கடந்த சனிக்கிழமை மாலை சென்னை பிரசாத் ஸ்டூடியோ லேப் தியேட்டரில் மாசாணி திரைப்படத்தின் பத்திரிக்கையாளா் சந்திப்பு நடந்தது.
ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக இப்படம் வெளிவருகிறது. எம்.எஸ்.சரவணன் என்கிற சென்னையைச் சேர்ந்த பிரபல ரியஸ் எஸ்டேட் பில்டர்ஸ்காரர் இதன் மூலம் சினிமா தயாரிப்பாளராக ஆகிறார்.
விழா ஆரம்பித்தவுடன் படத்தின் நான்கு பாடல்கள் திரையிடப்பட்டன. பாடல்கள் கொஞ்சம் ரசிக்கும்படியே இருந்தன. படமாக்கல் வழக்கமான டூயட், டப்பாங்குத்து மற்றும் ஒரு சாராயக்கடை ஆட்டப்பாட்டு என்று இருந்தது. படத்தில் ராம்கி, ரோஜா, இனியா, அகில் (கல்லூரி), சிஜாரோஸ், சரத்பாபு, தேவன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பாடல்கள் திரையிட்டு முடிந்ததும் படக்குழு அனைவரும் மேடையேறினர். இப்படத்திற்கு இரு இயக்குனர்கள். பத்மராஜா மற்றும் எல்.ஜி.ஆர். இருவருமே மத்திய வயதைத் தாண்டியவர்கள். பத்மராஜாவோ 50 வயதுக்கு மேல் மதிக்கும் படி இருந்தார். எத்தனையோ படங்களில் துணை இயக்குனராகப் பணிபுரிந்த இவருக்கு இதுதான் முதல் படமாம். படத்தின் கதை, திரைக்கதையும் இவருடையதே. இவரைப் பேச அழைத்தார்கள்.
“படம் ஒரு சந்திரமுகி டைப் த்ரில்லர். அத்துடன் எதை ஒதுக்கித் தள்ளுகிறோமோ அதுவே முதன்மையாக வந்து நிற்கும் என்கிற கருவை மையமாக வைத்த கதை இது. மாசாணி என்றால் வயல்காட்டில் வேலை செய்பவர்களில் கடைசியாகக் கருதப்படும் வேலையாட்கள் தான் மாசாணிகள். ஜாதிக்கு எதிரான ஒரு படமாகவும் இது இருக்கும். மற்றபடி எல்லா ஜனரஞ்சக அம்சங்களும் படத்தில் உண்டு . இன்னும் சில சஸ்பென்கள் உண்டு அவற்றை திரையில் பாருங்கள்.” என்றார்.
அடுத்து பேச வந்த படத்தின் இசையமைப்பாளர் ஃபாசில் ஒரு சிறு பையன். சுமார் 17லிருந்து 21க்குள் மிகக் குறைவு எதுவோ அதுவே இவர் வயதாக இருக்கும்படியாக பால்மணம் மாறாத பையனைாகவே தோற்றமளித்தார். எளிமையாக அப்படியே பேசவும் செய்தார். இவர் ஒரு இசைக்குடும்ப வாரிசு. இவரது தந்தை நர்ஸூல்லாகான் என்பது போல் பெயர் கொண்ட ஒரு இசையமைப்பாளராம். படத்தின் சில பாட்டுக்கள் ஹிட்டாகும் வாய்ப்பு இருப்பது போல் தான் தெரிகிறது. இது இவருக்கு முதல் படம்.
பின்பு இளமை நாயகன் ராம்கி பேசினார். இன்னும் இளமையாகத் தெரிந்தார். அதன் ரகசியத்தை கேட்டபோது உணவு முறை மற்றும் தியானம் என்று சொன்னார். வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் ஒப்பந்தமாயிருப்பதாகவும் அதுவே தனது 7 வருட இடைவெளிக்குப் பின் வரும் முதல் படமாயிருக்கும் என்று நம்பியதாகவும் ஆனால் இறைவன் சித்தம் மாசாணியே தனது மறுபிரவேசப் படமாக ஆகிவிட்டது என்றார்.
பின்பு படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜகுரு ஓரிரு வார்த்தைகள் பேசினார். பாடல் ஒளிப்பதிவுகளில் துல்லிதம் தெரிகிறது. படமும் நன்றாக வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
பின்பு படத்தின் நாயகி இனியா பேசினார். ராம்கியுடன் ஜோடியாக நடித்ததையும் படத்தில் சந்திரமுகி ஜோதிகா போல தனக்கும் ஒரு ஸ்பிளிட் பர்சனாலிட்டி ரோல் இருப்பதாகச் சொன்னார்.
எல்லோரும் படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.சரவணனை மிகவும் புகழ்ந்தார்கள். தயாரிப்பாளர் படத்துடன் மிகவும் இன்வால்வ் ஆகி சாதாரண டான்ஸ் ப்ராக்டீஸைக் கூட ஆர்வமாய் வந்து கவனித்தார் என்றார்கள். ஃபாசிலை என்கரேஜ் செய்து சினிமா படத்துக்கு இசையமைக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டியவரும் தயாரிப்பாளரே. இவர் ஒரு ஆன்மீக வாதியும் கூட. நாராயணி என்கிற குருவின் பெயர் சொல்கிறார்.
திகில் படமான மாசாணியின் படக்குழுவினர் பாதிப் பேர் இப்படி ஆன்மீகம், அம்பாள் வழிநடத்தல், விதியின் சேர்ப்பு என்று பேசியதில் எனக்கு லேசாக திகிலாகிப் போனது
ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கிறது இப்படம்.