இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போதும் சரி அதற்குப் பின்னும் சரி இனவெறி மிக்க சிங்கள அரசின் நரித்தனமான செயல்களில் ஒன்று என்னவெனில் எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் அங்கே எவ்வளவு கோரமான செயல்கள் நடந்தாலும் வெளி உலகிற்கு ஒன்றுமே நடவாதது போல் காட்டிக்கொள்ள கிரிக்கெட் மேட்ச் நடத்துவது, உலக திரைப்பட விழா நடத்துவது, நடிகர் நடிகைகளை கூப்பிட்டு குத்தாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்று ஏதாவது செய்து கொண்டேயிருக்கும்.
ஈழத்தில் ராஜபக்சாக்கள் 2000 பேரை கொன்ற அதே தினத்தில் குமார் சங்கக்கரா ஏதோ ஒரு கிரவுண்டில் 200 ரன்கள் விளாசியிருப்பான், முத்தையா முரளீதரன் 20 ரன்னுக்கு 8 விக்கெட் எடுத்திருப்பான். 200 ரன்களின் கரவொலியில் 2000பேர் மவுனமாக புதைக்கப்படுவர்.
இந்த ட்ரிக்கைக் கூட புரிந்து கொள்ளாததாலோ அல்லது தமிழன் மேல் என்ன வெங்காய மரியாதை என்று நினைப்பதாலோ சில பல திரைப் பிரபலங்கள் இலங்கையில் காதுகுத்து, கோவில் திருவிழா, நட்சத்திர இரவு, இன்னிசைக் கச்சேரி என்று ஏதாவது பெயரில் இலங்கைக்கு போய் ஆடிப் பாடி நான்கு மடங்கு காசு பார்த்துவிட்டு வருவார்கள்.
இது போல சென்னையில் தாஜ், ஷெரட்டன் போன்ற பெரிய ஹோட்டல்களில் பெரிய மனிதர்கள், பிரபலப் புள்ளிகளுக்கு மாதம் மாதம் இலங்கைத் தூதரதகத்தின் மறைமுக ஸ்பான்சாரில் நடத்தப்படும் இரவு கேளிக்கைகளுக்கு உள்ளூரின் மற்றும் மத்திய மாநில அரசியல், தொழில், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று பலரையும் அழைத்து பணம், மது மற்றும் மங்கைகளால் அவ்வப்போது குளிப்பாட்டி வருகிறது சிங்கள இனம். இவ்வாறு தமிழ்நாட்டில் தங்களின் பிடியை உறுதியாக வைத்திருக்கும் இலங்கையின் வண்டவாளத்தை சமீபத்தில் தான் தமிழ் இயக்கங்கள் வெளிப்படுத்தி எதிர்க்க ஆரம்பித்தன.
இதன் எதிரொலியாகத் தான் அங்கே இலங்கையில் ஆடப்போன பரத்தும், பூஜாவும் ஆடவில்லை என்று சொல்லிவிட்டு ரகசியமாக போய் ஆடிவிட்டு, கலைச் சேவை செய்து விட்டு வந்தனர். பாலச் சந்திரனின் மரணப் புகைப்படங்களைக் கண்ட பின்புதான் லேசாக சுரணை வந்த தமிழ் மக்கள் வெகுண்டெழுந்து ஐபிஎல் வரை ஜாக்கிரதை என்று மிரட்டிவிட்டு அமைதியாகி விட்டனர்.
இந்த ஏப்ரலில் அங்கு ஏதோ தமிழ்க் கோவிலில் கச்சேரி என்று பாடகர் மாணிக்க விநாயகம் யாரோ ஒரு குழுவுடன் சேர்ந்து கிளம்ப திட்டமிட, தமிழ் இயக்கங்கள் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், ‘அது எனக்குத் தெரியாது. நான் அந்தக் குழுவில் ஒரு ஆள் தான். முடிஞ்சா எங்க குழுவை நிப்பாட்டுங்க நானும் நின்னுக்குறேன்’ ன்னு சைடு வாங்கினார்.(இவரா போகமாட்டேன்னு சொல்லமாட்டாராம். அவங்க குரூப்பையே நிப்பாட்டனுமாம் நட்டாம). கடைசியில் குழு தனது நிகழ்ச்சியை ரத்து செய்தது.
போர் முடிந்த 2009ல் இந்திய வர்த்தக அமைப்பு பிக்கியின் சார்பில் நடந்த திரைப்பட விழாவிற்கு அமிதாப், கமல்ஹாசன் போன்றவர்கள் எல்லாம் ‘எல்லாத்தையும் அவுத்துட்டு’ போக இருந்தார்கள். பின்பு தமிழ் இயக்கங்கள் போராடிய பின்பு தான் கமலுக்கு தான் தமிழன் என்று ஞாபகம் வந்து தொலைத்தது.
இப்போது அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நம்ம நடனப் புயல், நடிகைகளை ஆட்டிப் படைப்பவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா. ராமைய்யா வொஸ்தவைய்யா என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தெலுங்குப் படத்தை இயக்கி வரும் பிரபு தேவா, அதில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட ஒரு கலைச்சேவை செய்யும் நடிகையை தேடிய போது இந்தியாவிலேயே யாரும் கிடைக்காத சோகமான வேளையில் தான் இலங்கையைச் சேர்ந்த ஜாகுலின் பெர்ணான்டஸ் என்கிற சிங்கள மாது சிக்கி விட்டார்.
இவர் தான் வொஸ்தவைய்யாவில் புகழ் பெறப்போகும் குத்துப் பாட்டுக்கு டேன்ஸ் ஆடப்போகிறார். இந்த அம்மணி 2006ஆம் ஆண்டு மிஸ் லங்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2009ல் ஹிந்திப் படமான அலாடினில் அறிமுகமாகி பிரபு தேவாவின் மனது வரை லேட்டஸ்ட்டாக இடம் பிடித்துள்ள அம்மணி இப்படத்தில் ஜாது கி ஜாபி என்கிற பாடலுக்கு தெறமை காட்ட இருக்கிறார்.
பிரபு தேவாவின் புல்லரிக்க வைக்கும் இந்தத் தமிழினப் பற்றை எல்லோர் காதிலும் போட்டு வையுங்கள். முடிந்தால் பிரபு தேவாவையும் ரெண்டு போடு போட்டு வையுங்கள்.
தமிழாவது பற்றாவது வெங்காயமாவது என்கிறீர்களா ! சரிதான் சன்ரைசர்ஸ் ஸ்கோர் என்ன ?