ThirumathiThamilzMovieReview

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத, பழமொழி ஒன்று உண்டென்றால், அது, ‘கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டமை’தான்.
இதை முதன் முதலில் உருவாக்கியவர், அது தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான, உரிய ஆதாரத்தோடு வந்தால், நம்ம  செல்லம் நயன்தாராவிடமிருந்து உங்கள் இரு கன்னத்துக்கும் தலா ஒரு கிஸ் வாங்கித்தருவேன் என்று அம்பது ரூபா பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்திடுகிறேன்.

அதுசரி,ராசகொமாரர் ராசா வேஷம் கட்டியதை ஒட்டி ஞாபகத்துக்கு வந்த அந்தப்பழமொழி ஒருபக்கம் இருக்கட்டும். திருமதி ராஜகுமாரன், திருவாளர் தேவயானி அவர்கள் கலந்து கட்டி, நம் கண்ணைக் கட்டிய ‘திருமதி தமிழ்’ படப் பஞ்சாயத்துக்கு வருவோம்.
நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப் படத்தைப் போட்டார்கள். எமன் எருமையைக் கிளப்ப தாமதமானதை ஒட்டி, படம் திரையிடலும் கொஞ்சம் தாமதமாகிக்கொண்டிருக்க, லைட் பிங்க் கலர் ஃபுல் ஹாண்ட் சர்ட்டும், கருப்பு பேண்டுமாய் ஒரு பெண் பிரஸ் ஷோவுக்குள் நுழைய ‘ஹை ஏதோ ஒரு சூப்பர் ஃபிகர், புதுசா ஒரு பத்திரிகையிலருந்து வந்திருக்கு பாஸ்’ என்று கொஞ்சம் சவுண்டாகவே கமெண்ட் அடித்து விட்டேன். அந்த ஃபிகர் முன் வரிசையிலிருந்த ஒரு சிலரை நலம் விசாரித்து விட்டு, எங்கள் வரிசையை நெருங்கிய போது, ‘அட தேவயானி’.
’எப்படா மாட்டுவான்’ என்று தவம் கிடக்கும் ஒரு சில நண்பர்கள் என்னை,..’ங்கொய்யால பாட்டிக்கும், பார்ட்டிக்கும் கூட வித்தியாசம் தெரியாத கபோதியா நீ?’ என்று  கேவலமாக திரும்பிப் பார்க்க,  ஒரு சில நொடிகளுக்கு, சீட்டுக்கு அடியில் குனிந்து, கீழே விழாத ஒன்றைத் தேடவேண்டியாதாயிற்று. [ஆனா, வாலிப வயசைத் தாண்டிட்டாலும், தேவயானின்னா உயிரை விடுறதுக்கு இன்னைக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யிது பாஸ்’ என்று மைண்ட் வாய்ஸில் தோன்றியதை, அதே மைண்டுக்குள் மண் தோண்டிப் புதைத்தேன்].
சரியாக மூன்று மணிக்குத் துவங்கவேண்டிய படம் 3.55 க்கு துவங்கியதால்’ சென்சார் சர்டிபிகேட் காட்டப்படுவதற்கு முன்பே, சில குறட்டைச் சத்தங்களை கேட்க நேர்ந்தது . வெயிலின் அருமை பிரசாத் லேப் ஏ.சி.யில் தெரியும்.
படத்தின் நீளம் 148 நிமிடங்கள்.
நம்மில் அநேகர் பொழைப்பதற்காக சென்னை வந்திருக்கும் ஜீவராசிகள். ஆனால் ராஜகும்மாளனோ, கதைப்படி, சாவதற்கென்றே சென்னை வந்திருக்கிறார். அப்படி வந்தவர்,காஸ்ட்யூம்களின் நிறத்துக்கு ஏற்றபடி, ஈஸ்ட்மென் கலர்களில் தன் உதட்டில் லிப்ஸ்டிக் பூச ஆரம்பித்ததில் துவங்கி,  என்னென்ன விதங்களில் எத்தனை பேரைச் சாகடிக்க முடியுமோ அப்பெடியெல்லாம் சாகடிப்பதுதான் ‘திருமதி தமிழ்’ன் இரு வரிக் கழுதை ஸாரி இருவரிக் கதை.
ஒரே ப்ரேமில் ஏழெட்டு ரவுசுகுமாரன்கள் தோன்றி, ஆர்கெஸ்ட்ராவில் உள்ள அனைத்து இன்ஸ்ட்ருமெண்ட்களையும் வாசித்து, காதலை யாசிப்பது, ஒரிஜினல் மனைவி தேவயானி, சினிமா காதலி கீர்த்தி பாவ்லா இருவருடனும் கொஞ்சிக்குலாவும் டூயட்கள், திகுடுமுகுடான வில்லன்களை வெறும் கையால் அடித்து விளாசுவது, ரேப்பு சீன்களை விட கேவலமாக, ரோப்பு கட்டி இவர் அந்தரத்தில் அட்டகாசம் செய்வது என்று இந்தியன் பீனல் கோட்-ல் எத்தனை செக்‌ஷன்கள் இருக்கின்றனவோ அத்தனையிலும் வழக்குப் போடும் அளவுக்கு அட்ராசிட்டிகள் புரிகிறார் ராஜகொமாரன்.
கர்ப்பிணிப் பெண்கள், திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவ,மாணவிகள்,பெரியவர்கள், குழந்தைகள், நகரத்தவர், கிராமத்தவர், நோயுற்றிருப்போர், உடல்நலமுடன் இருப்போர்,… அதாவது சுருக்கமாக சொல்வதென்றால் மனித ஜீவராசிகள் யாரும் பார்க்கக்கூடாத காலியம் இது.
படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் தனது மனைவி தேவயானியை மனதில் வைத்து ’இந்தியாவில் எத்தனையோ பொண்ணுங்க, விருப்பமில்லாத புருஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, தற்கொலை மாதிரி வாழ்க்கையை வாழ்றாங்க’ என்கிற கருத்தை, படம் நெடுக,  அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது.
மற்றபடி, இதற்கு மேலும், இதைப்பற்றி விலாவாரியாக விமர்சித்துக்கொண்டிருப்பது, வனக்கொரங்கை பிடித்து வந்து, அதன் வறண்ட தலையில் பேன் பார்ப்பதற்கு இணையானது.
ஆதலினால் மற்ற மனித இனங்கள் ஒதுங்கிக்கொள்ள, ’வாழ்ந்து இனி என்ன ஆகப்போகிறது,.. செத்துத் தொலைக்கலாம்’ என்று தற்கொலை முடிவில் தீவிரமாக இருப்பவர்கள், இதைப் படித்த ஓரிரு மணிநேரத்திற்குள் தியேட்டர்களுக்கு வேகவேகமாக ஏகும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு பிறாண்டல் குறிப்பு:
ஏற்கனவே தந்த டுபாக்கூர் படங்களையும் தாண்டி, ராஜகொமாரன், அவரே கீரோவாக நடித்து மேலும் ஒரு படம் இயக்கமுடிந்ததென்றால், அதற்கு முன்னூறு சதவிகிதம் காரணம், அவரது நடிகை மனைவி தேவயானி என்பதை எல்.கே.ஜி. குட்டீஸ்களும் அறியும். இதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும், தியேட்டரில் முதல் நாள் காட்சிகளில் ஆபரேட்டர் தவிர்த்து யாரையும் காணமுடியாமையும், ராஜகுமாரனை என்னவாக ஆக்கிவிட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன சம்பவம் கேளுங்கள்.
பிரசாத் லேப்பில் படம் முடிந்ததும், ஒரு சில பத்திரிகையாளர்கள் தேவயானியை கையைப்பிடித்து வாழ்த்திக்கொண்டிருக்க, ராஜகொமாரனை நெருங்கிய, ஒரு மூத்த பத்திரிகையாளர், ‘லெங்க்த் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. கொஞ்சம் குறைச்சா நல்லாருக்கும்’ என்றார்.
உடனே ராஜகொமாருக்கு பொத்துக்கொண்டு வந்தது, ‘படத்தின் நீளத்தைக் குறைக்கச்சொல்றதுக்கு நீ யாருய்யா’ என்றபடி அவரை நோக்கிக் குரைக்க ஆரம்பித்த ராஜகொமாரன், ஆணவத்தின் உச்சியில் உதிர்த்த வார்த்தைகள் இவை, ‘ என் படத்தை விமர்சிக்கிற தகுதி எவனுக்கும் கிடையாது. அப்படி விமர்சிக்கனும்னு நினைக்கிறவன், நான் விக்ரமன்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பாத்த மாதிரி, பத்து படத்துல அசிஸ்டெண்டா வேலை பாத்திருக்கனும். அடுத்து பத்து படம் டைரக்ட் பண்ணியிருக்கனும். மத்த எவனுக்கும் என் படத்தை விமர்சனம் பண்ற அருகதை கிடையாது. [ இந்த மாதிரி பத்துப் படம் டைரக்ட் பண்றதுக்குப் பதிலா, அம்மா ஷூட்டிங் போன உடனே வீட்ல இருக்க பத்து பாத்திரங்களை எடுத்து, பத்துப்பாத்திரம் கழுவி பொழைக்கலாம் பாஸ்.]
‘அட கூறுகெட்ட குக்கரே, பத்து படத்துல  அசிஸ்டெண்டா வேலை பாத்திருந்தா இந்த மாதிரி கன்றாவி கழிசடையெல்லாம் பாத்துத் தொலையனும்னு பத்திரிகையாளர்களுக்கு தலைவிதியா? மீறியும் அப்பிடித்தான்னா, அது கூட தெரியாம, என்ன ……த்துக்கு பிரஸ் ஷோல்லாம் போடுறீங்க பிரதர்?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.