இந்தமுறை பவர்ஸ்டார் உள்ளே போன நேரம் சரியில்லையோ என்னவோ அவர் மேல் கேஸ் மேல் கேஸாக போட்டு அவரை உள்ளிருந்து வெளிவரவிடாமல் அமுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சதிகாரர்கள்(?). அவர் பாட்டுக்கு “உலகவாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கை தான்..” என்று ஜாலியாக காலாட்டிக் கொண்டு உள்ளே படுத்துக் கொண்டுவிட்டார். ஆனால் இரு படங்கள் இவரால் வெளிவராமல் போக அல்லது தள்ளிப் போக நாள்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
முதல்வர் நமது ஷங்கர். அவரது ‘ஐ’ படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தார். நடிப்புப் பகுதி முடிவடைந்து விட்டாலும் டப்பிங் இன்னும் முடியவில்லை. டப்பிங் தியேட்டரில் ‘பவர்’ கட். வேறு யாரையாவது விட்டு இவரைப் போல் பேசவைத்து விடலாம் என்று ஷங்கர் முயற்சிக்க, பவருடைய ‘சிம்மக் குரலை’ ‘இதுவரை யான் கேட்ட மொழியெங்கும் காணோம் இதை எப்படிப் பேச’ என்று முழிக்கிறார்களாம் மிமிக்ரிக்காரர்கள்.
அடுத்ததாக புழல் பக்கமே வெறுமனே பார்த்துக் கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்திருப்பவர் நம் நடுத்தெரு ராமநாராயணன். க.ல.தி.ஆசையா தந்த வெற்றி ஆசையில் ‘நீ சரக்கு நான் ஊறுகாய்’ என்று மற்றுமொரு படத்தை பவரை ஹீரோவாக வைத்து எடுத்துவிட்டார். படத்தின் பெயரைக் கேட்டு நிறையப் பேர் சரக்கடித்த ஜோரில் எகிறிக் குதிக்க ‘ஆர்யா-சூர்யா’ என்று பெயர் மாற்றி ஏப்ரலில் ரிலீஸ் என்று தயாராயிருந்தார். இன்னேரம் பார்த்து நடந்த பவரின் இந்த புழல் பிரவேசத்தால் தனது படம் விலை போகுமா போகாதா என்று கலக்கத்தில் இருக்கிறார் இராம.நாராயணன்.
விழுப்புரம், கடலூரையே 15 நாள் களேபரம் பண்ணின அய்யாவையே வெளியே விட்டுவிட்ட அம்மா அப்பிடி ஏதும் ‘வெட்டி’ வம்புதும்புக்குப் போகாத நம் பவரை கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விடுவித்தால் நல்லாயிருக்கும்.