சமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr) கலக்கியிருக்கும் 3ஆவது படம் இது. அயர்ன் மேன் என்பது மார்வல் காமிக்ஸ் புத்தகத்தின் ஒரு கற்பனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். கதைப்படி ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்கிற அமெரிக்க ஆயுதம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முதலாளி மற்றும் ஆராய்ச்சியாளர் டோனி ஸ்டார்க்.
அயர்ன் மேனின் முதலாவது மற்றும் இரண்டாவது பாகங்களில் ஸ்டார்க் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கிருக்கும் அமெரிக்கப் படைகளில் தனது நண்பரான கமாண்டெர் ஒருவருக்கு ஜைக்கோ ஏவுகணைகளைப் பற்றி விளக்கம் தரச் சென்றிருக்கும் போது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவர்களின் பிடியில் அவர்களுக்கு ஏவுகணை செய்து தரும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறான். ஆனால் அவன் ரகசியமாக ஒரு தப்பிக்கும் இரும்புக் கவசத்தை செய்ய முற்படுகிறான் ஸ்டார்க். அதுதான் அயர்ன் மேன். அதீத சக்திகளடங்கிய அந்தக் கவசத்தை அணிந்து விண்ணில் பறந்து பல சாகசங்கள் புரிந்து எதிரிகளை வீழ்த்துவான் ஸ்டார்க். யார் இந்த அயர்ன் மேன் என்று உலகமே வியக்கும் போது அது தானே என்று வெளிப்படுத்துவான் ஸ்டார்க்.
இந்த மூன்றாவது பாகத்தில் அமெரிக்காவினுள் புதியதொரு வெப்ப உயிரியல் ஆயுதம் கொண்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடுக்கும் மண்டாரின் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாதியின் தொல்லைக்கு பதிலடி கொடுக்க விளைகிறான் ஸ்டார்க். ஆனால் அவனுடைய மொத்த ஆராய்ச்சிக் கூடத்தையும் அவனது அயர்ன் மேனையும் அழிக்கும் எதிரிகள் அவனையும் துரத்துகின்றனர். ஜனாதிபதியையே கடத்திவிடுகின்றனர். கடைசியில் அவனுக்கும் இன்னொரு உயிரியல் தொழில்நுட்ப கம்பெனியின் முதலாளிக்குமிடையே நடக்கும் போட்டியில் ஸ்டார் புதிய எதிரிகளை அயர்ன் மேனின் துணை கொண்டு வீழ்த்தினானா என்பது தான் கதை.
படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. ராபர்ட் டௌனி ஜூனியர் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். அவரது காதலியாக வருகிறார் ஜின்னத் பால்ட்ரோ(Gwyneth Paltrow). காமெடி வில்லனாக பென் கிங்ஸ்லீயும், சீரியஸ் வில்லனாக கய் பியர்ஸூம் நடித்துள்ளனர். திரைக்கதை மூவருடன் சேர்ந்து எழுதி இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக்(Shane Black).. படம் முழுவதும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
தியேட்டரில் இதைப் பார்த்தபோது அயர்ன் மேன் உடையின் பாகங்கள் பறந்து வந்து ஸ்டார்க்கின் உடலில் ஒட்டிக்கொள்ளும் காட்சிகளில் ஆடியன்ஸின் கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஸ்பெஷல் எபக்ட்கள் படத்தின் மிகப் பெரும் பலம். அயர்ன் மேன் நிஜமாகவே இருப்பதைப் போலவே நம்மை நம்பவைத்து விடுகிறார்கள். ஸ்பைடர் மேன் போலல்லாது மக்களுடன் சர்வ சாதாரணமாக நெருங்கிப் பழகுகிறான். ஆட்டோகிராப் போடுகிறான் இந்த அயர்ன் மேன். நடுவில் அயர்ன் மேனா ? அதற்குள்ளிருக்கும் ஸ்டார்க்கா ? யார் முக்கியம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அயர்ன் மேனாய் இல்லாமல் போக நேரிடும் நாட்களில் அதன் விடையை கண்டடைகிறான் ஸ்டார்க். ஸ்டார்க்குக்கு உதவி செய்யும் சிறுவனுக்கும் அவனுக்குமான உரையாடல்கள் சுவராசியமானவை. மொத்தத்தில் இந்த 3-டி அயர்ன் மேன் 3 நிச்சயமான வெற்றிப் படம். கண்டிப்பாகப் பாருங்கள்.
இனி சாதாரண ஒரு ஆக்ஷன் படமாகக் களமிறங்கியிருக்கும் அயர்ன் மேனின் உள்ளே பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் விதைகளைப் பார்க்கலாம்.
அயர்ன் மேனின் கதாநாயகன் வைத்திருக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்காவுக்கு ஆயுதம் செய்து தரும் நிறுவனம். எனவே அதன் முதலாளியான ஸ்டார்க்; நல்லவர், வல்லவர், நாட்டின் மேல் பற்று கொண்டவர் மற்றும் அறிவாளி. ஒரு நாட்டின் ஆயுதங்கள் தேசிய பாதுகாப்பு ரகசியமானவை. அந்நாட்டின் தன்மானத்தை எதிரி நாட்டுக்கு உணர்த்த பயன்படுபவை. அதைத் தயாரிப்பது ஒரு தனியார் நிறுவனம்(?). தனியார் நிறுவனம் நாட்டின் ரகசியத்தைப் பாதுகாக்கிறது. எப்புடீ?
இது ஏற்கனவே அமெரிக்கா நடைமுறைப் படுத்தியிருக்கும் விஷயம். அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்புக்களில் பெரும்பாலானவை லாக்ஹீட் மார்ட்டின் போன்ற தனியார் கம்பெனிகளின் வசமே விடப்படுகின்றன. அதாவது தனியார் கம்பெனி சொல்லும் விலையில் மக்கள் வரிப்பணத்தில் ஆயுதங்கள் அரசால் கொள்முதல் செய்யப்படும். அது நாட்டின் பாதுகாப்புச் செலவில் சேர்க்கப்படும். பல பில்லியன் டாலர்கள் வருமானம் ஆயுதக் கம்பெனிக்கு; செலவுக் கணக்கோ நாட்டுக்கு. அமெரிக்காவில் மட்டுமல்ல நம்ம இந்தியாவிலும் இந்த தனியார் ராணுவ பிஸ்னெஸ் கொடிகட்டிப் பறக்கிறது.
ஈராக்கின் மீது என்ன எளவுக்கென்று தெரியாமலேயே தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்காவின் படைகள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், போட்ட குண்டுகள், எறிந்த ஏவுகணைகளின் வழிச் செலவுக் கணக்கு 100 பில்லியன் டாலர்கள். அது அமெரிக்க மக்களின் வரிப் பணம்(பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா என்கிற கூட்டாளிகள் வேறு). ஆயுதங்கள் தயார் செய்தது ஜனாதிபதி மற்றும் பெரும் முதலாளிகளின் சார்பான தனியார் ஆயுதக் கம்பெனிகள். ஆயுதங்களை விற்ற வகையில் அவர்களுக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் லாபம். ஈராக்கில் 3 லட்சம் குடும்பங்கள் நாசமாய்ப் போக அங்கிருந்த எண்ணெய் வயல்களை அமெரிக்க தனியார் எண்ணெய் கம்பெனிகள் வளைத்துப் போட்டதில் இன்னும் பல நூறு பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு லாபம்.
இப்படி லாபங்களை தனியார் கம்பெனிகள் அடித்துக் கொள்ளவும் நஷ்டங்களையும், குண்டுகளையும் மக்கள் தலையில் போடவும் செய்யப்படும் ஏற்பாடு தான் இந்தத் தனியார் ஆயுதக் கம்பெனிகள். இதை நியாயப்படுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறார் நம் டோனி ஸ்டார்க். இவர் ஆயுதம் தயாரிப்பதோ அமெரிக்காவில் அதைப் போய் போடுவதோ ஆப்கானிஸ்தானில். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்னய்யா முடிச்சென்று தியேட்டரில் கைதட்டிய யாருக்கும் உறைக்கவேயில்லை.
இதில் காமெடி வில்லனாக காட்டப்படும் பென்கிங்ஸ்லியின் தோற்றமும், அமைப்பும் நடவடிக்கைகளும் அப்படியே ஓசாமா பின்லேடனை ஞாபகப்படுத்துகின்றன. இது மறைமுகமாக அமெரிக்காவின் தயாரிப்புதான் ஒசாமா பின்லேடன் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம். படம் அதை நகைச்சுவையாகச் செய்கிறது. அதாவது ஒசாமா சீரியஸ் அல்ல. காமெடி பீஸ்.
இதில் அமெரிக்காவின் கனவு ராணுவ வீரன் கதையும் இருக்கிறது. அமெரிக்கா இப்படி வேற்று நாடுகளில் போய் அடாவடித்தனம் பண்ண வேண்டுமென்றால் அதற்கு அமெரிக்காவில் வாழும் ஒரு சாதாரண மனிதனை எப்படி போர்வீரனாக அனுப்புவது? அவனுக்குள் எழும் கேள்விகள்? குழப்பங்கள். நாட்டுக்காக போர்புரிந்தால் சரி. ஏதோ ஒரு நாட்டில் நின்று யாரையோ எதிரியாக்கி, யாரையோ பாதுகாப்பது ஏன் என்கிற கேள்விகள் அவர்களில் பலருக்கு எழுகிறது. “தாய்நாட்டைக் காக்க எழு ! !” என்கிற கனல் கக்கும் வசனங்கள் எடுபடுவதில்லை. ஈராக்கில் போர்புரிய போர்முடிந்து இத்தனை வருடங்களாகவும் இன்னும் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரில் பலர் மனநிலை பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது அமெரிக்க ராணுவம். இவர்களில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்க ராணுவத்தில் 2012ல் மட்டும் 348 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஈராக் சென்று திரும்பும் போர்வீரர்கள் பலருக்கு பிடிஎஸ்டி(PTSD) எனப்படும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வு தான் அயர்ன் மேன். அயர்ன் மேன் ஒரு வெறும் இரும்புக் கவசம் அவன் அமெரிக்காவில் இருந்து வீடியோ கேம் மாதிரி ஒரு வீரனால் கண்ட்ரோல் செய்யப்படுவான். அவன் தீவிரவாதிகளை தேடிப் போவான். மெஷின் கன்னால் எதிரிகளைத் துளைப்பான். ஏவுகணைகளை கையாலேயே ஏவுவான். பயங்கரவாதிகளைப் பந்தாடுவான். அபலைகளை காப்பான். (என்ன ஒரு சிறு பிரச்சனை என்றால் அவனால் ஜாலியாக ‘ரேப்’ செய்யமுடியாது). அயர்ன் மேன் செய்யும் சாகசங்கள் நாளைய அமெரிக்காவின் தொழில்நுட்பம் நிரம்பிய சர்வதேசப் போர்வீரன் பற்றிய கனவுகளேயன்றி வேறில்லை. நம்மைப் போன்ற மூன்றாம் உலகநாட்டு அப்பாவி ரசிகர்களோ அதைப் பார்த்து கை தட்டுபவர்களேயன்றி வேறில்லை.
அமெரிக்காவின் பொழுதுபோக்கைக் கூட நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருப்பதை இப்படம் உறுதி செய்கிறது. மற்றபடி இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் படம் பார்க்க விரும்பினால் சத்யம் தியேட்டரில் சென்று பாருங்கள். ஏ.சி. நன்கு குளுகுளுவென இருக்கும். 40 ரூபாய்க்கு ஆறிப்போன பாப்கார்ன் இத்தினியூண்டு கிடைக்கும். என்ஜாய் பண்ணலாம்.
–அம்பேதன் (http://www.ambedhan.blogspot.in)