இந்தியாவிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அதிகமுள்ள மாநிலமான பீகாரில் ஒரு கிராமம் இருக்கிறது. இங்கு வாரத்துக்கு ஒரு முறை சந்தை கூடுகிறது. சந்தையில் என்ன விற்பார்கள்? ஆடு, மாடு, காய்கறிகள், தட்டுமுட்டு சாமான்கள், இத்தோடு பெண்குழந்தைகளும் விற்கப்படுகின்றன. விற்பவர்கள் வேறுயாருமல்ல. சாட்சாத் அக்குழந்தைகளின் பெற்றோர்களே.
நம்பமுடியாமலிருந்தாலும் இதுதான் உண்மை. ஏன் பெண்குழந்தைகளை மட்டும் வந்து விற்கிறார்கள்? அப்படி விற்கப்பட்ட குழந்தைகள் யாரால் வாங்கப்படுகின்றன? அக்குழந்தைகளின் எதிர்காலம் என்ன ? இந்த விஷயத்தை பத்திரிக்கையில் படித்ததும் எனக்கு எழுந்த கேள்விகளே இப்படத்தின் கதைக் கரு என்கிறார் படத்தின் இயக்குனர் ஆச்சார்யா ரவி. இவர் பரதேசி பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
இந்த கிராமத்தில் போய் இவர் நேரில் பார்த்ததையும், அங்கே நடந்தவற்றைக் கேட்டதையும் வைத்து திரைக்கதை எழுத அதற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார். விஜய்ராம், விக்னேஷ், ரோஷன், தாஷா போன்ற நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் பெயர் ‘என்னதான் பேசுவதோ’. படத்திற்கு இசையமைப்பவர் கும்கி இமான்.
இந்த அவலமான விஷயத்தை பெண் குழந்தைகளை விற்கும் அதே கிராமத்திலேயே போய் நேரடியாகப் படமாக்கிவிட்டு வந்திருக்கிறார் ரவி. ரிச் இந்தியா என்று வெட்கமில்லாமல் பேசித்திரியும் பல மேல்தட்டு இந்தியர்களின் முகத்தில் இந்த 21ம் நூற்றாண்டிலும் நடக்கும் இந்த அவல நிஜத்தை அறையும் அவருடைய இந்த முயற்சி வெற்றியடைய ஹலோதமிழ்சினிமாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.