onbadhula-guru-film-review

தினமும் பஸ் பிடித்து,  பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி, ஏதோ வயி்ற்றை நிரப்பி தூங்கி எழுந்து வாழும் மெட்ரோ ஜீவன்கள் தனது அழுத்தம் நிறைந்த உலகிலிருந்து விடுபட இது மாதிரியான காமெடி படங்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

இப்படங்களில் லாஜிக் இருக்காது. கோர்வை இருக்காது. வெறும் சிரிப்பு மட்டுமே பிரதானம். படம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் தம் மூளைகளை கழட்டி கையில் வைத்துக் கொள்வார்கள். அப்படி கடைசியாக வந்த படம் க.ல.தி.ஆசையா. அது பாக்யராஜின் இன்று போய் நாளை வா என்கிற வெற்றிகரமான திரைக்கதையை காப்பியடித்த படம். அதற்கு முன் சுந்தர்.சியின் கலகலப்பு @ மசாலா கபே படம் வந்தது.

ஒன்பதுல குரு அந்த வகையான ஒரு காமெடிப் படம் என்று சொல்லலாம். ஆனால் படத்தில் காமெடி இருந்ததா என்றால் ஒன்றும் ரசிக்கும்படியே இல்லை. மேலும் காமநெடியே அதிகம். படம் முழுதும் பல இடங்களில் லேசாக புன்னகை புரியுமளவே காமெடி.

ஐந்து நண்பர்கள். வினய், அரவிந்த் ஆகாஷ், சத்யன், சாம்ஸ் மற்றும் பிரேம்ஜி. இவர்களில் பிரேம்ஜியின் கால்ஷீட் கொஞ்சமே என்பதால் கொஞ்சமே வருகிறார். மற்ற நால்வரில் சாம்ஸூக்கு கல்யாணம் ஆக இருக்கிறது. அதை ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவிகளால் நொந்த வினய், அ.ஆகாஷ் மற்றும் சத்யன் சேர்ந்து சாம்ஸை “கல்யாணம் வேணாம் மாம்ஸ்..பெங்களுரு போய் லைப்பை ஜாலி பண்ணுவோம்” என்று கிளப்பி போய்விடுகிறார்கள்.

அங்கே அந்த நால்வராலும் கிண்டல் செய்யப்பட்ட பிரேம்ஜி பெரும் பணக்காரியை மணந்து பெரும் பணக்காரராயிருக்கிறார். அவர் தயவில் ஒரு ப்ளாட்டில் ஜாலியாய் இருக்க, அதே அப்பார்ட்மெண்ட்ஸில் வரும் க்ளப் டேன்ஸர் கம் போட்டோகிராபர் கம் நீச்சலுடை கன்னியான லட்சுமிராயை நால்வரும் மாற்றி மாற்றி காதலிக்க ட்ரை பண்ண (க.ல.தி.ஆசையா  + 1 போல) கடைசியில் லட்சுமிராய் வில்லியாக மாற இவர்கள் மனம் திருந்தி சாம்ஸூக்கு கல்யாணம் செய்து வைத்து தாங்களும் தங்கள் மனைவிகளிடம் சரண்டர் ஆகிறார்கள்.

முன்னொரு ஆதிகாலத்தில், பாண்டியராஜன் படங்களிலிருந்து இந்த டைப் காமெடி படங்கள் ரொம்ப பழசு சார்.  அதை சுவாராசியமாகவாவது சொன்னார்களா என்றால் இயக்குனர் பி.டி. செல்வக்குமாரிடம் தான் கேட்க வேண்டும். விஜய்யின் பி.ஆர்.ஓவாக இருந்த தோஷமோ என்னவோ விஜய் டி.வியில் வரும் காமெடி சீரியல்கள், கலாய்ப்புகள், லொள்ளு சபாவில் ஏதாவது பழைய சினிமாவை கிண்டல் செய்து வரும் பாத்திரங்கள் என்று அப்படியே டி.வி. சீரியல் சரக்குகள் இருக்கின்றன.
மேக்கப் முதல், காட்சியமைப்பு, ஒளிப்பதிவு வரை டி.வி. சீரியல் பார்க்கிறோமோ என்கிற பிரமையை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை டி.விக்கு சல்லிசாக விற்றுவிடலாம் என்கிற கணக்கும் இருக்கலாம். அதுக்காக தியேட்டருக்கு வரும் ஒன்றிரண்டு ரசிகர்களையும் பின்னங்கால் பிடறியில் பட ஓடும்படி விரட்டும் ஆத்திரம் ஏன் பி.டி.செல்வகுமார் சார் உங்களுக்கு?

வினய் இனிமே சினிமா நகிய்நகிய்ன்னு சொல்றமாதிரி ஆகிட்டாரு. அரவிந்த் ஆகாஷ் காமெடி எதுவும் சீரியசாக பண்ணவில்லை. சத்யன் கொஞ்சூண்டு பரவால்லை. ப்ரேம்ஜி ‘பிரியாணி’க்கு விளம்பரம் செய்வது போல் வருகிறார். சாம்ஸூ ஒரே போங்ஸூ. மந்த்ரா, சோனா என்று மெகா காமப் பேரிளம்பெண்கள் திரையை நிரப்பியபடி வருகிறார்கள். ஆனால் காமெடியை மட்டும் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார்கள் போல.  இவர்களெல்லாம் போதாதென்று பவர் ஸ்டாரை வேறு முதன் முதலில் டைட்டில் சாங்கில் நாலு பேரோடு ஆட விடுகிறார்கள். கடைசியில் வேறு அவர் சம்பந்தமில்லாமல் வந்து போகிறார். பவர் ஸ்டாரை சீக்கிரம் பீஸ் புடுங்கப் போகிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

இசை ‘கே’. பிண்ணணி இசையில் பெரும்பாலும் இளையராஜாவின் பழைய பாட்டுக்கள் அப்படியே வருகின்றன. உதாரணமாக நாயகன் கமல் பாணியில் வினய்யின் அப்பா படம் பூராவும்  பேசிக்கொண்டேயிருப்பார். எனவே அவர் திரையில் வரும் போதெல்லாம் நாயகன் இசை. வினய் படம் பூராவும் பில்லா அஜித் போலவே அவ்வப்போது பேசுவார். அப்போதெல்லாம் பில்லாவின் இசை. பாட்சா பட இசை… இப்படி இசை ராஜ்யம். ‘கே’ என்ன பண்ணுவார் பாவம். சட்டியில் என்ன இருக்குதோ அது தானே அகப்பையிலும் வரும்.

ஆகவே தமிழ்நாட்டு ரசிக சிகாமணியாகிய ஜாதகர் உங்களுக்கு ஜாதகத்தில் ஒன்பதில் குருவும், பதினெட்டில் சனியும், இருபத்தேழில் ராகுவும், முப்பத்தாறில் கேதுவும் சேர்ந்து சுற்றிச் சுற்றி சுழன்று உங்களையே முறைத்துக் கொண்டிருந்தால் தியேட்டர்ல இந்தப் படத்தை நீங்க பார்த்தேயாகணும்னு உங்கள் தலையெழுத்தும் இருக்கும். ஜாக்கிரதையா எதுக்கும் ஜோசியர்கிட்ட ஒரு நடை போய்ட்டு வாங்க பாஸ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.