சரியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கோச்சடையானைப் பற்றி ஏதாவது செய்தி வெளிவருகிறது. கோச்சடையான் படம் முதலில் அனிமேஷன் என்றார்கள். பின்னர் மோஷன் கேப்சுர் எனப்படும் நிஜ நடிகர்களின் அசைவுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதை அனிமேஷனாக மாற்றும் வகைப் படம் என்றார்கள்.
இந்த வகையில் ஹாலிவுட்டில் டஜன் கணக்கில் படங்கள் வந்துவிட்டன. அவதாரில் கூட இத்தொழில்நுட்பம் இருக்கிறது. அவதாரில் இன்னும்
எக்கச்சக்க தொழில்நுட்பங்கள் சேர்ந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை கோச்சடையான் தான் மோஷன் கேப்சர் டெக்னிக் உபயோகப்படுத்தப்படும் முதல் படம் என்கிறார்கள். ஏற்கனவே கமலின் ஆளவந்தானில் இதை பரீட்சார்த்தமாக உபயோகப்படுத்தியதாக ஞாபகம்.
கடந்த வருடம் மார்ச் மாதம் லண்டனில் இருக்கும், புகழ்பெற்ற ஹாரிபாட்டர் படங்கள் எடுக்கப்பட்ட, பைன்வுட் ஸ்டூடியோவில் இப்படத்தின் ஷூட்டிங் 25 நாட்கள் நடந்தது. அதற்குப் பின் திருவனந்தபுரத்தில் சில நாட்கள் நடந்தது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறினர். இதுவரை படம் சம்பந்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று ஸ்டில்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அவையும் போஸ்டர் போன்றே இருக்கின்றன. அப்போதே முடிந்த கோச்சடையான் ஏன் இன்னும் ரிலீஸாகவில்லை?
இப்படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் ஆடியோ ஆல்பம் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் சௌந்தர்யா அறிவித்திருக்கிறார்.
படத்தில் சரத்குமார், நாசர், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், ஆதி, ஷோபனா, போன்ற பெரும் பட்டாளமே நடிக்கும் இப்படத்தில் இதுவரை அவர்கள் யார் சம்பந்தப்பட்ட ஸ்டில்லும் வெளியாகவில்லை. படத்தின் இயக்குனர் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் தற்போது கதை, திரைக்கதை, வசனம் மட்டும் என்று பெயர் போடப்படுகிறார். இயக்குனராக ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் பெயர் வருகிறது.
இதற்குப் பின் இறுதிக் கட்ட வேலைகள் வேறு இன்னும் நடக்க வேண்டியிருக்கிறது என்று இழுக்கிறார் ச்சைந்தர்யா..
இனிமேல் தான் டப்பிங், ரீரெக்கார்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ்(??) எல்லாம் பண்ண வேண்டியிருக்கிறதாம். படம் முழுக்கவே கிராபிக்ஸ் படம். இதில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்று எதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பானிய மொழி என்று ஐந்து மொழிகளில் படம் தயாராகிறதாம். எல்லாம் சரி. ஏன் ஜப்பானிய மொழி ? ரஜினியின் முத்து படம் ஜப்பானில் படு ஹிட்டான படமாம். அப்போதிலிருந்து அங்கு ரஜினிக்கு மார்க்கெட் உள்ளதாம். அதைப் பிடிக்கவே இந்த ஜப்பான் வெளியீடு.
எல்லாம் சரி சௌந்தர்யா மேடம். படத்தை எப்போ வெளியிடுவீங்க ? நீங்க சொல்கிற எல்லாத்தையும் நம்பனும்னா ஏதாவது ட்ரெய்லர் வெளியிட்டிருக்கலாமே. அவ்வளவு ரகசியமாவா படம் தயாரிக்கிறது? அப்பாவுக்காவது படத்தைப் போட்டுக் காட்டுனீங்களா? இல்லை ப்ரஸ் நியூஸோட சரியா ?
பார்த்துங்க மேடம். அப்பா ரஜினியோட புகழ் உலகெங்கும் பரவியிருக்குது. அதை கோளாறா ஏதாவது செஞ்சு கவுத்துடாதீங்க.