மெல்லிசைக் குரலுக்கும் ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களுக்கும் சொந்தக்காரரான பி.பி.சீனிவாஸ் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.
ஆந்திராவில் காகிநாடா மாவட்டத்தில் பிறந்த சீனிவாஸ் 1952ல் மிஸ்டர் சாம்ப்ராட் என்கிற இந்திப்படத்தில் பாடகராக அறிமுகமானார். அன்றிலிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட சுமார் 8 மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனுக்காக நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய குரலில் பாடலைக் கேட்டாலே அது ஜெமினி கணேசன் பாடல் என்று எண்ணுமளவு அவருடைய குரல் ஜெமினி கணேசனுக்குப் பொருந்தி வந்தது. ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘வாராயோ வெண்ணிலாவே'(மிஸ்ஸியம்மா), பாட்டுப் பாடவா(தேனிலவு) என்பது போன்ற காலத்தையும் கடந்து நிற்கும் எண்ணிலடங்கா பாடல்களை அவருடைய குரல் வளமைக்குச் சான்றாகச் சொல்லலாம்.
கன்னட நடிகர் ராஜ்குமாருக்கும் இதே போல் சீனிவாஸின் குரல் சரியாகப் பொருந்தி வந்தது. ராஜ்குமாருக்காக மட்டும் சுமார் 300க்கு மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 30 வருடங்கள் ராஜ்குமார் சினிமாவில் இருந்து மறைந்த காலம் வரை இவர்கள் ஜோடி சினிமாவில் நிலைத்து பல பாடல்களை கன்னட உலகிற்குத் தந்தது.
மறைந்த சீனிவாஸூக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பின் பெரும்பாலும் மாலை வேளைகளில் அவர் சென்னை ஜெமினி பாலத்தருகே இருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தனது நண்பர்கள், ரசிகர்களுடன் நேரத்தைக் கழிப்பார். கடந்த பத்தாண்டுகளில் முதிர்ந்த வயது அவரை தனிமைப் படுத்தியதோடு யாராவது பேச்சுக்குக் கிடைத்தாலே தொடர்ந்து பேசுமளவு அவரை லூஸ்டாக்காக மாற்றியிருந்தது.
இந்தப் புத்தாண்டில் ஒரு தென்றலின் குரல் ஓய்வெடுத்துக் கொண்டது.