கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்தும் வாய்ப்புக்கள் நழுவிப் போய் மனம் வெறுத்துப் போய் மதுரைக்கே போய் குடும்பத்தாரோடு நிம்மதியாய் இருந்த வடிவேலு தனது மகள் கல்யாணத்தைக் கூட சினிமா பிரபலங்கள் யாருமே இல்லாமல் நடத்தினார். கல்யாண மண்டபத்துக்காரர்களுக்கே அது வடிவேலு வீட்டுத் திருமணம் என்று வடிவேலுவை திருமண மேடையில்
பார்த்தபின்பு தான் தெரிந்ததாம்.
நடுவில் ஒருமுறை சிம்புதேவனுடன் இணைந்து இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தார். வேறு சில பிரச்சனைகளால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இதேபோல் பூபதி இயக்கும் ஒரு நகைச்சுவைப் படத்திலும் அவர் கழற்றி விடப்பட்டார். வெறுத்துப் போய் மீண்டும் ஊருக்கே போய்விட்டார். இப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த வடிவேலுவுக்கு விடிவேலாய் அமைந்தது தான் ‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ண தேவராயரும்’ என்கிற சரித்திர நகைச்சுவைப் படம். இதில் இரு வேடங்களில் நடித்து இம்சை அரசன் போலவே இம்சை பண்ணப் போகிறார் வடிவேலு.
இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் நடிகர் விஜயகாந்த்தின் கடைசிப் படமான விருத்தகிரியில் அவருக்கு ஜோடியாய் நடித்த மீனாட்சி தீக்ஷித். புது இயக்குனர் யுவராஜ் இயக்கும் கஜ புஜவின் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் மீண்டும் கேமரா முன் நின்று நீண்ட நாட்களுக்குப் பின் நடித்தார் வடிவேலு. இரண்டு வருட லாங் லீவ் அவரை நிரம்பவே மாற்றியிருக்கிறது. மீண்டும் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க ரெடியாகிவிட்டார் என்பது போல இருக்கிறது அவரது வருகை.
அரசியல் பள்ளத்துக்குள் சுருண்டு விழுந்த வைகைப் புயல் திரும்ப கிளம்பி வரட்டும். வாழ்த்துக்கள்.