கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் இக்குறும்படம் வெளியிடப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் ஓடும் த்ரில்லர் இது. ஆச்சரியப்படும் விதமாக படம் 40 நிமிடங்கள் ஓடுவதே தெரியாமல் போய் முடிந்துவிடுகிறது. அவ்வளவு விறுவிறுப்பு.
இளன் இயக்கியிருக்கும் படத்தின் கதை, தலைப்பைப் போலவே வி-சித்திரமானது தான். ஒரு ஓவியன் வரையும் ஒரு மாடர்ன் ஆர்ட் சித்திரம் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் விசித்திரங்கள் தான் இந்தப் படம். அந்தச் சித்திரத்தை வரையும் ஓவியன் ஒரு போதை அடிமையாக இருக்கிறான். அவன் படத்தை வரைந்து முடித்ததில் தொடங்கி நிகழும் வினோதமான நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் அந்தச் சித்திரத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புள்ளனவாக இருக்கின்றன. அவை என்ன நிகழ்வுகள்? அந்தச் சித்திரத்தின் விசித்திரம் உண்மையிலேயே என்ன ? படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்ஹாதான் படத்தின் நாயகரான மாடர்ன் ஆர்ட் ஓவியர். முக சிகை அமைப்புக்களை மாற்றி ஒரு போதைப் பொருள் உபயோகிப்பவராக அருமையாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே இதே இயக்குனரின் முந்தைய குறும் படத்திலும் நடித்திருக்கிறாராம். சக ஓவியராக வரும் பாண்டியன் குறும்பட வட்டாரத்தில் முதிர்ந்த அப்பா வகை வேடங்களுக்கு பிராண்ட் செய்யப்பட்டது போலவே நடித்திருக்கிறார். நடிப்பில் குறைவில்லை. அடுத்து இன்ஸ்பெக்டராக வருபவர்; பெயர் ராகவ்வாக இருக்கலாம். நல்ல ஸ்மார்ட்டாக தோரணையாக வருபவர் கொஞ்சம் லேசாக ஓவராக்டிக் செய்வது போலத் தோன்றுகிறது. இவர் இன்னும் இயல்பாக நடிக்கக் கற்றுக்கொண்டால் மிளிர வாய்ப்பு இருக்கிறது. படத்தில் வரும் ஒரே பெண் பாத்திரம் ரேஷ்மி. இவரது நடிப்பைப் பற்றி சொல்லும் அளவிற்கு போதுமான காட்சிகள் படத்தில் இல்லாததால் வேறு ஒரு படத்தில் இவரை சந்திப்போம்.
ஹாலிவுட் படங்களைப் போல கதையமைவு கொண்டிருக்கும் இப்படம் ஏதாவது ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. படத்தின் இயக்குனர் இளன் ஒரு இளம் காலேஜ் பையன் வயதில் தான் இருக்கிறார். இவர் இப்படி ஆழமான த்ரில்லரை இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள். த்ரில்லர் கோணங்கள் வைப்பதிலும், நடிகர்களை நடிக்க வைத்ததிலும்,
மொத்தமாக படமாக ஆக்கியதிலும், அந்த ஓவியத்தை வைத்து கதையைப் பின்னியதிலும் குறைவின்றி செய்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவு ராஜா பட்டாசார்ஜி. த்ரில்லர் படத்துக்கே தேவைப்படும் குறைவான ஆனால் தெளிவான ஒளியமைப்பிலும், ஒளிப்பதிவு, ஷாட்கள் வைத்த விதங்களிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். இசையமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். படத்திற்கு பலம் சேர்க்கும்படி இருக்கிறது இசை. இவர் இப்போது சினிமா ஒன்றிற்கு இசையமைக்கிறாராம். மணி குமரனின் எடிட்டிங்கும் கச்சிதம்.
படத்தின் வசனம் மற்றும் பாடல்கள் வைர பாரதி. படத்தில் பாடல்களைப் பற்றி குறிப்பாக சொல்ல ஏதுமில்லை என்றாலும் வசனத்தை நேர்த்தியாகவே எழுதியிருக்கிறார். இன்னும் படத்தின் ஒலிப்பதிவு, விஎப்எஸ் எடிட்டிங் என்று பலரும் சரியாக உழைத்திருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதையில் தான் கொஞ்சம் ஏதோ பிறழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. படம் ஆரம்பத்தில் யாருடைய பார்வையிலும் சொல்லப்படாமல் சம்பவங்களாக செல்ல ஆரம்பித்து பின் இன்ஸ்பெக்டரின் பார்வையில் அதை விளக்குவதாக மாறுவது ஆடியன்ஸை கொஞ்சம் படத்திலிருந்து விலக்கி விடுகிறது. ஒன்று இன்ஸ்பெக்டரின் விவரிப்பாகவே முழுப்படத்தையும் சொல்லியிருக்கலாம். அல்லது முழுக்க கதை போக்காகவே சொல்லியிருக்கலாம்.
ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் இப்படம் ஒரு நல்ல த்ரில்லர் முயற்சி. படம் முடிந்து வெளியே வந்து குறும்பட அமைப்பினர் வழங்கிய டீ, ஸ்நாக்ஸ்களை வாங்கி மரத்தடியில் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் தற்செயலாக நிமிர்ந்து பார்க்க மரத்தடியில் குறும்படத்தில் வந்த அதே ஓவியத்தை நிஜமாகவே வைத்திருந்தார்கள்.
ஓவியத்தைப் பார்க்கும் போது அதற்கும் நம் வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்பு வந்துவிடுமோ என்று லேசாகத் திகிலாக இருந்தது.
எழுத்து, இயக்கம் : இளன்
நடிப்பு – சிம்ஹா, பாண்டியன், ராகவ், ரேஷ்மீ
ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சர்ஜி
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் – மணி குமரன்
விஎப்எக்ஸ், கிரேடிங் – ப்ரவீன் லியோனார்டு
வசனம், பாடல்கள் – வைர பாரதி
ஒலிப்பதிவு, பிண்ணணி – ராஜ் குமார்
போஸ்ட் புரொடக்ஷன் – டி பிரதர்ஸ்
அசோசியேட் இயக்குனர் – ஹரிஸ் ஜி ஒய்
இணை இயக்குனர் – தானேஷ்
உதவி இயக்குனர்கள் – ராகேஷ் குமார், ராகேஷ் கண்ணா, ஹரீஷ், அருண் தாஸ், ப்ரித்வீ ஆதித்யா, ப்ரவீன் டிஸ்னர்,வி.கே. குமார், ப்ரசன்னா, ஜெபின், கமல் புத்தா, ரமேஷ், ராஜ்குமார் மோகன், கவி
படத்தின் ட்ரெய்லர் இங்கே.
படம் யூட்யுபில் வெளியிடப்படும்போது இங்கே இணைப்பு தருகிறோம்.