விஜய்யின் ‘தலைவா’ இன்னும் ரிலீஸாவதற்குள் விஜய்யின் அடுத்த படமான ஜில்லா படத்தின் ஷூட்டிங் மதுரையில் திங்களன்று ஆரம்பித்திருக்கிறது. ‘தலைவா’வை விட அதிக எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது இந்தப் படம். புதுமுக இயக்குனர் ஆர்.ஜே.நேசன் இயக்க கணேஷ் ஒளிப்பதிவுகிறார்.
ஆரம்பகட்ட ஷூட்டிங்கில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படமாக்கப்படவில்லை. இந்த கட்டப் படப்பிடிப்பில் காஜல் அகர்வால் மற்றும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் முதல் வாரத்தில் படமாக்கப்படும் என்றார் இயக்குனர் நேசன்.
கதையின் முக்கியப் பகுதி மதுரையில் நடப்பது போல் இருப்பதால் மதுரையில் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற இருப்பதாகவும், இது தவிர சென்னை, ஆந்திராவிலும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன என்றும் தெரிவித்தார். இது போக பெல்ஜியம் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சில பாடல் காட்சிகளும் எடுக்கப்பட இருக்கின்றன (இருக்காதா பின்னே!).
இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் பூர்ணிமா பாக்யராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து நீண்ட நாட்கள் ஆகியிருந்தாலும் கதாபாத்திரம் அவருக்கு அப்படியே பொருத்தமாக இருப்பதாக நேசன் நினைத்ததால் அவரை விடாப்பிடியாக நடிக்க சம்மதிக்க வைத்தார் என்கிறார்கள்.
இப்படத்தில் விஜய் நீண்ட நாட்களுக்குப் பின் கிராமத்துக் கெட்டப்பில் நடிக்க இருக்கிறாராம். அப்பிடிப் போடு… போடு..போடு..