட ரசிகர் இனம் மட்டுமே.
நடந்த சண்டையில் ‘ஏன், எதற்கு, எப்படி?என்று அவர்களுக்கு எதுவுமே தெரியாது.கமலுக்கும், அரசுக்கும் இடையில் என்னவிதமான ‘செட்டில்மெண்ட்’ பேசப்பட்டது என்பது தெரியாது.காட்சிகளை வெட்டுவது போல் வெட்டிவிட்டு ஒட்டிக்கொண்ட கமலுக்கும் இஸ்லாமிய பஞ்சாயத்துப்பார்ட்டிகளுக்கும் நடுவில் என்ன நடந்தது என்று தெரியாது. ஒரு கட்டம் வரை வீராப்பாக இருந்த கமல், அம்மா முதல்வர் மீடியாக்களில் கோபம் கொப்பளிக்க பேட்டி கொடுத்தவுடன், பெட்டிப்பாம்பாய் அடங்கி, ஆறுமணி நேரத்துக்கும் மேல் தலைமைச்செயலகத்தில் தன்னை அடமானம் வைக்க என்ன காரணம் தெரியாது. இப்படி ரசிகர்களுக்கு ‘வி’ பட விவகாரத்தில் ஏகப்பட்ட தெரியாதுகள்.
அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம்’ எனக்கு இருக்கும் ஒரே சொத்து ஆழ்வார்ப்பேட்டை வீடுதான். அதுவும் நாளை இருக்குமா தெரியாது’ என்று கமல் மூக்கைச் சிந்தியவுடன், அவருக்காக உணர்ச்சி வசப்பட்டு கொந்தளிப்பதும், முடிந்த மட்டில் அவரைக் காப்பாற்ற ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ்’ பெயரில் செக் அனுப்புவதும்.
சிலசமயங்களில் எதுவும் தெரியாமல் இருப்பவர்களே கடவுளால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களோ என்று தோன்றுகிறது. ரசிக மகா ஜனங்களே ‘வி’ பட விவகாரத்திலும் உங்களுக்கு அப்படியே ஆகுக. ஆமென்.