இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்’ நான்தான்டா ‘திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஹோட்டல் தாஜ்ல் நடந்தது. மத்தியானம் நடந்த இந்நிகழ்வில் ராம்கோபால் வர்மா, படத்தின் நாயகன் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் அப்புறம் புதுமுக நாயகி போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.
‘சமீப காலங்களில் சட்டம் ஒழுங்கை கட்டுபடுத்துவோரின் சீரிய முயற்சியையும் தாண்டி குற்றங்கள் பெருகி வருவதன் பிண்ணனி என்னவென்றால், பொருளாதார சமூக ஏற்ற தாழ்வு தான். இந்த குற்ற வரிசை அமைப்புக்கு முடிவில்லை பச்சோந்தி போல் நிறம் மாறி வெவ்வேறு ரூபங்களில் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும் . இன்றைய சமுதாயத்தின்
பிரதிநிதியான நாயகன் ‘ நான் தான்டா ‘ என்று தன்னை முன்னிலைபடுத்தி பிரகடனபடுத்தும் குணத்தை வெளிபடுத்துவதுதான் இந்த தலைப்பு என தலைப்புக்கான காரணத்தை கூறும்போது ராம் கோபால் வர்மாவின் குரலில் ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர் ‘ உதயம்’ படத்தை அறிமுகபடுத்திய போது இருந்த நம்பிக்கை தெரிந்தது.
இன்று ஒரு குற்றம் செய்யும் முன் அதுபற்றி போதுமான அளவு தகவல்களை சேகரித்து, ஏற்கனவே தவறாய்ப் போனவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு மிக நவீன உபகரணங்களின் உதவியோடு மிகத் தெளிவாய் குற்றங்கள் செய்ய முடியும். அப்படி ஒருவன் நினைத்துச் செயல்படும் போது சட்டத்தையும், சமூகத்தையும் எவ்வாறு அவன் பாதிக்கிறான் என்பதைப் பற்றிய படம் இது.
ராம்கோபால் வர்மாவிடம் ‘நீங்கள் ஏன் க்ரைம் சப்ஜெக்டகளையே தேர்ந்தெடுக்கிறீர்கள்’ என்று கேட்ட போது ‘ஒரு வேளை எனக்குள்ளிருக்கும் வன்முறை மனப்பான்மை தான் எனது படங்களாக வெளிப்படுகிறதோ என்று நினைக்கிறேன்’ என்று அவர் கூறியபோது அதில் நிஜம் தெரிந்தது. அதே சமயம் தெலுங்குப் பட டப்பிங்கான நான்தான்டாவை முதன் முதலில் தமிழில் எடுக்கிறேன் என்று சொல்லியதோடு மட்டுமல்ல, மதுரை, திருச்சி போன்ற இடங்களிலும் ஷூட் செய்தோம் என்று கூறிய போது அதில் பொய் தெரிந்தது.
ராம்கோபால் வர்மாவின் உதயம் மற்றும் இந்தியில் வந்த சத்யா ஆகிய படங்கள் இந்திய க்ரைம் வகைப் படங்களில் முக்கியமான படங்களாகக் கருதப்படுகின்றன. ராம்கோபால் வர்மாவாலேயே அப்படியொரு படத்தை இந்த ‘நான்தான்டா’வில் தரமுடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.