‘திருதிரு துருதுரு’ படத்தை புருபுருவென்று இயக்கிய நந்தினி தான் இப்படி கொலைநோக்க இருப்பவர். இவரது அடுத்த படம் தான் கொலை நோக்குப் பார்வை என்கிற த்ரில்லர் படமாம்.
கார்த்திக் குமார், ராதிகா ஆப்தே நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு வசந்த் செய்கிறார். லலிதானந்த் மற்றும் மதன் கார்க்கியின் பாடல்களுக்கு இசை அஸ்வத். எல்லாமே புதுமுகங்கள் போலத் தெரிகிறது.
கிராமத்தில் நடக்கும் தொடர்கொலைகளை துப்பறிபவராகக் கார்த்திக் குமார் நடிக்கிறார். கதை இது போல சுஜாதா, ராஜேஷ்,ராஜேந்திரகுமார்கள் காலத்திலேயே நிறைய தடவைகள் எழுதப்பட்டிருக்கும் கதை தான். சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ படம் கூட இது போன்ற கதைதான் என்று ஞாபகம்.
பெண் இயக்குனர்கள் காமெடி மற்றும் குடும்பப் படங்களிலேயே பெரும்பாலும் மிளிர்வார்கள். சமீபத்தில் இளம் இயக்குனி சிநேகா பிரிட்டோ சட்டம் ஒரு இருட்டறை என்கிற போலீஸ் கதையுடன் வந்து ரசிகர்களை இருட்டறையில் விட்டு விளாசித் தள்ளியது நடந்தது. இப்போ நந்தினி மேடம் என்ன கதை சொல்ல வெச்சிருக்காங்களோ?
ரவீந்தர் சந்திரசேகரின் தயாரிப்பில் வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் துவங்கி ஊட்டி, கேரளா போன்ற இடங்களில் நடக்க இருக்கிறது.