தனுஷ், பார்வதி மேனன், அப்புக்குட்டி போன்றோர் நடித்திருக்கும் படம் மரியான். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.‘தாய் மண்ணே வணக்கம்’ என்கிற ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடலின் முடிவில் டைரக்ஷன் பரத்பாலா என்று வருமே அந்த பரத்பாலாதான் இந்தப் படத்தின் இயக்குனர். படத்தின் கதையைப் பற்றி விசாரித்ததில் படம் ஆப்பிரிக்காவில் லோல்படும் ஒரு தமிழ் இளைஞனைப் பற்றிய கதை. தனுஷை ஹீரோவாகப் போட்டதால் பக்கா கமர்ஷியல் படம் என்று எதிர்பார்க்கலாம்.
ரஹ்மான் இப்படத்திற்கு ஒரு ஆல்பத்திற்கு இசையமைக்கும் நேர்த்தியோடு இசையமைத்திருக்கிறார். மரியான் என்றால் மரிக்காதவன் அதாவது மரணமில்லாதவன் என்று அர்த்தமாம்.
இப்படத்தில் ரஹ்மானின் இசையில் முதன்முதலாக யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். ரஹ்மான் யுவனை அழைத்து பாடவைத்திருப்பது தமிழில் ராஜா கட்சி, ரஹ்மான் கட்சி என்று மல்லுக்கு நிற்பவர்களை யோசிக்க வைப்பதற்கன்றி வேறில்லை மக்களே.
இன்னும் கொஞ்ச நேரம். விஜய் பிரகாஷ், ஸ்வேதா மேனன். பாடல் – கபிலன், ஏ.ஆர்.ரஹ்மான்.
இருவர் படத்தில் பாடல்களில் பழைய பாணி இசைக்கென்று ஹார்மோனியம் கடம் போன்ற பழந்தமிழ் இசைக்கருவிகளை பயன்படுத்தியது போல் இப்பாடலும் இருக்கின்றது. ஸ்வேதா மேனன் அனுராதா ஸ்ரீராமின் அடுத்த வாரிசு போலத் தெரிகிறார்.
மெலடியான டூயட். ஹிட்டாகும் பாடல்.
நெஞ்சே எழு. ஏ.ஆர்.ரஹ்மான். பாடல் – குட்டி ரேவதி, ஏ.ஆர்.ரஹ்மான்
காதல் என்றும் அழிவதில்லை என்று காதலின் மகத்துவத்தைப் போற்றி பாடும் பாடல். குட்டி ரேவதியின் முதல் சினிமா பாடல் வரிகள் இவைதானாம். பெண் கவிஞர்களில் தாமரைக்குப் பின் தமிழுக்கு ஒரு இனிய அறிமுகமாக குட்டி ரேவதி வருவார் என நம்பலாம்.
ரஹ்மான் இதை ஒரு தேசபக்தி எழுச்சிப் பாடலின் மெட்டில் பாடியுள்ளார். பாடலில் இடையே வரும் ஒரு அமானுஷ்ய ஒலி ஒரு ஜப்பானிய பேய்ப் படத்தில்(The Grudge) பேய் வரும்போது வரும் கதிகலக்கும் ஒரு ஒலி. அதைப் பயன்படுத்தியது போலவே தெரிகிறது. அது பாடலின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகிறது. இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல் இது.
எங்க போன ராசா : சக்திஸ்ரீ கோபாலன். – பாடல் குட்டி ரேவதி, ஏ.ஆர்.ரஹ்மான்
நெஞ்சுக்குள்ளே என்கிற கடல் படப் பாடலைப் பாடிய அதே சக்திஸ்ரீ கோபாலன் தான். நல்ல குரல் வளம். நெஞ்சுக்குள்ளே பாடலை விட இன்னும் மெதுவான பாடல். கிடார் மட்டுமே துணை கொண்டு அருமையான மெலடியாக மனத்தை அள்ளுகிறார் சக்திஸ்ரீ.
நேற்று அவள். விஜய் ப்ரகாஷ், சின்மயி. பாடல் – வாலி.
விஜய் பிரகாஷும், சின்மயியும் பாடியுள்ள டூயட். வாலியின் வரிகள் ஓ.கே. பாடலும் ஓ.கே.
சோனாப்பரியா. ஜாவேத் அலி, ஹரி சரண், நாகேஷ் அஸிஸ். பாடல் – வாலி. ராப் – சோபியா அஷ்ரப்.
இது ஒரு குரூப் டான்ஸ் பாடல். வாலி புதிதாக சோனாப்பரியா என்கிற வார்த்தையைச் சேர்த்துள்ளார். படத்தில் வரும் ஒரு கேரக்டராக இருக்கலாம். மெட்டுக்கேற்றபடி வரிகளை சரியாக பிட் செய்துள்ளார். ஜாவேத் அலியின் குரல் கணீரென்று ஒலிக்கிறது. ஹிட்டாகும் பாடல்.
ஐ.லவ்.ஆப்ரிக்கா – ஏ.ஆர்.ரஹ்மான், ப்ளாஸீ – ப்ளாஸீ, ப்ரியன் காப்வே.
ஆப்பிரிக்கா நாட்டு ரெகே பாடல்களின் சாயலில் ஏ.ஆர்.ரஹ்மான் முயன்றிருக்கிறார். தீம் மியூசிக்காக இருக்கலாம். ஏனெனில் படத்தின் முக்கிய பகுதி ஆப்பிரிக்காவின் சோமாலியாவில் நடப்பது போல் வருகிறதாம். ஆங்கில வரிகளை எழுதியிருக்கும் இரண்டுபேரின் பெயர்களைப் போலவே பாடல் வரிகளும் எனக்குப் புரியவில்லை. நல்லதொரு ரெகே.
கடல் ராசா நான் – யுவன் சங்கர் ராஜா – தனுஷ்.
தமிழ்நாட்டு ரெகே போல் ஆரம்பிக்கும் இது குழுப் பாடல். அநேகமாக மீனவ ஹீரோ மரியானின் அறிமுகப் பாடலாக இருக்கலாம். மரியான் தனுஷே பாடலை விசேஷமாக எழுதியிருக்கிறார். கொம்பே சுரா, கடல் ராசா என்று மரியானின் மீனவ வரிகள் ஓ.கே.. யுவன் சங்கர் ரஹ்மான் ஸ்டைல் டப்பாங்குத்தை ஜாலியாகப் பாடியிருக்கிறார். ஹிட் ரகம்.
மொத்தத்தில் ரஹ்மானின் மரியான் கடல் சம்பந்தப்பட்ட அவரது முந்தைய படமான் கடல் படத்தின் தொடர்ச்சியான ஆல்பம் போலவே தோன்றுகிறது. படம் ஹிட்டானால் பாடல்கள் எல்லாம் பெரும் ஹிட்டாகும். இல்லாவிட்டால் மூன்று பாடல்கள் மட்டும் எப்போதும் கேட்க முடிகிற பாடல்கள் வரிசையில் சேரும்.
–மருதுபாண்டி.