பரத்பாலா இயக்கத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கும் மரியான் ஆரம்பத்திலிருந்தே ஒரு வெளிநாட்டுப் படத்தைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறது. எந்தத் தமிழ்ப் படத்தையும் இயக்கியிராத பரத்பாலா என்கிற ‘கணபதி பரத்’ எப்படி திடீரென்று தனுஷ்ஷைப் பிடித்தார் ?
இந்தக் கேள்விக்கு விடை தேடிய போது கிடைத்த சில பதில்கள். தனுஷ் நாயகனாகவும் சலீம் குமார் முக்கிய பாத்திரத்திலும் நடிக்கும் மரியானை இயக்குகிறார் பரத்பாலா. 2011ல் தனுஷ் நாயகனாக நடித்த ஆடுகளம் ரிலீசானது. அதே நேரத்தில் மலையாளத்தில் ஆதாமிண்டே மகன் அபு என்கிற படமும் ரிலீசானது. அந்தப் படத்தில் வயதான ஹீரோ கேரக்டரில் நடித்திருந்தார் இதே சலீம் குமார்.
ஆடுகளமும், ஆதா.ம.அபுவும் தேசிய விருதுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இத்துடன் ஒரு வடஇந்தியப் படமும் போட்டியில் நின்றது. இந்த நேரத்தில் ஆடுகளம் மற்றும் ஆதா.ம.அபு இரண்டையும் தேசிய அளவில் சிறந்த படங்களாகத் சேர்த்து தேர்ந்தெடுத்தது விருது தேர்வுக் குழு. அந்தத் தேர்வுக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினர் நம் பரத்பாலா.
தேசியவிருது கிடைக்க பரிந்துரைத்ததற்காக பரத்பாலாவிடம் கடன்பட்ட தனுஷ்ஷூம், சலீம் குமாரும் பரத்பாலாவின் படத்தில் நடிக்க, தனுஷ்ஷின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பாளராக படம் ஸ்டார்ட் ஆக்ஷன் ஆகிவிட்டது. இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானைப் போடலாமே என்று எல்லோரும் அபிப்ராயப்பட ரஹ்மானோ ஆஸ்கார் சரியாக பேசிய பணம் தர இழுத்தடிப்பார் என்பதால் கொஞ்சம் யோசிக்க… பரத்பாலா ரஹ்மானைத் தொடர்புகொள்கிறார்.
பரத்பாலாவின் வந்தே மாதரம் ஆல்பம் மூலம் தான் ரஹ்மானுக்கு தேசிய அளவிலான அந்தஸ்து கிடைத்தது. அந்த நன்றியை மறக்காத ரஹ்மான் ஓ.கே. என்றுவிட மரியான் பாடிக்கொண்டே வந்துவிட்டான். இப்போது எல்லாம் முடியும் தருவாயில் நினைத்தது போலவே ஆஸ்கார் ரவி பட்ஜெட் எதிர்பார்த்ததை விட கூடிவிட்டதால் சம்பளத்தை குறைக்கும் படி தனுஷ்ஷையும், ரஹ்மானையும் கேட்க, அவர்கள் டென்ஷனாக, டப்பிங்கும், ரீரெக்கார்டிங்கும் இப்போ அம்போவென் நிற்கிறதாம்.
போகிற போக்கைப் பார்த்தால் மரியான் எப்போ வரின்னு ஞான் அறியான்.